0
துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைந்துள்ள கத்தி படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனல் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி திரைப்படத்தை தயாரிப்பவர்களில் ஒருவரான லைகா மொபைல் அதிபர் சுபாஸ்கரனை ராஜபக்சேவின் கூட்டாளி என குற்றம்சாட்டி வருகின்றனர் இலங்கைத் தமிழர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்களும் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், கத்தி படத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி, சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களைச் அழைத்து, “லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என்ற தகவல், முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது” என்று மறுத்தார். அதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்தான் என்பதற்கான பல ஆதாரங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சிங்கள இனவெறியர்களின் பணத்தில், தயாராகும் கத்தி திரைப்படத்தை வெளியிடக் கூடாது” என்று மாணவர்களின் அமைப்பான முற்போக்கு மாணவர் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர் முன்னணியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக, திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினரையும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன் சுசீந்திரம் அடங்காத் தமிழன் இது பற்றி தமது முகநூல் பக்கத்தில்…. “தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாராகி இருக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்த உள்ளோம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாய் கத்தி படத்துக்கு எதிராக அனைத்து கல்லூரி மாணவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் மாணவர்கள் அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.