இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று செப்டம்பர் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை நான்கு மணிக்கு நிறைவுக்கு வந்தது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக களமிறங்கி உள்ளார்.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவில் வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மதியம் 12 மணியளவிலேயே 51.7 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கொழும்பில் வாக்களித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் கிட்டத்தட்ட 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி, இன்று நள்ளிரவுக்குள் தபால் வாக்குகளின் முதல் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருப்பு வாக்குகள் எண்ணப்படும் நிலை ஏற்பட்டாலும் நாளை (22) தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணியை முடித்துவிடுவோம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.