இருதய நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு பேருந்து இல்லாததன் காரணமாக பேருந்து நிலையத்தில் தனது தாய் மற்றும்
தந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்த 2 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சிறுமி தமது தந்தையுடன் முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதோடு, பின்னர் சிகிச்சைகளைப் பெற்று மீண்டும் வீடு திரும்பும் போதே இவ்வாறு பேருந்து இல்லாமல் பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மஹியங்கனை பகுதியில் 80 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
அதேபோல, மாதம்பே பிரதேசத்திலும் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த மாணவியின் உறவினர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், இச்சம்வத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு மாணவியின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் தாய் மற்றும் பாட்டிக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாங்குளம் பிரதேசத்தில் இரண்டு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.