Quadrilateral Security Dialogue எனப்படும் குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு, இந்தியாவில் இன்று (25) நடைபெறுகிறது. இந்த மாநாடு, இந்தோ–பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சவால்கள், சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளை மையப்படுத்தி நடைபெறுவதால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தோ–பசுபிக் கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் இராணுவ ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தும் முயற்சியாகவும் இந்தக் கூட்டமைப்பு பார்க்கப்படுகிறது.
இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ஏற்கெனவே இந்தியா சென்றுள்ளார். அதேவேளை, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வாங்க் (Penny Wong) இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும், ஜப்பான் வெளிவிவகார அமைச்சரும் டெல்லி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தோ–பசுபிக் கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை, கடல்சார் ஒத்துழைப்பு, உலக அரசியல் சூழ்நிலை, மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாட்டை சீனாவும் தீவிரமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குவாட் அமைப்பின் நடவடிக்கைகள், பிராந்தியத்தில் தனது செல்வாக்குக்கு எதிரான முயற்சியாக சீனா கருதிவருவது குறிப்பிடத்தக்கது.
இதனுடன் இணைந்த வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான 17ஆவது வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டமும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வாங்க் பங்கேற்று இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.