December 2, 2023 9:49 am

யாழில் தொழிற்சங்கங்கள் இணைந்து அரசுக்கு எதிராகப் போராட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்.) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியை (ஈ.ரி.எப்.) உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்குப் பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நண்பகல் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலான ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதியையும், நம்பிக்கை பொறுப்பு நிதியையும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்குப் பயன்படுத்த அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முனைவதன் மூலம் ஊழியர் சேமலாப, நம்பிக்கை பொறுப்பு நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த அரசு முயல்கின்றது என்றும், பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஊழியர் சேமலாப, நம்பிக்கை பொறுப்பு நிதியங்களின் கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது அனைத்து ஊழியர்களினதும் (ஊழியர் சேமலாப, நம்பிக்கை பொறுப்பு நிதியங்களின் அங்கத்தவர்களினதும்) சேமிப்புக்களில் இருந்தும் அரைவாசித்தொகை (50 வீதம்) எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லால் போகும் அபாயம் உள்ளது என்றும், இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசு முற்படுகின்றது என்றும், இதன் மூலம் ஊழியர் சேமலாப, நம்பிக்கை பொறுப்பு நிதியங்களின் அங்கத்தவர்களுக்கு நிதி ரீதியான உடனடிப் பாதிப்பும் நீண்ட காலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கபெறாத அபாய நிலையும் உள்ளது என்றும் போராட்டகாரர்கள் குற்றம் சாட்டினர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம், வடக்கு மாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம் ,வடக்கு மாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம், ஶ்ரீலங்கா தபால் தொலைதொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம், வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் ஆகிய 9 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்