சுதந்திர தினத்துக்கு முன் தமிழருக்குத் தீர்வு வேண்டும்! – சஜித் வலியுறுத்து

“எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு யதார்த்த ரீதியாக தீர்வு வழங்க ஜனாதிபதி முயற்சித்தால் அதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் (24) தெரிவித்தார்.

அதேவேளை, நடைமுறையிலுள்ள 13 ஆவது திருத்தத்துக்கமைய – ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிரும் நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி என்றுமே உறுதியாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையைச் சபைக்கு சமர்ப்பியுங்கள். அந்த உடன்படிக்கையின்றி குழு நிலை விவதாங்களை நடத்திப் பயனில்லை” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலை நடத்த மாட்டோம் என ஜனாதிபதி கூறியதில் எமக்கு ஆச்சரியமில்லை. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாமல் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு வந்து, முன்னாள் ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் பிரதமராகி, பின்னர் நாடாளுமன்ற பெரும்பான்மையின் விருப்பத்தின் பேரில் ஜனாதிபதியானவர் என்பதனால் அவருக்குத் தேர்தலொன்றின் பெறுமதி புரியவில்லை. மக்களின் வாக்குரிமை தொடர்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவரது பேச்சுக்கள் குறித்து நான் பொருட்படுத்தவில்லை.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானவர், 68 இலட்சம் வாக்குகளைப் பெற்று பிரதமரானவர், நிதி அமைச்சரானவர் உள்ளிட்டோர், திடீரென இருந்த இடத்தைக் கூட மறந்து வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது தேர்தலால் அன்றி மக்கள் போராட்டாத்தாலேயே. மக்களின் எழுச்சிமிகு போராட்டாத்தாலேயே அவர்கள் விரட்டப்பட்டனர். எனவே, தற்போதைய ஜனாதிபதியும் கூட இதனை மறந்துவிடக் கூடாது.

தேர்தலை நடத்த மாட்டோம் என ஜனாதிபதி கூறியதும் அதற்கு ஆதரவாக சபையில் இருந்த அடிமைகளின் ஒரு பகுதியினர் ஆரவாரம் செய்தனர். நாடாளுமன்றத்தில் சிலர் ஒரு அடிமைத்தனத்தில் இருந்து இன்னுமொரு அடிமைத்தனத்துக்கு மாறியுள்ளனர்.

ஜனாதிபதியின் உரைக்கு ஒரு சில அடிமைகள் ஆரவாரம் காட்டினாலும் நாட்டின் 220 இலட்சம் மக்கள் மிகவும் வருத்தம் கொண்டுள்ளனர். ஜனநாயகத்துக்கான மக்கள் சக்தி விரைவில் உருவாகும்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட நிலை முறையாக மறுநிலைப்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தைப் மதிப்பதாக கூறும் ஜனாதிபதி, நேற்றுக் கூறிய அந்தக் கருத்தை உடனடியாக நீக்கி தேர்தலை நடத்தி, நாடு மீண்டு வர சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி நன்றியுணர்வு அறிந்தவராக இருந்தால் போராட்டத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். போராட்டத்தினாலேயே அவர் ஜனாதிபதியானார். அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது கடந்த மே 9 ஆம் திகதி நடந்த தாக்குதலாலேயே ஆகும்.

எந்தவிதமான வன்முறைகளையும் நாம் அனுமதிப்பதில்லை. அவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வன்முறையும் மிலேச்சத்தனமுமின்றி இடம்பெற்ற போராட்டத்தை, அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களே வன்முறை ரீதியாக தாக்கினர்.

அதேபோல், அமைதியான பொதுமக்கள் போராட்டத்தை அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயன்றதால், எதிர்க்கட்சியாக அதற்கு எதிராக முன் நிற்கின்றோம். அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குகின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக மக்கள் எழுவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. அதேவேளை, பொய்ப் பிரசாரங்களால் எதிர்க்கட்சியை அழிக்க முடியாது” – என்றார்.

ஆசிரியர்