Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் அழகுக்கு அழகு சேர்ப்போம்!

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

6 minutes read

ஹோம் பார்லர்

லாக் டௌனில் பார்லர் செல்ல முடியாததால், வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய அழகுப் பராமரிப்புகளைப் பல பெண்களும் இந்த ஊரடங்கில் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

ஆனால், அதற்கான சரியான வழிகாட்டல் பலருக்கும் கிடைக்கப் பெறவில்லை. எனவே, ‘அழகுக்கு அழகு சேர்ப்போம்’ என்ற இலவச ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்பை நடத்தியது அவள் விகடன். அதில் காஸ்மெட்டாலஜிஸ்ட் வசுந்தரா, சருமப் பாதுகாப்பு முதல் கேசப் பராமரிப்பு வரை பெண்களுக்கு வழிகாட்டினார். அந்த இரண்டு மணி நேர வொர்க்‌ஷாப்பில், பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை வைத்தே பியூட்டி சிகிச்சைகள் செய்துகொள்ள கற்றுக்கொடுத்தார். பயிற்சியின் இறுதியில் வாசகிகள் பகிர்ந்துகொண்ட சந்தேகங்களும், அவற்றுக்கு வசுந்தராவின் பதில்களும் இங்கே…

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்துக்கு என்ன தீர்வு?

பாதாம் எண்ணெய், கற்றாழைச்சாறு, ரோஸ் வாட்டர் கலவையை கருவளையம் இருக்கும் பகுதியிலோ, முகம் முழுக்கவோ அப்ளை செய்யவும். 10-15 நிமிடங்கள் வைத்திருந்து, சோப்பைத் தவிர்த்து வெறும் தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் கருவளையம் படிப்படியாக மறையும்.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட…

பொடுகு, ஒரு வகையான பூஞ்சையால் ஏற்படுகிறது. சிலருக்கு அது வேகமாகவும், சிலருக்கு மெதுவாகவும் பரவும். சிலருக்கு என்ன செய்தாலும் நீங்காது. காரணம், அவர்கள் ஸ்கால்ப்பின் தன்மை. மரபும் அதற்குக் காரணமாக இருக்க லாம். பொடுகை எதிர்க்க ஆன்டி ஃபங்கல் ஷாம்பூ சிறந்தது. அவற்றில் உள்ள சல்பர் பொடுகை நீக்க வல்லவை.

இயற்கை முறையைப் பின்பற்ற நினைப்பவர்கள், முதல் நாள் இரவு ஊறவைத்த வெந்தயத்தை அடுத்த நாள் அரைத்து, தயிர் சேர்த்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்க் கலவையையும் பயன்படுத்தலாம்.

முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது?

சராசரியாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிர்ந்து, புதிய முடிகள் முளைப்பது இயல்புதான். Anagen, Catagen, Calogen என்று முடி வளர்ச்சி சுழற்சியை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். சிலருக்கு, முடி முளைக்கும் முதல் நிலையிலிருந்து, முடி வளரும் இரண்டாவது நிலை விரைவாகக் கடக்கப்பட்டு, முடி உதிரும் இறுதி நிலைக்கு விரைவாகத் தள்ளப்படுவதால் முடி சீக்கிரமாக உதிரலாம். உடல்நிலை, ஊட்டச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம் போன்றவையும் காரணமாக இருக்கலாம். தலைக்கு எண்ணெய் வைத்து ரத்த ஓட்டத்தைத் தூண்டும் வகையில் மசாஜ் செய்வது, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியமான இரும்புச்சத்து, புரதம், கால்சியம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

இளநரைப் பிரச்னைக்கு…

இதற்கு உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததே காரணம். நிறமி உற்பத்திக்கு பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் அவசியம். பி வைட்டமின்கள் குறைவாக உள்ள உணவு முறையால் மெலனின் உற்பத்தி குறைந்து கேசம் நரைக்கிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுதல், கேசத்துக்கு எண்ணெய் மசாஜ் செய்தல், பேக் போடுதல் என முயற்சி செய்யலாம். ஹேர் கலரிங் செய்யும்போது அமோனியா ஃப்ரீ ஹேர் கலரை உபயோகிப்பது நல்லது. ஹெர்பல் ஹேர் கலர் பயன்படுத்துவது சிறப்பு.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

பருக்களையும் அது ஏற்படுத்தும் தழும்புகளையும் நீக்க டிப்ஸ்…

சருமத்தில் அதிக எண்ணெய்ப் பசை ஏற்படும்போது பாக்டீரியா வும் எண்ணெயும் சேர்ந்து பரு உருவாகலாம். எனவே, முகத்தை அடிக்கடி மைல்டு ஃபேஸ்வாஷ் கொண்டு கழுவலாம். முல்தானி மெட்டி, கஸ்தூரி மஞ்சள், கறிவேப்பிலை ஆகியவற்றைக் கலந்து ஃபேஸ் பேக்காகப் போடலாம். பருவைக் கிள்ளும்போது அதிலுள்ள தொற்று சுற்றியிருக்கும் இடங்களிலும் பரவி பரு அதிகமாகும். பருவைக் கிள்ளி எடுக்கும்போது அங்கு குழி ஏற்படலாம். எனவே, பருக்களைத் தொடாமல் இருப்பது நல்லது.

மருக்களை நீக்குவது எப்படி?

40 வயதுக்கு மேல், பலருக்குக் கழுத்துப் பகுதியில் மருக்கள் வருகின்றன. செயினால் ஏற்படும் உராய்வு, கழுத்தில் தங்கும் வியர்வை போன்றவை இதற்குக் காரணமாக இருக்க லாம்.

கஸ்தூரி மஞ்சள், வேப் பிலையை அரைத்து மருவில் தொடர்ந்து போட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும். சில மருக்களை எலெக்ட்ரிக் காட்ரைசேஸன் அல்லது லேசர் முறையில் எடுக்க வேண்டியிருக்கலாம்.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

பாத வெடிப்புக்கு…

கால்களில் ஈரப்பதம் குறைவதால் தான் வெடிப்பு ஏற்படுகிறது. ஃபுட் க்ரீம், ஃபுட் பாம்ஸ் உபயோகிக்கலாம். வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்களை உபயோகித்தால் பித்த வெடிப்பு குறையும். பெடிக்யூர் பண்ணுவது நல்லது. அல்லது வீட்டில், மிதமான சூட்டிலிருக்கும் வெந்நீரில் கால்களைச் சிறிது நேரம் வைத்துவிட்டு, சூடு ஆறிய வுடன் ஷாம்பூ போட்டுக் கழுவலாம். பின் மாய்ஸ்சரைஸர் போட்டுக் கொள்ளலாம். கால் வெடிப்பில் ரத்தம் வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

பிளாக் ஹெட்ஸ் ரிமூவ் செய்ய…

சருமத் துவாரங்களில் அழுக்கு அடைவதே பிளாக் ஹெட்ஸ். பருக்கள் வந்து போன இடத்திலும் இது வரலாம். கன்னம், மூக்கு ஆகிய பகுதிகளில் இது அதிகம் காணப்படும். பிளாக் ஹெட்ஸை நாமாக எடுக்கக் கூடாது. இப்போது இதை எடுக்க பார்லர்களில் பல புதிய சிகிச்சை முறைகள் உள்ளன. அதைப் பின்பற்றலாம்.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

உதடு கருமை நீங்க…

மரபு, உதட்டைக் கடிப்பது என இதற்கான காரணங்கள் பல. கருமையான உதடுகளுக்கு மிதமான வெந்நீர் ஒத்தடம் கொடுக்கவும். பின்பு லிப் பாம் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களைச் சர்க்கரை நீரில் கலந்து உதடுகளில் வைத்து வர, கருமை நீங்கி உதட்டின் நிறம் மாறும்.

அக்குள் பகுதி கருமையை நீக்குவது எப்படி?

பால், தேன், பால் பவுடர் கலந்து (திக் பேஸ்ட்டுக்காக), அதில் இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணெய்விட்டு, அந்தக் கலவையை அக்குள் பகுதியில் அப்ளை செய்து அழுத்தித் தேய்க்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து பஞ்சால் துடைத்தெடுக்கவும். இதைத் தொடர்ந்து செய்துவர பலன் கிடைக்கும். அக்குளில் ஹேர் ரிமூவ் செய்ய அதிக கெமிக்கல்ஸ் உள்ள க்ரீமை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வேக்ஸிங் செய்யலாம்.

அழகுக்கு அழகு சேர்ப்போம்!

கழுத்துப்பகுதி கருமையிலிருந்து விடுபட…

இப்போது இது மிகவும் பரவலாக உள்ளது. வளரிளம் பருவத்தில் ஆண் பெண், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு எடை அதிகமாகும் போது ஹார்மோன் மாற்றத்தால் கருமை கூடுகிறது. இது ‘Dirty neck syndrome’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ஓட்ஸ் மற்றும் தேனைப் பயன்படுத்தலாம். ஓட்ஸைப் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்தால் அது மிருதுவாகிவிடும். அதனுடன் தேன் கலந்து கழுத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி : விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More