செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கில் காணிக் கபளீகர வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை! – கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றம் விதித்தது

வடக்கில் காணிக் கபளீகர வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை! – கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றம் விதித்தது

2 minutes read

காணி நிர்ணயச் சட்டம் பிரிவு 4 இற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உரிய சான்றாதாரங்களுடன் உரிமை நிரூபிக்கப்படாத 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கிக் கையகப்படுத்தி, சுவீகரிப்பதற்கு வழிசெய்யும் விதத்தில் 28.03.2025 திகதியிடப்பட்டு வெளியான 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தல்படி காணிகளை நிரூபிப்பதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்து, அவற்றை அரசு சுவீகரிப்பதற்கான அதிகாரம் அந்த வர்த்தமானியின் கீழ் அரசுக்கு வருவதற்கு சுமார் பன்னிரண்டு மணி நேரமே இருக்கையில் – கடைசிக் கட்டத்தில் – இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் யஸந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை இன்று முற்பகல் பிறப்பித்தது.

மேற்படி வர்த்தமானியின் கீழ் காணி சுவீகரிப்பு அதிகாரம் இலங்கை அரசுக்கு இன்று நள்ளிரவுக்கு பின் வரவிருக்கையில் இந்த மனு இன்று காலை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையின் முடிவை அரசு தரப்பு கேட்டு, அறிந்து உயர்நீதிமன்றத்துக்குத் தெரிவிப்பதற்காக

வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதும் அமைச்சரவையின் முடிவு குறித்து நீதியரசர்கள் அரச தரப்பு சட்டத்தரணியிடம் விசாரித்தனர்.

மேற்படி வர்த்தமானியை கை வாங்குவதாக அமைச்சரவை முடிவு செய்திருக்கின்றது என்று அரசுத் தரப்பு தெரிவித்தது.

கைவாங்கும் வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியாகும் என்று நீதிமன்றம் வினவிய போது பெரும்பாலும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அது வெளியாகும் என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

அரசு தரப்பில் உறுதியான – தீர்க்கமான – மாறாத முடிவாக அதனை அரசு தரப்பு சட்டத்தரணிகள் உறுதிப்படுத்துவார்களா என உயர்நீதிமன்றம் விசாரித்த போது அதற்குத் தெளிவான பதில் அரசு தரப்பு சட்டத்தரணிகளால் முன்வைக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. தங்களுக்குக் கிடைத்த வழிகாட்டல் குறிப்பில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்று அரசு தரப்பில் கூறப்பட்டதனால், அந்தப் பதிலில் திருப்தி காணாத நீதியரசர்கள் வழக்கின் வாதத்தைத் தொடர்ந்து முன்வைக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி க.கனகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து கனகேஸ்வரன் தமது வாதத்தை முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்டு மேற்படி வர்த்தமானியின் நடைமுறையாக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஜூலை இரண்டாம் திகதிக்கு ஒத்திவைத்தது.

அடுத்த தவணை வழக்கு எடுக்கப்படும் போது மேற்படி வர்த்தமானி அறிவித்தல் விலக்கப்பட்டிருந்தால் அது பற்றிய புதிய வர்த்தமானி அறிவித்தலை மனுதாரருக்கும் நீதிமன்றத்துக்கும் சமர்ப்பிக்கும்படி அரசு தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த தவணை வழக்கு எடுக்கப்படும் சமயத்தில் மேற்படி சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் விலக்கப்பட்டு இருக்குமானால் வழக்கை அத்துடன் – அன்றைய தினத்துடன் – முடிவுக்கு கொண்டு வர உயர்நீதிமன்றம் தன்னுடைய இசைவைத் தெரிவித்திருந்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் மனுதாரர் சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான க.கனகேஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகளான பவானி பொண்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.