ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை (27) பி.ப. 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
இலங்கையில் நடைபெற வேண்டிய இம்முறை ஆசிய கிண்ணப் போட்டிகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கமாக ஒருநாள் போட்டியாக நடைபெறும் ஆசிய கிண்ணம் வரும் ஒக்டோபரில் ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் ரி20 வடிவிலேயே நடைபெறுகிறது.
இதில் தசுன் சானக்க தலைமையில் களமிறங்கும் இலங்கை பொருத்தமான அணி ஒன்றுடனேயே போட்டிகளுக்கு தயாராகி உள்ளது. சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ ஆகிய வீரர்கள் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துகின்றனர்.
பந்துவீச்சில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர இல்லாதது இலங்கை அணிக்கு பின்னடைவாக இருந்தபோதும் இந்தியா மற்றும் பாகிஸ்தானும் இதே நெருக்கடியை சந்திப்பது போட்டியின் சமநிலைக்கு உதவும். இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஆகியோரும் உபாதையால் இந்தத் தொடரில் விளையாடவில்லை.
வனிந்து ஹசரங்க முதற்கொண்டு இலங்கை சுழற்பந்து வரிசை வலுவாக இருக்கும் நிலையில் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுக்கு சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன மற்றும் தசுன் ஷானக்கவின் பங்களிப்பு தீர்க்கமாக இருக்கும்.
மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் ஆரம்ப சுற்று ஏ மற்றும் பி என இரு குழுக்களில் நடைபெறும். ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் இடம்பெற்றிருப்பதோடு பி குழுவில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கான் அணிகள் உள்ளன.
தொடர்ந்து இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறும். எனவே ஆப்கானிஸ்தானுடனான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெல்வது கட்டாயமாக உள்ளது.
இந்தக் குழுவின் அடுத்த போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை எதிர் கொள்வதால் அந்தப் போட்டி ஒப்பீட்டளவில் சவாலானதாக இருக்கும். 2018 ஆசியக் கிண்ண போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கை அணி ஆப்கான் மற்றும் பங்களாதேஷிடம் தோற்று வெளியேறியமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஏ குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடும் பரபரப்பான போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெறவுள்ளது.
