March 24, 2023 3:48 am

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

(20) முதல் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை பணிக்கமர்த்துவதை மட்டுப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்தையும் தனியார் வாகனங்களையும் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல், அரச ஊழியர்களை பணிக்கமர்த்துவதை மட்டுப்படுத்துமாறு குறித்த சுற்றறிக்கையினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களின் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அத்தியாவசியமான குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கமர்த்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களின் வதிவிடங்களுக்கு அண்மித்த அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான வசதிகளை ஒழுங்குபடுத்திக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானத்தை அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், நிறுவன தலைவர்கள் மேற்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கமர்த்தும் போது, உரிய சுழற்சிமுறை திட்டமொன்று பின்பற்றப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யாரேனும் ஊழியருக்கான கடமை நாள் ஒதுக்கப்பட்டதன் பின்னர், குறித்த நாளில் அவர் சேவைக்கு சமூகமளிக்காவிடின், அன்றைய தினம் ஊழியரின் தனிப்பட்ட விடுமுறை நாளாகக் கருதப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒன்லைன் ஊடாகவும் அரச ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அரச ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் நாட்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை போக்குவரத்திற்கு பயன்படுத்திக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், அலுவலகங்களை அண்மித்த பகுதியில் வதியும் அல்லது தற்காலிகமாக தங்கும் அரச ஊழியர்கள் திணைக்கள வாகனங்களை பயன்படுத்த முடியும் எனவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதித்துறையில் கடமைபுரியும் ஊழியர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவினூடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்