Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ என விஜய் படங்களுக்கு ஏன் ஆங்கிலத்தில் பெயர்வைக்கிறார்கள்

‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ என விஜய் படங்களுக்கு ஏன் ஆங்கிலத்தில் பெயர்வைக்கிறார்கள்

24 minutes read

1. நாளைய தீர்ப்பு – 1992

‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘வசந்த ராகம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ‘இது எங்கள் நீதி’ எனத் தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த விஜய் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’. விஜய்யின் அம்மா ஷோபா தான் நாளைய தீர்ப்பின் கதாசிரியர். இயக்கம் எஸ்.ஏ.சி. ”அன்புள்ளம் கொண்டோரே… வணக்கம் எங்களை போன்றே எங்கள் மகன் விஜய்யையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்” என டைட்டில் கார்டில் எஸ்.ஏ.சியின் வாய்ஸ் ஓவரோடு ஒரு மாஸ் ஹீரோவுக்கே உரித்தான ஸ்டைலில் விஜய்யை அறிமுகப்படுவார்கள்.

”நடு ரோட்ல நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவிய அடிக்கிறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது” என அநியாயத்தை கண்டு வெகுண்டெழும் ஆங்ரி யங் மேன் கதாப்பாத்திரம் விஜய்யுடையது. விஜய் தனது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து ‘நாளைய தீர்ப்பு’ என்ற பத்திரிகை நடத்தி சமூக அட்டூழியங்களை தட்டிக்கேட்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். பெரிய மாஸ் ஹீரோ செய்யவேண்டிய விஷயங்களை ஒரு புதுமுகம் செய்ததால் மக்களுக்கு சரியாக கனெக்ட் ஆகவில்லை. கில்லி-திருப்பாச்சி நேரத்தில்தான் இந்த ஆங்க்ரி யங் மேன் டைப் கேரக்டர்கள் விஜய்க்கு சரியாக செட் ஆகத் தொடங்கியது.

2. செந்தூரப்பாண்டி – 1993

‘நாளைய தீர்ப்பு’க்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களுக்குப் பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து 1993-ல் ரிலீசான படம் ‘செந்தூரப்பாண்டி’. விஜய்யை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் முனைப்பில் நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் விஜயகாந்திடம் தேதி வாங்கி விஜயகாந்த் – விஜய் இருவரையும் வைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக எடுத்தார் எஸ்.ஏ.சி. இந்த படத்தில் விஜய்க்கு காதல் காட்சிகளே அதிகம். மற்றபடி மாஸ்-ஆக்ஷன் காட்சிகளெல்லாம் விஜயகாந்த்துக்குத்தான். கௌதமி, மனோரமா, விஜயக்குமார் என பிரபலமான நடிகர்கள் பலரும் நடித்திருந்ததால் இந்த படம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த படத்தில் நடிக்க எஸ்.ஏ.சி யிடம் சம்பளம் வாங்க விஜயகாந்த் மறுத்ததாகவும், படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சி வற்புறுத்தி சம்பளம் கொடுத்ததாகவும் செய்திகள் உண்டு.

3. ரசிகன் – 1994

‘நாளைய தீர்ப்பு’ மாதிரியான மாஸ் வொர்க் அவுட் ஆகாது எனப் புரிந்து நரம்பு புடைக்கும் புரட்சிகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டு விஜய்க்காக எஸ்.ஏ.சி எடுத்த காதல் கதைதான் ‘ரசிகன்’. சங்கவியின் கிளாமர் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த படத்தில்தான் முதல் முறையாக கவுண்டமணி செந்திலுடன் காமெடி காட்சிகளில் நடித்திருந்தார் விஜய். அதேப்போல விஜய் முதல் முதலாக சொந்தக்குரலில் பாடிய ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ பாடலும் பயங்கர பிரபலம். சோலோவாக நடித்து விஜய்க்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்த படமாக ‘ரசிகன்’ அமைந்தது.

4. தேவா – 1995

விஜய்யை ஒரு மார்க்கெட் உள்ள ஹீரோவாக நிலைநிறுத்தப் போராடிக்கொண்டிருந்த சூழலில் மீண்டும் எஸ்.ஏ.சி இயக்கிய படம் ‘தேவா’. ‘செந்தூரப்பாண்டி’ ஸ்டைலிலேயே காதல் -பஞ்சாயத்து-ஆக்ஷன் ஃபார்முலாதான். சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கோலிவுட்டில் ஒரு பெரிய பிரேக் கிடைக்கும் வரை விஜய்க்கு களத்தில் நிலைத்து நிற்க கிடைத்த சின்ன சின்ன வெற்றிகளில் ‘தேவா’வும் ஒன்று. இன்னொரு முக்கியமான விஷயம் விஜய்க்கு முதன் முதலாக ‘இளைய தளபதி’ என பட்டம் சூட்டப்பட்டது ‘தேவா’வில்தான்.

5. ராஜாவின் பார்வையிலே – 1995

இன்று இரண்டு துருவங்களாக இருக்கும் விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம். இந்த படத்திற்கு முன் விஜய்-அஜித் இருவருமே ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தனர். தங்களுக்கென தனி மார்க்கெட் உருவாவதற்கு முன் இருவரும் சேர்ந்து நடித்த படம். விஜய்க்குப் படம் முழுக்க ஹீரோவாக வருவார். அஜித் ஃப்ளாஷ்பேக்கில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். விஜய் சில ஆண்டுகளுக்குப் பிறகு நடித்த ‘ஷாஜகான்’ படத்தின் கதையை போன்றதுதான் ‘ராஜாவின் பார்வையிலே’. விஜய்யின் படத்திற்கு முதன்முதலாக இசைஞானி இசையமைத்ததால் ‘ராஜாவின் பார்வையிலே’ என டைட்டில் வைத்திருக்கலாம். டைட்டில் ஃபாண்டிலும் இளையராஜாவின் முகம் இடம்பெற்றிருக்கும். எஸ்.ஏ.சி இயக்கமில்லாமல் ஜானகி சௌந்தர் என்பவர் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் வெற்றிபெறவில்லை.

விஜய் - கெளசல்யா
விஜய் – கெளசல்யா

6. விஷ்ணு – 1995

மீண்டும் எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய். இந்த முறை ஆக்ஷன் கதைக்களம். ரசிகனுக்குப் பிறகு விஜய்-சங்கவி ஜோடி மீண்டும் இணைந்த படம். விஜய்க்கு அப்பாவாக மூத்த நடிகர் ஜெய்சங்கர் நடித்திருப்பார். விஜய் பாடிய ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா’ பாடல் செம ஃபேமஸ். பாட்டு-டான்ஸ்-ஆக்ஷன் என விஜய் ஒரு சில படங்களிலேயே திறமையை வளர்த்துக்கொண்டு நன்றாக நடித்தப் படமாக இருந்தும் விஜய் எதிர்பார்த்த பெரிய ஹிட் வாய்க்கவில்லை.

7. சந்திரலேகா – 1995

எம்.ஜி.ஆர்-க்கு நெருக்கமாக இருந்த நம்பிராஜன் என்பவரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விஜய் நடித்தப் படம். ரஜினிகாந்த் க்ளாப் அடித்து தொடங்கி வைத்த விஜய். இந்த படத்தின் டைட்டில் கார்டில் மட்டும் ஏனோ விஜய்க்கு இளைய தளபதி பட்டம் இடம்பெற்றிருக்காது. ‘ராஜாவின் பார்வையிலே’-க்குப் பிறகு விஜய்யுடன் இந்த படத்தில் மீண்டும் காமெடி கூட்டணி அமைத்திருப்பார் வடிவேலு. தனி ட்ராக்காக இல்லாமல் விஜய்யிடம் காம்பினேஷன் காட்சிகளும் வடிவேலுக்கு அதிகம் இருக்கும். பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் அறிமுகமான முதல் படம். விஜய் இறப்பது போன்று க்ளைமாக்ஸ் உள்ள இரண்டே படங்களில் இதுவும் ஒன்று.

8. கோயம்புத்தூர் மாப்பிள்ளை – 1996

எஸ்.ஏ சி இல்லாமல் விஜய் வெளி இயக்குநர் படங்களில் நடிக்கத் தொடங்கியப்பிறகு வெளியான குறிப்பிடத்தக்க படம் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’. இயக்குநர் ரங்கநாதன். மீண்டும் விஜய்-சங்கவி கூட்டணி. படத்தின் பாடல்களும் விஜய்யின் நடனமும் குறிப்பிடத்தக்கவகையில் சிறப்பாக இருக்கும். விஜய்க்கு காமெடி வொர்க் அவுட் ஆன முதல் படம் என்று இதை சொல்லலாம். விஜய்-கவுண்டமணி இருவரும் வேலைக்குப் போவதாக ரீல் விடும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும்.

9. பூவே உனக்காக – 1996

திரையுலகில் அறிமுகமாகி நான்கு வருடங்கள் ஆகியும் ஒரு ப்ளாக்பஸ்டருக்காக ஏங்கிக்கொண்டிருந்த விஜய்க்கு விக்ரமன் கொடுத்த எவர்கிரீன் ஹிட்தான் ‘பூவே உனக்காக’. விஜய்க்கு இதற்கு முன்பிருந்த இமேஜை எல்லாம் சுக்குநூறாக்கி விஜய்யை ஃபேமிலி ஆடியன்ஸ்களின் நடிகராக மாற்றிய படம். நாகேஷ், நம்பியார் எனப் பழம்பெரும் நடிகர்களுக்கு மத்தியிலும் பேர் செல்லும் வகையில் சிறப்பாக நடித்திருப்பார் விஜய். அதிலும் விஜய்யின் நடிப்பில் அந்த க்ளைமாக்ஸ் ஒரு மாதிரி ஃபீல் ஆக்கிவிடும். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் மென்மையான பாடல்களும் ஹிட். இன்று விஜய் பெரிய நடிகராக எத்தனையோ ப்ளாக்பஸ்டர்களை தொடர்ந்து கொடுத்தாலும் விஜய் கரியரில் ஒரு மறக்கமுடியாத வெற்றிப்படம் என்றால் அது ‘பூவே உனக்காக’ தான்.

10.வசந்த வாசல் – 1996

‘பூவே உனக்காக’ 1996 பிப்ரவரியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே மார்ச் மாதம் ரிலீசான இன்னொரு விஜய் படம் ‘வசந்த வாசல்’. நடிகனாக ஆசைப்படும் இளைஞராக இந்த படத்தில் விஜய் நடித்திருப்பார். எந்தவித பரபரப்புமின்றி ‘பூவே உனக்காக’ அலையில் காணாமல் போனது.

Vijay, Simran, Priyamanavaley
Vijay, Simran, Priyamanavaley

11. மாண்புமிகு மாணவன் – 1996

சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தந்தை எஸ்.ஏ.சி யுடன் கூட்டணி. வழக்கமான ரவுடி அரசியல்வாதி புரட்சி ஹீரோ என எஸ்.ஏ சி படங்களுக்கான டெம்ப்ளேட் நிறைந்திருந்த படமாக இருந்ததால் பெரிய வெற்றியை பெறவில்லை.

12.செல்வா – 1996

நல்ல கமர்ஷியல் இயக்குநராக அறியப்பட்ட வெங்கடேஷின் இரண்டாவது படம். விஜய்க்கு இவர் முதலில் தயார் செய்தது ஒரு காதல் கதை. ஒரு நல்ல ஆக்ஷன் படம் கொடுக்க வேண்டும் என விஜய் தரப்பு விரும்பியதால் பின்னாளில் இயக்குநரான மஜித்தின் ஆக்ஷன் கதையை விஜய்க்காக இயக்கினார் வெங்கடேஷ். கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரகுவரன் விஜய்யின் அப்பா. இது தெரியாமல் இருக்கும் விஜய்க்கு க்ளைமாக்ஸில் வில்லனாக அப்பாவே இருப்பதுபோல் திரைக்கதை. விஜய் எதிர்பார்த்த ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாகவே இருக்கும். ரிஸ்க்கான க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் விஜய் நடிக்க வேண்டாம் எஸ்.ஏ.சி எவ்வளவோ வலியுறுத்திய பிறகும் பிடிவாதமாக விஜய் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சியில் நடித்ததாக இயக்குனர் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். விஜய் எதிர்பார்த்த ஆக்ஷன் வெற்றியாக அமைந்தது செல்வா.

13.காலமெல்லாம் காத்திருப்பேன் – 1997

மீண்டும் ஒரு முழு நீள காதல் கதையில் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் நடித்த படம். பணக்கார திமிர் பிடித்த இளைஞன் திருந்தி காதலுக்காக டிரைவர் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். சொல்லும் அளவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

14. லவ் டுடே – 1997

பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடித்த முழு நீள ட்ரெண்ட் செட்டிங் காதல் படம். விஜய்யின் கணேஷ் என்ற கதாப்பாத்திரத்திற்கு படம் ரிலீசான சமயத்தில் செம ரெஸ்பான்ஸ். படம் முழுவதும் விரட்டி விரட்டி காதலித்துவிட்டு க்ளைமாக்ஸில் அந்த காதலையே தூக்கிபோடும் வகையிலான வித்தியாசமான திரைக்கதை ரசிகர்களை கவர்ந்தது. அப்பா மகனாக ரகுவரன் விஜய் காம்போவும் அவர்களுக்கு இடையேயான காட்சிகளும் மிகச்சிறப்பாக வந்திருக்கும். க்ளைமாக்ஸில் விஜய் பேசும் வசனங்கள் இன்றைக்கும் ஸ்டேட்டஸ்களில் ட்ரெண்டிங்காக இருக்கிறது. ‘பூவே உனக்காக’-வுக்குப் பிறகு விஜய்க்கு இன்னொரு ப்ளாக்பஸ்டராக அமைந்தது ‘லவ் டுடே’. இரண்டு படங்களையும் தயாரித்தது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

15.ஒன்ஸ் மோர் : 1997

நாகேஷ், நம்பியார், ஜெய்சங்கர் போன்ற பழம்பெரும் நடிகர்களுடன் ஏற்கனவே நடித்திருந்த விஜய்க்கு இந்த முறை எஸ்.ஏ.சி இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடனும், நடிகை சரோஜா தேவியுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி,கமலுக்குப் பிறகு இப்போதிருக்கும் நடிகர்களில் சிவாஜியுடன் நடித்திருக்கும் ஒரே நடிகர் விஜய்தான். இந்தப் படத்தில்தான் விஜய்-சிம்ரன் வெற்றிக் கூட்டணி முதல் முறையாக ஜோடி சேர்ந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது நடிகர் திலகம் சிவாஜி ‘இந்த பையன் சினிமால ஒரு ரவுண்ட் வருவான் பாரு’ என பிரபுவிடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வாராம். வெற்றி தோல்விகளை கடந்து ‘ஒன்ஸ் மோர்’ விஜய் கரியரில் முக்கியமான ஒரு படமாக அமைந்தது.

`Priyamudan' Vijay
`Priyamudan’ Vijay

16. நேருக்கு நேர் : 1997

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்தப் படம். சூர்யாவுக்கு இதுதான் முதல் படம். முதலில் அஜித்தான் சூர்யா நடிக்கும் வேடத்தில் நடிப்பதாக இருந்து வேறு சில காரணங்களால் அஜித் நடிக்க முடியாமல் போனது. படம் முழுவதும் எதிரும் புதிருமாக இருக்கும் விஜய்யும் சூர்யாவும் க்ளைமாக்ஸில் ஒன்று சேர்ந்து வில்லன் கும்பலிலிருந்து மீள்வார்கள். இந்த படத்திலும் சிம்ரன் நடித்திருப்பார். ஆனால் சூர்யாவுக்கு ஜோடியாக. விஜய்க்கு ஜோடி கௌசல்யா. இந்த படமும் விஜய்க்கு நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தது. ‘நேருக்கு நேர்’ உட்பட மேற்குறிப்பிட்ட பல விஜய் படங்களிலும் ‘ஷ்ஷ்ரூரூரூவ்’ கரண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

17. காதலுக்கு மரியாதை – 1997

‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’ வரிசையில் விஜய்க்கு மீண்டும் ஒரு மெகா ப்ளாக்பஸ்டர். இயக்குநர் ஃபாசில் இதுவரை இருந்த விஜய்யிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ரொம்பவே அமைதியான லவ்வர் பாய் கேரக்டரில் நடிக்க வைத்திருப்பார். லவ் & லவ் ஒன்லியை விஜய்-ஷாலினி இரண்டு பேரும் கச்சிதமாக உள்வாங்கி நன்றாக நடித்திருப்பார்கள். கூடவே இளையராஜாவின் பாடல்களும். 90-ஸ் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத படமாக தடம் பதித்தது ‘காதலுக்கு மரியாதை’. இதுவரை நடித்தப் படங்களிலேயே விஜய்க்கு மிகவும் பிடித்த காட்சி ‘காதலுக்கு மரியாதை’யின் க்ளைமாக்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு இந்த படத்தில் நடித்ததற்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

18. நினைத்தேன் வந்தாய் – 1998

செல்வபாரதி விஜய் திரைப்பயணத்தில் முக்கியமான சில படங்களை இயக்கியவர். விஜய்யும்-செல்வபாரதியும் முதல் முதலாக இணைந்த படம் ‘நினைத்தேன் வந்தாய்’. விஜய்-தேவயானி-ரம்பா என மூவருக்குமிடையேயான சென்ட்டிமென்ட் காதல் கதைதான் ‘நினைத்தேன் வந்தாய்’. விஜய்-ரம்பா இருவரையும் விட தேவயானிக்கு நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இருந்த படம். தன்னுடைய கேரக்டருக்கு ஹீரோயின் கேரக்டரை விட கொஞ்சம் முக்கியத்துவம் குறைவாக இருந்தாலும் நல்ல கதைக்காக விஜய் நடித்த படம். விஜய்யின் குடும்ப ரசிகர்களை பெரிதும் திருப்திபடுத்தும் வகையில் அமைந்து வெற்றி பெற்ற படம்.

19. பிரியமுடன் – 1998

‘காதலுக்கு மரியாதை’, ‘நினைத்தேன் வந்தாய்’ என குடும்பங்கள் கொண்டாடிய படங்களுக்குப் பிறகு விஜய் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்கான முயற்சி ‘பிரியமுடன்’. வின்சென்ட் செல்வா இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு வசந்த் என்ற வில்லத்தனமான கேரக்டர். அதுமட்டுமல்லாமல் விஜய் இறப்பது போன்ற நெகட்டிவ் க்ளைமாக்ஸ் வேறு. விஜய் தரப்பில் எஸ்.ஏ.சி உட்பட யாருக்குமே இந்த படத்தில் நம்பிக்கையில்லை. விஜய் மட்டும் விடாப்பிடியாக அடம்பிடித்து இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். இறுதியில் விஜய்யின் வித்தியாச முயற்சியை மக்களும் ஏற்றுக்கொண்டனர்.

20.நிலாவே வா – 1998

செல்வா காலத்தில் இயக்குநர் வெங்கடேஷ் விஜய்காக எழுதி வைத்திருந்த காதல் கதைதான் ‘நிலாவே வா’. விஜய்யின் சொந்தத் தயாரிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியானது ‘நிலாவே வா’. காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் சாதி-மத வெறிகளைப் பற்றிய கதை. ‘காதலுக்கு மரியாதை’, ‘லவ் டுடே’ அளவுக்கு கவனம் பெறாவிட்டாலும் மிக அழகான காதல் கதை. வித்யாசாகரின் இசையில் ‘நீ காற்று நான் மரம்’ உள்பட பாடல்கள் எல்லாமே எவர்கிரீன் ஹிட்ஸ்.

vijay and director chandrasekar
vijay and director chandrasekar

21. துள்ளாத மனமும் துள்ளும் : 1999

இயக்குநர் எழிலின் முதல் படம். விஜய் – சூப்பர் குட் ஃபிலிம்ஸ் காம்போவில் விஜய் கரியரில் இன்னொரு ப்ளாக்பஸ்டராக அமைந்தப் படம். வடிவேலு கோவை சரளாவை மனதில் வைத்து எழில் எழுதிய கதையில் விஜய்க்கென்று சில மாறுதல்கள் செய்து எடுக்கப்பட்ட படம். வழக்கம்போல இந்த விஜய் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். குற்றவுணர்ச்சியோடு அப்பாவித்தனம் கலந்த காதலை வெளிப்படுத்தும் ‘குட்டி’ கேரக்டரில் விஜய் கலக்கியிருப்பார். விஜய்- சிம்ரன் காட்சிகள் எல்லாம் அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்.

22. என்றென்றும் காதல் : 1999

மனோஜ் பட்நாகர் இயக்கத்தில் நம்பியார், ராதா ரவி, ரகுவரன், பானுப்பிரியா என பெரிய நட்சத்திரப்பட்டாளமே விஜய்யுடன் சேர்ந்து நடித்தப் படம். வழக்கமான காதல் குடும்ப கதை என்பதாலும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் பெருவெற்றியாலும் இந்த படம் கவனம் பெறாமல் போனது.

23. நெஞ்சினிலே : 1999

சிறு இடைவெளிக்கு பிறகு எஸ்.ஏ.சி யுடன் விஜய் மீண்டும் இணைந்த படம் ‘நெஞ்சினிலே’. இந்த படமும் கவனிக்கத்தக்க வகையில் பெரிய வெற்றியை பெறவில்லை.

24. மின்சாரக்கண்ணா : 1999

கே.எஸ்.ரவிக்குமார் ‘படையப்பா’ என்ற மிகப்பெரிய வெற்றி படத்திற்கு விஜய்யுடன் இணைந்த படம். பாட்டு, காமெடி, நடிப்பு என எல்லாமே சரியாக இருந்தும் ‘படையப்பா’ வெற்றிக்குப் பிறகான அதிகபட்ச எதிர்பார்ப்பினால் இந்த படம் தோல்வியடைந்தது. சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘பாராசைட்’ படத்துடன் ‘மின்சாரக்கண்ணா’ படத்தை ஒப்பிட்டு பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

25. கண்ணுக்குள் நிலவு : 2000

‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு விஜய் தொடர்ச்சியாக நடித்த மூன்று படங்களும் தோல்வியடைந்தன. இந்நிலையில் 25-வது படமாக ‘காதலுக்கு மரியாதை’ ஃபாசில்-விஜய்-ஷாலினி கூட்டணி மீண்டும் இணைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருந்தது. விஜய்யின் வித்தியாசமான நடிப்பு பேசப்பட்ட அளவுக்கு படம் பேசப்படாததால் இந்த படமும் விஜய்க்கு தோல்வியாக அமைந்தது.

vijay
vijay

26.குஷி : 2000

தொடர்ச்சியான ப்ளாஃப்களின் மூலம் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சோர்ந்து போயிருந்த விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்து ஊக்கமளித்த படம் ‘குஷி’. ‘வாலி’ வெற்றிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா எழுதிய ஈகோயிஸ்டிக் காதல் கதை. எஸ்.ஜே சூர்யாவின் ஸ்டைலை உள்வாங்கி விஜய்யும் சரி ஜோதிகாவும் சரி சிறப்பாக நடித்திருப்பர். அந்த மொட்டைமாடி இடுப்பு சீன் இன்றும் லைக்ஸ் அள்ளும். இந்த படத்தின் ஒரு பாடலில் ஷில்பா ஷெட்டி விஜய்யோடு நடனமாடியிருப்பார். இந்தப் பாடல் படப்பிடிப்பின் இடைவெளியில் விஜய் தனது நண்பர்களுக்கு போன் செய்து ‘ஏ…ஷில்பா ஷெட்டி கூட டான்ஸ் ஆடிட்டு இருக்குறேன்டா’ என்று ஜாலியாக பேசிக்கொண்டிருப்பாராம். இப்போது அதே ஷில்பா ஷெட்டி ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டிக்டாக்கில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்.

27. பிரியமானவளே : 2000

‘நினைத்தேன் வந்தாய்’க்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் செல்வபாரதி கூட்டணி சேர்ந்த படம். ஃபாரின் ரிட்டன் இளைஞனாக கான்ட்ராக்ட் திருமணம் பேசும் கொஞ்சம் நெகட்டிவ் தன்மையுடைய அப்பர் கூல் விஜய்க்கும் அக்மார்க் தமிழ்ப்பெண்ணான சிம்ரனுக்கும் இடையேயான திருமணம்தான் கதை. விஜய்யும் சிம்ரனும் இந்த படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். விஜய்யின் ஃபேமிலி ஹீரோ இமேஜை ஒருபடி உயர்த்திய படம். இந்த படத்தில் சிம்ரன் கருவுற்றிருக்கும் போது வரும் ‘ஜூன்…ஜூலை மாதத்தில்’ பாடலின் படப்பிடிப்பின் போதுதான் விஜய்யின் மகன் சஞ்சய் பிறந்தது அவருக்கு செம ஸ்பெஷல் மொமன்ட்டாக அமைந்தது.

28.ப்ரெண்ட்ஸ் : 2001

ஃபாசிலுக்குப் பிறகு விஜய்யை இயக்கிய இரண்டாவது மலையாள இயக்குனர் சித்திக். 2001 பொங்கலுக்கு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜய்-சூர்யா-ரமேஷ் கண்ணா-வடிவேலு-சார்லி என இந்த படத்தின் காமெடி கூட்டணி பெயின்டிங் கான்ட்ராக்ட் என்ற பெயரில் செய்த அக்கப்போர்களுக்கு இன்று வரை தமிழகமே சிரித்துக்கொண்டிருக்கிறது. விஜய்-வடிவேலு என்ற ஜாலி கூட்டணி இந்த படத்திலிருந்துதான் வரிசையாக இணையத்தொடங்கியது.

29.பத்ரி: 2001

‘ப்ரெண்ட்ஸ்’ ஹேங் ஓவரிலேயே அதேமாதிரியான லைட் ஹார்ட்டட் விஷயங்களோடு கொஞ்சமாக பாக்ஸிங்கை மட்டும் சேர்த்துக்கொண்டு விஜய் கொடுத்த ஹிட் படம். க்ளைமாக்ஸில் மட்டுமே விஜய் பாக்ஸராக வந்தாலும் அதை அந்த காலத்துக்கு ஏற்றவாறு நம்பும்படியாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். குத்துச்சண்டை காட்சிகளுக்காக விஜய் கடுமையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு சிறப்பாக செய்திருப்பார்.

30. ஷாஜகான் : 2001

விஜய்யின் லவ் ஃபெய்லியர் படங்களின் வரிசையில் முக்கியமான படம் ‘ஷாஜகான்’. காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் அஷோக் என்ற கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். நண்பர்களின் காதலுக்கு உதவுவோருக்கு ‘நாடோடிகள்’ சசிக்குமாருக்கு முன்பான காட்ஃபாதர் இந்த அஷோக் கேரக்டர் தான். க்ளைமாக்ஸில் தான் காதலித்த பெண்ணை வேறொருவர் கையில் பிடித்துக்கொடுக்கும் இடத்தில் ‘நடிகர்’ விஜய் மிளிர்ந்திருப்பார். கடைசியில் ‘உண்மை காதல்னா சொல்லு என் உயரைக் கொடுக்குறேன்’ என விஜய் சொல்லும் இடம் ரசிகர்களை எமோஷனல் ஆக்கியிருக்கும். இந்த படத்தை பார்த்துவிட்டுதான் டைரக்டர் வெங்கடேஷ் விஜய்யிடம் ‘பகவதி’ கதை சொல்லியிருக்கிறார்.

Vijay, Sangeetha
Vijay, Sangeetha

31.தமிழன் : 2002

‘செல்வா’ படத்தின் கதாசிரியர் மஜித்துடன் விஜய் இணைந்த படம். பிரியங்கா சோப்ரா நடித்த ஒரே தமிழ் படம். ‘ஜென்டில் மேன்’, ‘அந்நியன்’, ‘முதல்வன்’ மாதிரியான அக்மார்க் ஷங்கர் டைப் படத்தின் சாயல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கோர்ட் ரூம் காட்சிகள் நன்றாக இருந்தாலும் இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. விஜய்யின் மாஸ் ஹீரோ கனவை தமிழனால் நிறைவேற்ற முடியவில்லை. இசையமைப்பாளர் இமானுக்கு இதுதான் முதல் படம்.

32. யூத் – 2002

‘பிரியமுடன்’ படத்துக்குப் பிறகு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம். ‘யூத்’ என்றவுடன் இந்த படத்தின் பாடல்கள்தான் முதலில் ஞாபகம் வரும். ‘ஆல் தோட்ட பூபதி’, ‘சர்க்கரை நிலவே’ ‘சந்தோஷம்…சந்தோஷம்’ என படத்தின் அத்தனை பாடல்களும் செம ஹிட். ‘ஆல் தோட்ட பூபதி’-க்கு விஜய்-சிம்ரன் டான்ஸ் விஜய் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட். ‘இங்க என்ன தோணுதோ அதைப் பேசுவேன்…இங்க என்ன தோணுதோ அத செய்வேன்’ என ‘யூத்’ படத்தில் பேசியதுதான் விஜய்யின் முதல் பன்ச் டயலாக். ‘யூத்” நல்ல வெற்றிப்படமாக இருந்தாலும் விஜய்க்கு அந்த மாஸ் ஹீரோ இமேஜ் இன்னும் கிடைக்கவில்லை.

33.பகவதி: 2002

விஜய்யை முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக்கிய பெருமை ஏ.வெங்கடேஷையே சேரும். இவர் ரஜினிக்கு எழுதி வைத்திருந்த ஒரு கதையை விஜய்யிடம் கூற பலகட்ட யோசனைக்குப் பிறகு விஜய்யும் ஓகே சொல்லி நடித்த படம்தான் ‘பகவதி’. பாட்ஷா படத்தின் சாயல் இருந்தாலும் விஜய்யை இதே மாதிரியான ரோலில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. பன்ச் டயலாக், ஆக்ஷன், சென்ட்டிமென்ட், காமெடி என விஜய்யை முழுமையான கமர்ஷியல் பேக்கேஜாக மாற்றிய படம். பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விஜய்க்கு ஆக்ஷன் கதைகளின் மீது நம்பிக்கை கொடுக்கும் வகையிலான வெற்றியை பெற்றது.

34.வசீகரா : 2003

செல்வபாரதியுடன் மூன்றாவது முறையாக விஜய் கூட்டணி சேர்ந்த படம். ‘நினைந்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’ போன்று வெற்றிகரமாக இல்லாமல் வசீகரா தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், இந்தப் படம் ஏன் தோல்வியடைந்தது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கமுடியாத பெரிய புதிர். படம் முழுவதும் விஜய்யின் சேட்டைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். விஜய்-வடிவேலு ஆடிய காமெடி கதகளி சரியாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். ஆனாலும், படம் வெற்றிபெறவில்லை.

35. புதிய கீதை : 2003

ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்தப் படம். விஜய் லவ் படங்களிலிருந்து ஆக்‌ஷன் படங்களுக்கு மாறிக்கொண்டிருந்த நேரத்தில் இரண்டுக்கும் இடைப்பட்ட ஜானரில் சிக்கிக்கொண்டு தோல்வியடைந்த படம் ‘புதிய கீதை’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ஒரே விஜய் படம் ‘புதிய கீதை’தான்.

36.திருமலை : 2003

‘பகவதி’யில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டாலும் விஜய் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுத்த படம் என்னவோ ரமணா இயக்கத்தில் வெளியான ‘திருமலை’தான். சாமி பட் வெற்றிவிழாவில் ‘விஜய்யின் விஸ்வரூபத்தை திருமலையில் பார்ப்பீர்கள்’ என பாலச்சந்தர் பேசியிருப்பார். உண்மையிலேயே திருமலையில் விஜய் விஸ்வரூபம்தான் எடுத்திருப்பார். காலரிலிருந்து சிகரெட் எடுக்கும் மேனரிசம், பைக்கிலிருந்து இறங்கும் ஸ்டைல் என முந்தைய படங்களிலிருந்து செம சேஞ்ச் ஓவர். வட சென்னை இளைஞனாக இயல்பாக அவ்வளவு நேச்சுரலாக நடித்திருப்பார். விஜய் சிறப்பாக நடித்த படங்களின் பட்டியலில் ‘திருமலை’ எப்போதும் டாப்பில் இருக்கும்.

37. உதயா – 2004

‘உதயா’, ‘திருமலை’க்கு முன்பாக விஜய் நடித்தப்படம். லேட்டாக ரிலீஸ் ஆனது. சொதப்பலான கதை திரைக்கதையால் தோல்வியடைந்த படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘உதயா…உதயா’ பாடல் மட்டுமே குறிப்பிட்டு சொல்லும் வகையில் இருக்கும்.

38. கில்லி – 2004

திருமலை’யில் விஜய் பிடித்த மாஸ் மீட்டரை அப்படியே உச்சத்துக்கு கொண்டு போன படம் ‘கில்லி’. ‘ஒக்கடு’வின் ரீமேக்காக இருந்தாலும் இங்கே தரணி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து தமிழுக்கேற்றவாறு மாற்றியிருப்பார். 6 லிருந்து 60 வரை விஜய்யை ரசிக்க ஒரு கூட்டம் உருவானது ‘கில்லி’யிலிருந்துதான். தமிழ் சினிமாவின் சிறந்த கமர்ஷியல் படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால் ‘கில்லி’ டாப்பில் இருக்கும். இதன்பிறகு இப்படியொரு பரபரப்பான திரைக்கதையில் ‘கில்லி’யை முந்தும் அளவுக்கு ஒரு படம் தமிழில் வெளிவரவே இல்லை. விஜய் தொட்டதெல்லாம் ஹிட் என்ற நிலைக்கு கொண்டு சேர்த்தது ‘கில்லி’.

39. மதுர -2004

விஜய்யின் மற்றொரு ஆக்‌ஷன் அவதாரம்.’கில்லி’ அளவுக்குப் பெரிய வெற்றி இல்லையென்றாலும் விஜய்யை ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னராக ஏமாற்றாத படம். வடிவேலுவுடனான காமெடி, டான்ஸ், ஆக்‌ஷனில் விஜய்யும் கலக்கியிருப்பார்.

40. திருப்பாச்சி – 2005

விஜய் – சூப்பர் குட் ஃபிலிம்ஸ் கூட்டணி இணையும் போதெல்லாமே ரிசல்ட் ஒன்றே ஒன்றுதான், அது ப்ளாக்பஸ்டர். அறிமுக இயக்குனர் பேரரசுவின் தங்கச்சி சென்டிமென்ட் கதையில் ‘நீ எந்த ஊரு…நான் எந்த ஊரு…’ என பட்டித்தொட்டியெங்கும் செல்லப்பிள்ளையாக சென்று சேர்ந்தார் விஜய். ‘திருப்பாச்சி’யின் செகண்ட் ஹாஃபில் இருக்கும் வேகமும் பரபரப்பும் ஆச்சர்யப்படுத்தும். 2004-ல் ‘கில்லி’, 2005-ல் ‘திருப்பாச்சி’ என அடுத்தடுத்த ப்ளாக்பஸ்டர்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.

ajith, vijay
ajith, vijay

41.சுக்ரன் : 2005

எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளியான சுக்ரனில் வக்கீலாக ஒரு கெஸ்ட் ரோல். விஜய் ஆன்டனி இசையமைப்பாளராக அறிமுகமான படம் என்பதைத்தாண்டி வேறொன்றும் குறிப்பிடத்தக்கவகையில் இல்லை.

42. சச்சின் : 2005

‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ என ஆக்‌ஷன் அவதாரங்களுக்குப் பிறகு மீண்டும் ‘குஷி’ டைப்பில் ஒரு ஜாலியான படம். விஜய்-ஜெனிலியா செல்ல சண்டைகள், வடிவேலு காமெடி என படமே ஒரு ப்ரீஸிங் மோடில் இருக்கும்.

43. சிவகாசி : 2005

பொங்கலுக்கு ‘திருப்பாச்சி’ ஹிட் கொடுத்த பேரரசுவுடன் இணைந்து மீண்டும் அதே ஆண்டில் தீபாவளிக்கு சிவகாசியாக வெடித்தார் விஜய். வழக்கம்போல டான்ஸ், காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என இந்த படத்திலும் விஜய் வெளுத்து வாங்கியிருப்பார் படமும் பெரிய ஹிட்.

44. ஆதி – 2006

விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை எற்படுத்திய திருமலை என்ற படத்தை கொடுத்த ரமணாவுடன் மீண்டும் ஆதி படத்திற்காக கூட்டணி சேர்ந்தார் விஜய். ஆக்சன் ஓவர்லோடட் என்று சொல்லுமளவுக்கு கதையை விட வெறும் ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதால் படம் தோல்வியடைந்தது. வித்யாசகரின் பாடல்கள் மட்டும் திருப்தியளித்தன.

45.போக்கிரி – 2007

பிரபுதேவா இயக்கத்தில் 2007 பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் ‘போக்கிரி’. மகேஷ்பாபுவின் ‘போக்கிரி’ ரீமேக்காக இருந்தாலும் அவருக்கே தமிழ் ‘போக்கிரி’தான் ஃபேவரிட். எதற்கும் அசைந்து கொடுக்காத ஒரு கேஷுவல் ரவுடியாக மிரட்டியிருப்பார். ‘யாரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருதோ அவன் தான் தமிழ்…’, ‘ஒரு தடவ முடிவு பண்ணிட்டா’ போன்ற பன்ச்கள் எல்லாம் விஜய்யின் மாஸ் ஹீரோ பில்ட் அப்பை ஏற்றின. விஜய்-அசின் காம்பினேஷன் காதல் காட்சிகளும் க்யூட்டாக இருக்கும். ‘ஆடுங்கடா என்ன சுத்தி.. நான் அய்யனாரு வெட்டுக்கத்தி’ என விஜய் ஆடிய ஆட்டத்திற்கு தமிழ்நாடே ஆடியது.

46. அழகிய தமிழ்மகன் – 2007

‘கில்லி’ படத்துக்கு வசனம் எழுதிய பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த படம். விஜய் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம், ‘பிரியமுடன்’க்குப் பிறகு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால், படம் சொதப்பல்.

47. குருவி – 2008

மெகா ப்ளாக்பஸ்டரான ‘கில்லி’யின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக தரணியுடன் கூட்டணி சேர்ந்தார் விஜய். ‘கில்லி’ கூட்டணி என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தது. ஓவர் டோஸாகி சொதப்பிய சில மாஸ் காட்சிகளால் படம் விழுந்தது. வித்யாசாகர் இசையில் ‘குருவி’யின் ஓப்பனிங் பாடல் விஜய் கரியரில் செம எனர்ஜிட்டிக்கான பாடல். ஓப்பனிங் பாடல் மட்டுமல்லாமல் இந்தப் படம் முழுவதுமே எல்லா பாடல்களிலும் விஜய்யின் டான்ஸ் செம ஸ்பீடாக இருக்கும்.

48. வில்லு – 2009

2004 டு 2010 காலக்கட்டத்தில் விஜய் இரண்டாவதாக கூட்டணி சேர்ந்த எல்லா இயக்குநர்களும் ஃப்ளாப்பே கொடுத்துள்ளனர். ‘வில்லு’ மூலம் பிரபுதேவாவும் அந்த லிஸ்ட்டில் இணைந்து கொண்டார். திருப்பாச்சி-சிவகாசி என தொடர் ஹிட் கொடுத்ததால் பேரரசு மட்டும் விதிவிலக்கு. படம் சொதப்பியிருந்தாலும் வழக்கம் போல விஜய் – வடிவேலு காமெடியும் விஜய்யின் வெறித்தனமான அல்ட்ரா ஸ்பீட் டான்ஸும் இன்றும் ரசிக்கும் வகையிலே இருக்கும். அப்பா-மகனாக விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த முதல் படம். இந்த படத்தின் ரிலீஸின் போதுதான் விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது.

49. வேட்டைக்காரன் – 2009

தொடர் ஃப்ளாப்கள் வரிசையில் ‘வேட்டைக்காரன்’. விஜய் படங்களுக்கு மட்டும் இசையமைப்பாளர்கள் எப்போதுமே தவறாமல் ஹிட் பாடல்களாக கொடுத்துவிடுவார்கள். ‘நான் அடிச்சா தாங்க மாட்ட…’, ‘ஒரு சின்ன தாமரை…’ ‘புலி உறுமுது’ என ஒரு ஆல்பமாக வைரல் ஹிட் கொடுத்திருப்பார் விஜய் ஆண்டனி. ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலுக்கு விஜய்-சஞ்சயும் சேர்ந்து ஆடியது ஸ்பெஷல் மொமன்ட்.

50.சுறா – 2010

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் 50 வது படம் இவ்வளவு பெரிய ஃப்ளாப் ஆகியிருக்கவே முடியாது. இந்தப் படங்களின் போதுதான் விஜய்யின் அரசியல் ஆசையும் சேர்ந்து வளர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ‘சுறா’ படத்துக்கு முதலில் ‘உரிமைக்குரல்’ என்று டைட்டில் வைப்பதாக பேச்சு அடிபட்டது. திரைக்கதை ட்ரீட்மென்ட்டில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் கவனிக்கத்தக்க படமாகியிருக்கும். இங்கேயும் விஜய் – வடிவேலு காமெடியும் விஜய்யின் டான்ஸூம்தான் ஆறுதல்.

Vijay, Asin
Vijay, Asin

51. காவலன் -2011

‘ப்ரெண்ட்ஸ்’க்குப் பிறகு சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்தப் படம். ஆக்‌ஷனிலிருந்து விலகி ஒரு நல்ல காதல் கதை. விஜய்யின் சேஞ்ச் ஓவர் ஒர்க் அவுட் ஆனது. ரொம்ப நாளுக்குப் பிறகு சாஃப்ட்டான விஜய். இமேஜ் பார்க்காமல் நடித்திருந்ததால் படமும் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்தது. விஜய் படங்கள் மீதான அரசியல் சச்சரவுகள் ‘காவலன்’ படத்திலிருந்துதான் தொடங்கியது.

52. வேலாயுதம் – 2011

ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடி, பாட்டு, டான்ஸ் என வழக்கமான ஃபார்முலாவை மோகன் ராஜா இயக்கத்தில் மீண்டும் கையிலெடுத்தார் விஜய். திருப்பாச்சி-சிவகாசியில் ஒர்க் அவுட் ஆன மேஜிக் இங்கேயும் ஒர்க் அவுட் ஆகியிருக்கும். விஜய்யின் இன்ட்ரோ சீன் தொடங்கி முதல் பாதி முழுவதும் கலகல விருந்தாக கடந்திருக்கும். விஜய் தன்னுடைய கம்ஃபர்ட் ஸோனில் நின்று விளையாடியிருப்பார். இடையிடையே சிலபல அரசியல் பன்ச்களையும் கொளுத்திப்போட்டிருப்பார் விஜய். இந்தப்படம்தான் விஜய் கரியரில் மிகப்பெரிய இசை வெளியீட்டு விழா வைபவத்தை தொடங்கிவைத்தது.

53. நண்பன் – 2012

எந்த சண்டைக்காட்சியும் மாஸ் சீனும் இல்லாத இப்படியொரு படத்தில் விஜய் நடிப்பார் என ரசிகர்கள் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள். ‘சுறா’ சமயத்திலிருந்தே ஒரு சேன்ஜுக்காக ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடித்துவிட வேண்டும் என விஜய் முனைப்புக்காட்டிக் கொண்டே இருந்தார். ஷங்கர் இயக்கத்தில் ‘3 இடியட்ஸ்’ ரீமேக்கில் ஸ்ரீகாந்த்-ஜீவாவுடன் சேர்ந்து வித்தியாச நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜய். ஒரே மாதிரியான படத்தில் நடிக்கிறார் எனத் தன் மீது விழுந்த விமர்சனங்களை மாற்றுவதற்காக விஜய் தொடர்ந்து எடுத்த முயற்சிகளில் ‘நண்பன்’ முக்கியமானது.

54. துப்பாக்கி – 2012

‘கில்லி’க்குப் பிறகு விஜய்க்கு அப்படியொரு வெறித்தனமான ஹிட் 2012-ல் ‘துப்பாக்கி’ மூலமே கிடைத்தது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டிராப் ஆக அந்த கால்ஷீட்டில் விஜய் நடித்த படம்தான் துப்பாக்கி. முருகதாஸ் இதுவரை பார்த்திராத ஒரு க்ளாஸான விஜய்யை திரையில் காண்பித்தார். ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்புக்கும் சரியான தீபாவளி ட்ரீட்டாக மாறியது ‘துப்பாக்கி’. 100 கோடி வசூல் செய்து விஜய்யை மீண்டும் கோலிவுட்டின் கலெக்‌ஷன் நாயகனாக மாற்றியது ‘துப்பாக்கி’.

55. தலைவா – 2013

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘நாயகன்’ வேலுபாய் பாணியில் விஷ்வா பாயாக விஜய் நடித்தப் படம் ‘தலைவா’. டைட்டிலுக்காகவே படத்திற்கு வந்த பிரச்னைகள்தான் அதிகம். ‘டைம் டூ லீட்’ என்ற சப்டைட்டில் ஆட்சித்தரப்பை கடுப்பேற்ற ரிலீஸில் பிரச்னையானது. மற்ற மாநிலங்களில் வெளியாகி 10 நாட்கள் கழித்துத்தான் தமிழகத்தில் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

56. ஜில்லா – 2014

மீண்டும் ஒரு முழுமையான மாஸ் கமர்ஷியல் படம். 2014 பொங்கலுக்கு அஜித்தின் ‘வீரம்’ படத்தோடு வெளியானது. ஆனால், ‘ஜில்லா’ எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.

57. கத்தி – 2014

‘துப்பாக்கி’ வெற்றிக்குப்பிறகு முருகதாஸுடன் இரண்டாவது முறையாக இணைந்தார் விஜய். இந்தப்படமும் ஹிட். ஜீவானந்தம் கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார் விஜய். விஜய்யின் லைஃப் டைம் கேரக்டர் என்றால் ஜீவானந்தம் கேரக்டர்தான். பதறியடித்து ஓடுவது, ஏமாற்றப்பட்டது தெரிந்து உடைந்து அழுவது போலீஸ் ஸ்டேஷனில் அடிபட்டு அமர்ந்திருக்கும் காட்சி, க்ளைமாக்ஸில் கதிரேசன் கேரக்டரிடம் தன் குடும்பத்தை சைகையிலேயே அறிமுகப்படுத்தும் காட்சி என ஜீவானந்தம் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜய்.

Vijay
Vijay

58. புலி – 2015

எந்த இமேஜும் பார்க்காமல் குட்டீஸை மனதில் வைத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘புலி’. ஆனால், வெற்றிப்படமாக அமையவில்லை.

59. தெறி – 2016

மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர் தேவைப்பட்ட நேரத்தில் அட்லியுடன் கூட்டணி சேர்ந்து சம்மர் ரிலீசாக இறங்கியடித்த படம் ‘தெறி’. மூன்று விதமான கெட்டப், நைனிகாவுடனான க்யூட் சேட்டைகள், நல்ல ரிவெஞ்ச் என தனது ஸ்டைலில் விஜய்க்கு ஒரு ஃபீல் குட் படத்தை கொடுத்தார் அட்லீ. க்ளாஸ்+மாஸ் அவதாரில் ரசிகர்களை விஜய் வெகுவாக கவர்ந்தார். படமும் 2016 சம்மரின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

60. பைரவா – 2017

கிரிக்கெட் ஃபைட், பெட்ரோல் பங்க் சீன், இன்டர்வெல் ஃபைட் என விஜய்க்கான மாஸ் மொமன்ட்ஸை கச்சிதமாக வைத்திருப்பார் இயக்குநர் பரதன். டயலாக்ஸும் பிரமாதப்படுத்தியிருப்பார். கதை திரைக்கதையில் மட்டும் இன்னும் பட்டி டிங்கரிங் பார்த்திருந்தால் பெரிய ஹிட் ஆகியிருக்கும்.

61.மெர்சல் – 2017

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ப்ரமோட் செய்யப்பட்ட படம் என்றால் ‘மெர்சல்’தான். தயாரிப்பு நிறுவனத்தோடு அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டதால் வட இந்தியா வரை ‘மெர்சல்’ கிளப்பியது விஜய் – அட்லி கூட்டணி. வெற்றிமாறன் கேரக்டரில் விஜய்யின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த முறை விஜய்-ரஹ்மான் கூட்டணியில் ‘ஆளப்போறான் தமிழன்’ பட்டையைக்கிளப்பியது. 2017 தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ விஜய்யை நம்பர் 1 இடத்துக்கான ரேஸில் வேகமாக ஓடவைத்தது.

Vijay
Vijay

62. சர்கார் – 2018

விஜய்-முருகதாஸ் கூட்டணி ஹாட்ரிக் அடிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கொஞ்சம் சறுக்கியது. வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றாலும் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ கொடுத்த தாக்கத்தை சர்கார் கொடுக்கவில்லை.

63. பிகில் – 2019

வெறித்தனமான விஜய் ரசிகர் என்பதால் விஜய் வெரைட்டியாக காட்டுவதில் அட்லியை அடித்துக்கொள்ள ஆளில்லை. ‘பிகில்’ படத்திலும் ராயப்பன்-மைக்கேல் என இரண்டு கேரக்டரில் விஜய்யை வெறித்தனமாக காண்பித்திருப்பார் அட்லி. மூன்றாவது முறையாக சேர்ந்த இந்த கூட்டணி கோலிவுட்டின் பல வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்கி விஜய்யை நம்பர் 1 ஆக்கியது.

மாஸ்டர் – 2021

‘மாநகரம்’, ‘கைதி’ போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். வழக்கமான பாணிகளை உடைத்து கொஞ்சம் வித்தியாசமாக ஆல்கஹாலிக்கான கதாபாத்திரத்தை விஜய்க்காக லோகேஷ் உருவாக்கியிருந்தார். கூடவே, டெட்லி வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்ததால் படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. 2020 ஏப்ரல் 9 ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் லாக்டெளன் காரணமாக வெளியிட முடியாமல் தள்ளிக்கொண்டே போனது. பல பெரிய படங்கள் ஓடிடி-க்களை நோக்கி படையெடுக்க விஜய் மட்டும் திரையங்கங்களை முழுமையாக நம்பி காத்திருந்தார். ஒரு வழியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு படம் ரிலீஸானது. எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக ரசிகர்களின்றி வெறிச்சோடி போயிருந்த தியேட்டர்கள் மாஸ்டர் படத்தால் திருவிழாக் கோலம் பூண்டன.

பீஸ்ட் :

தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருக்கும் விஜய் அடுத்த படத்திற்கு எந்த இயக்குநரை டிக் அடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு கூடியிருந்தது. பல பெரிய இயக்குநர்களின் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இறுதியாக ‘கோலமாவு கோகிலா’ ‘டாக்டர்’ படங்களின் இயக்குநரான நெல்சன் திலீப்குமாரை விஜய் தேர்வு செய்யப்பட்டார். படப்பிடிப்பு நிலையில் இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஒரு உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் வரை தன்னுடைய மார்க்கெட்டை விரிவுபடுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடாகவே இது இருக்கிறது. ஆல் ஏரியாலயும்..!

நன்றி : சினிமா விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More