செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அரங்கு நிறைந்த காட்சி! சினம்கொள் படத்திற்கு பெருகும் ஆதரவு!

அரங்கு நிறைந்த காட்சி! சினம்கொள் படத்திற்கு பெருகும் ஆதரவு!

3 minutes read

நான் பார்த்த ‘சினங்கொள்’ Sinamkol

அண்மையில் இலண்டனில் சினம்கொள் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி இடம்பெற்றது. திரையரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம். திரைப்படத்தை பார்த்தவர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்து படத்தை பாராட்டினர். பா. நடேசன் என்பவர் படத்தை பார்த்துவிட்டு எழுதிய பதிவு இது.

நேற்று 20/07/19 சனிக்கிழமை லண்டன் Bolyan சினிமாவில் ரஞ்சித் இயக்கிய சினங்கொள் திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. கிட்டத்தட்ட 2மணி நேரம் கொண்ட இந்த திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சியாக அமைந்திருந்தது.

பல திரைப்படங்களை பாரத்திருந்தாலும் எதனை பற்றியும் நான் பொதுவெளியில் எழுதுவதில்லை. ஒரு திரை கதையாடல் தரும் உணர்வு விசித்திரமானது. அது எப்போதும் ஒரே உணர்வையும் , அனுபவத்தையும் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. அதே போல் ஒவ்வொருவருக்கும் திரைபடத்தை பார்க்கும் அனுபவம் வேறுபடுகிறது. சினங்கொள் திரைப்படத்தை பார்த்த பின்னர் அதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதனாலே இந்த பதிவு.

நான் இதுவரை பார்த்த ஈழ பிரச்சனையை மையம் கொண்ட அல்லது ஈழ சினிமாக்களில் ஜனரஞ்சக தன்மை / சினிமாத்தனம் (cinematic) கொண்ட திரைப்படம் ‘சினங்கொள்’ எனலாம். இன்றைய காலச்சூழலில் சாதாரண பார்வையாளர்கள் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் அதற்குரிய திரை மொழி அவசியமாகிறது. ஈழ திரைப்படங்கள் பிரச்சார நொடியும் , நாடகத்தன்மையும் அதிகமாக இருப்பதால் ஈழ தமிழர்களை தாண்டி சாதாரண திரை ரசிகர்களிடம் அவை சென்றடைவதில்லை என்ற குறை இருந்தது.

இல்லாவிட்டால் அவை திரைப்பட விருது வழங்கும் விழாக்களுக்காக எடுக்கப்படுபவையாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் மசாலா படம் எடுக்கிறோம் என்ற பெயரில் கோடம்பாக்க குப்பைகள் கொட்டபடுக்கின்றன. இவை ஏதும் இன்றி போருக்கு பின்னரான தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல் , சமூக பிரச்சனைகளை சினிமா என்னும் பெரும் ஊடகத்தினூடு திரை மொழியாக்குவதில் வெற்றி கொண்டுள்ளார் இயக்குனர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை என தொழில்நுட்ப ரீதியாக கூட சினங்கொள் சிறப்பான அனுபவமாக இருக்கிறது. Drone Shots இருக்க வேண்டும் என்பதற்காகவே வலிந்து திணிக்கபடும் காட்சி அமைப்புக்களே ஈழ சினிமாக்களில் மலிந்து கிடக்கும் தருணம் திரைக்கதைக்கு ஏற்றவாறு காட்சிகளை அமைத்திருப்பது சினங்கொள்ளின் திரைக்கதைக்கு மிகவும் பலம் சேரத்திருக்கிறது.கைதடி பாலத்தடியில் படத்தின் முதன்மை பாத்திரமும் அவர் மகளும் சைக்கிளில் பேசிக்கொண்டு வரும் காட்சியும் மனதில் இன்னமும் பல நினைவுகளை கிளறிவிடுகிறது. திரையை கண்களை விலக முடியாதபடி எமது நிலத்தை தனது கதைக்கு ஏற்றவாறு உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

அதே போல் பாடல்களும் கதையோட்டத்துடனே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தொகுப்பு படத்தின் பலவீனங்களில் ஒன்று. ஈழ சினிமாக்களில் மற்றுமோர் மிக பெரிய பிரச்சனை வசனம். சினங்கொள் ஒரளவுக்கு அதனை நிவர்த்தி செய்ய முயன்று இருந்தாலும் பல இடங்களில் வசனங்கள் நாடக தன்மை கொண்டவையாகவும் திரைமொழிக்கு ஏற்றவையாகவும் இல்லை. படத்திற்கு வசனம் எழுதியது எழுத்தாளர் தீபச்செல்வன் என்ற எதிர்பார்ப்புடன் சென்றதால் இவ்வாறு அனுபவத்தை ஏற்படுத்தியதோ தெரியவில்லை. ஆனால் சில இடங்களில் வசனங்கள் செழுமையாக இருபதையும் மறுக்க முடியாது.

கலை, இலக்கிய, சினிமா வரலாற்றின் இன்னொரு பிர்சசனை விமர்சனமும், விமர்சிப்பவர்களும் குறுங்கழுவாத சிந்தனைகளைக்குள் ஊறிக்கிடப்பதே. ஈழ கலை , இலக்கிய , சினிமாவும் இதற்குள் சிக்கி கிடப்பது வெளிப்படையானது. ஈழத் திரைப்படங்கள் , புத்தகங்கள் என்ன அரசியலை பேசுகின்ற என்ற அடிப்படையிலேயே ஆதரவும், எதிர்ப்பும் முன்வைக்க படுகிறது. ‘நடுகல்’ வெளியீட்டு கூட்டத்தின் போது அது நாவலே இல்லை என்றார்கள். ‘ஒற்றைபனைமரம்’ காட்சி படுத்தலின் பின்னர் அந்த திரைப்படத்தின் தொழில்நுட்டம், திரைகதையாக்கம் பற்றி வாயே திறக்காமல் அது பேசிய அரசியலை மட்டும் புகழ்ந்து தள்ளினார்கள். ஒற்றைபனைமரம் பார்க்க வந்த பல திரைப்பட ஆர்வலர்கள் சினம்கொள் பார்க்க வரவில்லை.

‘சினங்கொள் ‘ அதன் பேசும் அரசியல் பற்றியும் குறைகள், சிறைகள் பற்றி நிறைய உரையாடலாம். மாற்றுகருத்துகள், பார்வைகள் உண்டு. உதாரணமாக ஆயுதம் எடுக்க மாட்டோம் என்று கூறி கத்தியினை தொட மறுத்தவன் பின்னர் எப்படி கருக்குமட்டையால் அடிக்கிறான் என்பது ஒரு சிலரின் விமர்சனம். கத்தி கொண்டு போய் தாக்குவது என்பதுவும் ஏற்பட்ட சூழ்நிலையால் பக்கதில் கிடப்பதால் தாக்குவது என்பதுவும் வேறு என்றும் எடுத்து கொள்ளலாம். இல்லா விட்டால் ஆயுதம் எடுக்க மாட்டோம் என்று இருப்பவனையும் ஏற்படும் சூழ்நிலை ஆயுதம் ஏந்த வைக்கிறது என்றும் எடுத்து கொள்ளலாம். பார்வைகள் பலவிதம்.

‘சினங்கொள்’ போருக்கு பின்னரான தமிழர் தாயகத்தில் நடக்கும் பிரச்சனைகளை திரை மொழியில் சொல்லியிருக்கும் திரைபடம் ஆகும். அதன் பின்னணி என்ன? அந்த பிரச்சனைகளின் மூல காரணம் , அதில் யாரெல்லாம் இணைந்திருக்கிறார்கள என்பதை பற்றி எல்லாம் பேசவில்லை. ‘ஒற்றை’ திரைப்படத்தில் அவ்வாறு எல்லாவற்றையும் பேசி விடவும் முடியாது என்பது என்பது எண்ணம். அது இயக்குனரின் சுதந்திரமும் கூட.

இன்றைய இளைஞ்சர் சமூகத்தில் ஏற்பட்ட வன்முறை கலாசாரத்திற்கு பல்வேறு பட்ட அரசியல், சமூக காரணிகள் இருந்தாலும் அவ்வாறு செயற்படுபவர்களுடன் நாம் உரையாட வேண்டிய அவசியத்தை ‘சினம்கொள்’ சுட்டி நிற்பதாக நான் உணர்கிறேன். தாயகத்தில் இந்த படம் திரையிடபப்டுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

‘அடையாளங்களை’ காட்டவில்லை என்று சிலர் இயக்குனரிடம் கேட்டார்கள். திரையில் காட்ட வேண்டிய எமது அடையாளம் எமது நிலமும் , அதன் பிரச்சனைகளுமே. சினங்கொள் அதனை தாரளமாக திரையில் காட்டி இருப்பதாகவே நான் உணர்கிறேன். சினங்கொள் திரைப்பட குழுவினருக்கும் இயக்குனர் Ranjith Joseph ற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

பா. நடேசன், இலண்டன். 

இதேவேளை எதிர்வரும் 27ஆம் திகதி நோர்வேயிலும் 28ஆம் திகதி பிரான்சிலும் சினம்கொள் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் இடம்பெறவுள்ளன. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.