கிழக்கு இலண்டனின் வால்தம் பாரஸ்ட் (Waltham Forest) நகரப் பகுதியில் உள்ள பல பாடசாலைகளில் தேசிய கல்விச் சங்கமான (NEU) ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக, பெற்றோர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகின்றன.
கடந்த வாரம் வால்தம்ஸ்டோ பகுதியில் அமைந்துள்ள South Grove ஆரம்பப் பாடசாலை, ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக முழுமையாக மூடப்பட்டிருந்தது. பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள கட்டமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பல ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
குறிப்பாக, சிறப்புத் தேவையுடைய (Special Educational Needs – SEN) குழந்தைகளுக்கான கல்வி ஆதரவு மற்றும் சேவைகள் குறைக்கப்படலாம் என்ற கவலை ஆசிரியர்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்களில் ஒரு பகுதியினர் தங்களது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து வால்தம்ஸ்டோ நகர சபை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
“ஆசிரியர்கள் தங்களின் வேலை மற்றும் பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக இவ்வாறு போராடுவது எளிதான முடிவு அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், அவர்கள் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே துணிச்சலுடன் குரல் கொடுக்கிறார்கள்,” என்று சில பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், இந்த தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதித்து வருவதாக மற்றொரு தரப்புப் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பா,க வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், பாடசாலைகள் அடிக்கடி மூடப்படுவதால், குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் வெளிப்பாடாக, அண்மையில் கனாட் (Connaught) பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களும் சில பெற்றோர்களும் இணைந்து வேலைநிறுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, மற்றுமொரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கல்வியாண்டில் மட்டும் வால்தம் பாரஸ்ட் பகுதியில் உள்ள 13 பாடசாலைகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என தேசிய கல்விச் சங்கத்தின் தகவலில் அறியமுடிகிறது. .
இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், “இலண்டனில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதும், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்திருப்பதும் காரணமாக பல குடும்பங்கள் நகரை விட்டு வெளியேறுகின்றன. இதனால் பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, கல்வி நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன,” என தெரிவித்துள்ளனர்.
இந்த சூழல், இலண்டனின் கல்வி அமைப்பில் உருவாகி வரும் நீண்டகால சவால்களை வெளிப்படுத்துவதாக கல்வி வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
