ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கோச்சடையான்’ திரைப்படம், உலகம் முழுவதும் 3,000 திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை (மே 23) வெளியாகிறது.
ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை அவருடைய இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியிருக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஷோபனா, ருக்மணி, ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இதுவரை ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில், 3டியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற “பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’, “அயன்மேன் -2′, “ஹாரிபாட்டர்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தில் பணியாற்றியுள்ளனர். உலக அளவில் புகழ் வாய்ந்த பைன் உட் ஸ்டுடியோஸ், லண்டன் சென்ட்ராய்டு ஸ்டுடியோஸ் ஆகியவற்றில் தொழில்நுட்ப பணிகள் நடந்துள்ளன.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி, மராட்டி, பஞ்சாபி ஆகிய ஆறு மொழிகளில் கடந்த 9-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் படம் உருவாக்கப்பட்டிருப்பதால், பிரிண்ட் போடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கூறி பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இன்று வெளியீடு: இந்நிலையில் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் 3 ஆயிரம் திரையரங்குகளில் “கோச்சடையான்’ படம் வெளியாவதாக
படத்தை தயாரித்துள்ள ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகள் படம் வெளியாகிறது.