Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அந்த ஒரு நிமிடம் | சிறுகதை | விமல் பரம்

அந்த ஒரு நிமிடம் | சிறுகதை | விமல் பரம்

15 minutes read

அதிகாலை ஐந்து மணிக்கு வழமைபோல் விழிப்பு வந்து விட்டது. அவசரமாய் படுக்கையை விட்டு எழுந்து ஓடத் தேவையின்றி கண்களை மூடியபடி படுத்திருந்தேன்.

எனக்கு வேலையில்லை மகனுக்குப் படிப்பில்லை. வேலைக்கும் பள்ளிக்கும் போவதால் அமளிப்படும் காலைப்பொழுது சத்தமின்றி உறங்கிக் கொண்டிருந்தது.

நாடு விட்டு நாடு பரவி அனைவரையும் கதிகலங்க வைக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸினால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் காலமிது. இப்படியொரு நிலமை வரும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது.

அன்றாட வருமானத்துக்காக ரெஸ்றோரண்டில் வேலை செய்யும் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம்.

படிக்க வேண்டிய காலங்களை அலட்சியமாகக் கடந்ததின் பலனை லண்டனுக்கு வந்த இந்தப் பன்னிரண்டு வருடங்களில் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் எந்த வேலைக்குப் போனாலும் நிரந்தரமாய் நிற்பதில்லை. என் கோபமும் பொறுமையின்மையும் பல வருடங்களை வீணாக்கி விட்டது.

அனுபவம் தரும் பாடங்கள் காலப்போக்கில் மனதைப் பக்குவப்படுத்தி விடுகிறது.

கடந்த ஆறு வருடங்களாக ‘லண்டன் ரெஸ்றோரண்’டில் தொடர்ந்து வேலை செய்து படிப்படியாக முன்னேறி வர அதற்குத் தடையாக கொரோனா நோயின் தாக்கம் அதிகரிக்க ரெஸ்றோரண்டை மூடி விட்டார்கள். பயந்து கொண்டு வீட்டிலிருக்க முடியவில்லை.

சூப்பர்மார்க்கட்டில் வேலை கிடைத்தது.

“கொரோனா வந்து கணக்கில்லாமல் சனங்கள் சாகுதுகள். எல்லா சனமும் வந்து போற இடம் பயமாயிருக்கு முரளி கவனமாய் இருங்கோ” வேலை கிடைத்ததும் செல்வி சொன்னாள்.

வேலையைத் தொடங்கினேன்.

முகத்துக்கு மாஸ்க்கும் கைக்கு கிளவுஸும் போட்டு வேலை செய்தாலும் அடிமனதில் பயம் இருந்து கொண்டே இருந்தது.

ரெஸ்றோரண்டில் வேலை செய்த மகேந்திரனும் என்னோடு வந்து இங்கு வேலை செய்கிறான். வேலையில் கிடைத்த நல்ல நண்பன். வேலையில் தொடங்கிய நட்பு குடும்பமாய் வீட்டுக்கு வந்து போகுமளவுக்கு வளர்ந்தது. என் குணத்துக்கு முற்றிலும் மாறுபட்டவன். பொறுமையும் நிதானமும் அவனோடு கூடப் பிறந்தவை. எந்த விஷயத்தையும் சிரித்த முகத்தோடு கையாளக் கூடியவன். அவனோடு பழகியபின் என்னில் நிறைய மாற்றங்களை என்னாலேயே உணர முடிந்தது.

தொடர்ந்து ஒரு கிழமை அவன் வேலைக்கு வரவில்லை.

‘வேலைக்கு வந்தால்தானே எங்களுக்கு சம்பளம்’ என்று சொல்லுபவன் தேவையில்லாமல் லீவு எடுக்க மாட்டான். ஏன் வரவில்லை என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

அவனுக்கு போன் எடுத்தேன். பிறகு எடுப்பதாகச் சொன்னான். வீட்டுக்குப் போய் சந்திப்பதை இந்த நேரங்களில் தவிர்த்து இருந்ததால் போகவும் முடியவில்லை. அன்றிரவு வானதியிடம் இருந்து செல்விக்கு போன் வந்தது. எடுத்து கதைத்தபோது அழும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு செல்வியும் அழுதாள். எனக்கு படபடப்பாக இருந்தது.

“மகேந்திரன் தலையிடி தொண்டை நோ எண்டு வீட்டில நிண்டவராம் இடைக்கிடை காய்ச்சல் வந்து மருந்தும் எடுத்ததாம். காய்ச்சல் விட்ட பிறகு உடம்பு நோகுது எண்டு நெடுகவும் படுத்திருப்பாராம். இண்டைக்கு மூச்சுத்திணறல் வந்து மயங்கி விழுந்திட்டாராம்.

கொஸ்பிற்றலுக்கு அடிக்க விபரம் கேட்டு அம்புலன்ஸில வந்து பரிசோதனை செய்து ஒக்சிஜன் லெவல் குறைவு எண்டு முகத்துக்கு ஒக்சிஜன் மாஸ்க் போட்டு ஏத்திக் கொண்டு போயிற்றினமாம். பயமாயிருக்கு எண்டு அழுகிறாள். ஒருகிழமைக்குள்ள இப்பிடி சீரியஸாகுமா, கொரோனா வந்தால் பயம்தானே முரளி. இனி இரண்டு பிள்ளைகளோட தனிய இருந்து என்ன செய்யப் போறாள்”

செல்வி அழுகையோடு சொன்னதும் எனக்கு கோபம் வந்து அவளை அதட்டினேன்.

“எத்தனை பேர் சுகப்பட்டு திரும்பி வருகினம் இவன் போய்ச் சேர்ந்த மாதிரி அழுகிறாய். வருவான் பிள்ளைகளுக்காக வருவான். வீட்டுக்கு போகேலாது. போன் எடுத்து அடிக்கடி வானதியோட கதை. சமையல் சாப்பாட்டைப் பற்றியும் கேள்” என்றேன்.

சாமான்களுக்கு தட்டுப்பாடு வரும் என்று மகேந்திரனும் வாங்கி வைத்திருந்ததால் இந்த நேரங்களில் அவர்களின் சாப்பாட்டுக்கு கஷ்டம் வராதென்று ஆறுதலாக இருந்தது.

நான் போன் எடுத்தபோது சொல்லி இருக்கலாமே. ஏன் சொல்லவில்லை. மகேந்திரனுக்கு தெரிந்திருக்கிறது. கொரோனா என்ற பேரைச் சொல்லத் தயங்கி மறைத்திருக்கிறான். உள்ளுக்குள் நோய் நன்றாகப் பரவி விட்டது. உடனே சொல்லி இருந்தால் இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது.

அவனைப் போய் பார்க்க முயன்றும் முடியவில்லை அருகிலிருந்து ஆறுதல் சொல்லவும் வழியில்லை. தனிமையில் வேதனையை அனுபவிப்பது எவ்வளவு கொடுமை.

அவன் நினைவாகவே இருந்தது.

நல்ல நண்பனை இழந்து விடுவேனோ என்று நினைக்க மனம் பதறியது.

வானதி மகேந்திரனைப் பார்க்க எவ்வளவோ முயன்றும் ஒரு கிழமைக்குப் பின்தான் பார்க்க அனுமதித்தார்கள். தாயோடு போய் பார்த்து விட்டு வந்து செல்வியிடம் போனில் கதறி அழுதாள்.

“மெலிஞ்சு தளர்ந்துபோய் சுயநினைவு இல்லாமல் வென்ரிலேற்ரலில இருக்கிறதைப் பார்த்தேனே செல்வி. இந்தக் கோலத்தைப் பார்க்கவா போனேன். பயமாயிருக்கு செல்வி”

திரும்ப திரும்ப சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவளோடு சேர்ந்து செல்வியும் அழுதாள்.

அடுத்த நாள் இடி வந்து இறங்கியது. என்னால் தாங்க முடியவில்லை. உள்ளுக்குள் நொருங்கிப் போனேன். நாற்பத்தைந்து வயது சாகிற வயதா. ஓடி ஓடி கஷ்டப்பட்டு உழைக்கிறவன் வாற வருமானம் குறைவாய் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவிற குணம் அவனுக்கு. இரண்டு பிள்ளைகள் மூத்தவனுக்கு ஒன்பது வயது. அடுத்தவனுக்கு ஆறு வயது என் மகனின் வயது.

“பிள்ளைகளைப் படிப்பிக்க வேணும். ஸ்போர்ட்ஸ் பழக விட வேணும். பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர நாங்கள் நிறைய உழைக்க வேணுமடா. காசு சேர்த்து குடும்பத்தையும் சந்தோஷமாய் வைச்சிருக்க வேணும், கஷ்டப்பட்டவைக்கும் உதவ வேணும்” நிறைய கனவுகளோடு அடிக்கடி என்னிடம் சொல்லுவான்.

அடுத்தவர்களுக்கு உதவும் குணமும் அதனால் கிடைக்கும் மனத்திருப்தியும் அவனிடம் இருந்து கற்றுக் கொண்டவைதான்.

“உழைக்கத்தானே வந்தனாங்கள். உழைச்சு எங்கட ஊருக்கு, படிச்ச ஸ்கூலுக்கு செய்வம்”

“இரண்டு பேரும் சேர்ந்து நிறைய செய்ய வேணும்” என்று சொன்னவன் தன் குடும்பத்தையே பரிதவிக்க விட்டுப் போய் விட்டானே.

வானதி எப்படித் தாங்கி எழப் போகிறாள். அப்பா எங்கே என்று தேடும் அந்த இரண்டு குழந்தைகளை எப்படி சமாதானப் படுத்தப் போகிறாள், அவர்களை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்படப் போகிறாள் என்று நினைக்கத் தாங்க முடியவில்லை.

செல்வியின் கண்களும் அழுகையில் சிவந்திருந்தது.

“வானதியின்ர அம்மாவும் அண்ணாவும் வந்து நிக்கினமாம். கேட்டதும் ஆறுதலாயிருக்கு” என்றாள்.

அண்ணாவோடு கதைத்தேன்.

“தகனம் செய்யிறதுக்கு திகதி இன்னும் கிடைக்கேல. கிடைச்சதும் அறிவிப்பாங்களாம்” என்றார்.

போன் மூலமே துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தோம்.

செய்திகளைப் பார்க்கும்போது நாளாந்தம் அதிகரித்து வரும் இறக்கும் தொகை ஆயிரங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. அதில் இவனும் ஒருத்தனாகி விட்டானே என்று நினைக்க நெஞ்சு வலித்தது.

“எனக்கு பயமாயிருக்கு முரளி. நீங்களும் இனி வேலைக்குப் போக வேண்டாம். முதல் உயிர்தான் முக்கியம்” என்று சொன்னவளைப் பார்த்தேன்.

“வீட்டில கொஞ்சநாள் இருக்கலாம். பிறகு என்ன செய்யிறது. நோயும் பரவிக் கொண்டே போனால் பழைய நிலைமைக்கு எப்ப வருமோ தெரியேல. நாங்கள் என்ன உழைச்சு வைச்சிருக்கிறமோ இல்லை வீட்டில இருந்தபடி கொம்பியூட்டர் வேலை செய்யிறதுக்கு படிச்சிருக்கிறமோ. கிடைச்ச வேலைக்குப் போகத்தானே வேணும். நான் கவனமாய் இருக்கிறன்”

“மகேந்திரன் மாதிரி நீங்களும் வேலை உழைப்பு எண்டு போறியள். சொன்னாலும் கேட்கிறேல. நாங்கள் பயந்து கொண்டு இருக்க வேண்டியிருக்கு. எந்தக் காலம் எல்லாரும் நிம்மதியாய் இருக்கப் போறோமோ” முணுமுணுத்துக் கொண்டு போனாள்.

எனக்கு ஊரிலிருக்கும் அப்பா அம்மாவின் நினைவு வந்தது. இருவரும் ஆசிரியர்களாக இருந்து கொண்டு என் படிப்புக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். இருவரும் வேலைக்குப் போவதால் நான் அப்பம்மாவோடு வளர்ந்தேன். மூத்தபேரன் என்ற செல்லத்தோடும் மற்றவர்களின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்ததால் திமிரும் நினைத்தது நடக்க வேணும் என்ற பிடிவாதமும் அதிகமாகி படிப்பில் கவனம் போகவில்லை.

அப்பம்மா இறந்தபின் அப்பா அம்மாவிடம் வந்திருந்தேன். அவர்கள் படிக்க நெருக்கியதில் படிப்பில் வெறுப்பு அதிகமானதே தவிர ஆர்வம் வரவில்லை. அவர்களின் கண்டிப்பில் தட்டுத்தடுமாறி க.பொ.த உயர்தரத்துக்கு வந்ததும் எண்ணங்களும் உயரப் பறக்கத் தொடங்கியது. படிப்பதற்கு பரந்தனில் இருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குப் போனேன். சைக்கிளில் ஓடித் திரிந்த எனக்கு மோட்டர்சைக்கிள் ஓடும் ஆசை வந்தது.

“இனியாவது கவனமாகப் படியடா. படிச்சு யுனிவெர்சிடிக்குப் போனால் உன் எதிர்காலம் நல்லாயிருக்கும். நீ ஆசைப்பட்டது எல்லாம் வாங்கலாம்” அப்பா சொன்னார்.

“படிக்கிறன் மோட்டர்சைக்கிள் வாங்கித் தாங்கோ” பிடிவாதம் பிடித்து அதையும் வாங்கினேன்.

அதில் படிக்கும் இடங்களுக்குப் போவதை விட விளையாட்டு மைதானம் போவதற்கும் நண்பர்களோடு சுற்றித் திரிவதற்குமே ஓடித் திரிந்தேன்.

“கேட்டதெல்லாம் வாங்கிக் குடுக்கிறீங்கள். அவனுக்குப் பணத்தின்ர அருமையும் தெரியேல படிப்பின்ர முக்கியத்துவமும் தெரியேல. அதைச் சொல்லி புரிய வையுங்கோ. எதிர்காலத்தில அவன்தான் கஷ்டப்பட போறான்”

அப்பாவின் நண்பர் சொன்னதைக் கேட்டு

“அப்பா வாங்கித் தாறார் உங்களுக்கென்ன” அவர் மீது கோபம் வந்தது.

யார் சொல்லியும் கேளாமல் என் இஷ்டப்படியே சுற்றித் திரிந்தேன். பரீட்சையில் கோட்டைவிட்டேன். மோட்டர்சைக்கிளால் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு உயிர் தப்பினேன். அதோடு படிப்பையும் விட்டேன்.

வெளிநாட்டு ஆசை வந்தது. என் பிடிவாதத்தால் இங்குள்ள ஒன்றுவிட்ட அக்கா மூலம் வந்து இறங்கினேன். நினைத்தது எல்லாம் நடக்கிறது என்ற சந்தோஷத்தில் மிதந்தேன். அவர்களோடு வந்திருக்க கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கவே தனியாக வந்து விட்டேன். அதன் பின்னர்தான் எனக்கு நிதர்சனங்கள் புரிய ஆரம்பித்தது.

கஷ்டம் வரும்போது பணத்தின் பெறுமதி தெரிந்தது.

வேலை தேடும்போது படிப்பின் அருமை புரிந்தது.

என் முன்கோபத்தால் எத்தனை வேலைகளை இழந்து இருக்கிறேன். நண்பர்கள் கிடைத்தாலும் நீடித்து நிற்பதில்லை. உள்ளத்தால் நொந்து உணரும் போதுதான் என் வாழ்வில் செல்வி வந்தாள். உருகிய உள்ளத்தில் அவளின் அன்பும் அரவணைப்பும் ஆழப் பதிந்தது. என் கோபத்தால் அவள் சுருங்குவதைப் பார்த்து நெகிழ்ந்தேன். மகேந்திரனின் நல்ல நட்பும் கிடைத்தது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும் பொறுமையும் வந்தது.

என் மாற்றம் எனக்கே வியப்பாக இருந்தது. கோபத்தைக் குறைத்துக் கொண்டதும் வேலையில் பிரச்சனைகள் வரவில்லை. ஆறு வருடங்கள் விருப்பத்தோடு ஒரே வேலையை செய்து வந்தேன். செல்வி என் உழைப்பில் ஒருதொகையை அப்பா, அம்மாவிற்கும் அனுப்பிக் கொண்டிருந்தாள். அவர்களை எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். ஒரு பிள்ளைக்குத் தந்தையான பின்தான் அவர்கள் என்னோடு பட்ட கஷ்டங்கள் நன்றாகப் புரிந்தது. இனி அவர்களை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கனவுகளோடு படிப்படியாக முன்னேறி கையில் பணம் சேரும்போது இப்படியாகி விட்டதே.

மகேந்திரன் போனபின் என்னாலும் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. உயிரைப் பணயம் வைத்து விளையாடுவது போலிருந்தது. செல்வி சொல்வதுபோல் அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் குறைந்ததும் வேலைக்குப் போகலாம் என்று முடிவு எடுத்தேன். அவனின் இழப்பு பயங்கரமாய் என்னைத் தாக்கியதால் மனதால் மட்டுமன்றி உடலாலும் சோர்ந்து போனேன்.

இரண்டு நாளாய் ஒரு வேலையும் செய்ய மனமின்றி படுத்திருந்தேன்.

“ஏன் சோர்ந்து படுத்திருக்கிறீங்கள். எனக்கு பயமாயிருக்கு” சொல்லிக்கொண்டு நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் செல்வி.

“எனக்கு ஒண்டுமில்லை. அவன் போனது தாங்கேலாமல் இருக்கு”

“போனவனை நினைச்சு கவலைப்படுறீங்கள். வானதியை நினைக்க எனக்கு கவலையாயிருக்கு. படிக்கிற பிள்ளைகள், அதுகளின்ர எதிர்காலம் என்ன செய்யப் போறாள்”

அவனின் இழப்பு குடும்பத்தை எப்படியெல்லாம் பாதிக்கப் போகிறது.

இரவு ஆழ்ந்த உறக்கம் இல்லாததால் விடிய எழும்பும்போது கண் சிவந்து தலைப்பாரமும் தலையிடியுமாய் இருந்தது. மகேந்திரன் போனதை நினைத்து கவலைப்படுவதால் இப்படி இருக்கிறதா… மனதுக்குள் ஒரு பயம் வந்தது. ஏற்கனவே கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் செல்வியிடம் சொல்ல மனம் வரவில்லை. இது கொரோனாவின் அறிகுறியா இல்லையா என்று சோதித்துப் பார்க்க நினைத்தேன்.

கொஸ்பிற்ரலோடு கதைத்து அவர்கள் தந்த நேரத்திற்கு, வீட்டுக்கு அருகிலுள்ள கொரோனா நோயைக் கண்டு பிடிப்பதற்கு திறக்கப்பட்டிருந்த சென்ரருக்கு காரில் போய் காத்திருந்தேன். இதயம் படபடத்தது. என் நேரம் வந்ததும் காரில் இருந்தபடியே கார் கண்ணாடியை இறக்கினேன். பாதுகாப்பு உடை அணிந்து என்னருகில் வந்தவர் என் அடித்தொண்டையிலும் மூக்கிலும் விட்டு சுவாப் ரெஸ்ட் செய்தார்.

வீட்டுக்கு வந்து காத்திருந்தேன். பயத்தில் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

பொசிற்றிவ் என்று வந்ததும் உறைந்து போனேன். கொஸ்பிற்ரலுக்கு போன் பண்ணியபோது பதின்நான்கு நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்படி சொன்னார்கள். செல்வியிடம் எப்படிச் சொல்வது தாங்கமாட்டாளே… மகேந்திரனைப் போல நானும் இவர்களை அநாதையாக தவிக்க விட்டுப் போய் விடுவேனோ….

கண்முன்னே ஒரு மரணத்தைப் பார்த்தபிறகு எந்த நம்பிக்கையில் நிம்மதியாக இருப்பது.

“அப்பா போரடிக்குது. விளையாட வாங்கோப்பா” ஒடி வந்து காலைக் கட்டிப் பிடித்துக் கெஞ்சும் மகனைத் தொடவே பயமாக இருந்தது.

என்னுடைய வெளிறிய முகத்தைப் பார்த்து செல்வி பயந்தாள். சொன்னதும் அழத் தொடங்கினாள்.

“பயமில்லை செல்வி இது ஆரம்பநிலைதான். வீட்டில கவனமாய் இருப்பம்”

“மகேந்திரனுக்கும் பயமில்லை வருவான் எண்டீங்கள். வரவேயில்லையே. எனக்கு பயமாயிருக்கு”

“எனக்கு ஆறுதல் சொல்லாமல் நீயும் பயந்து என்னையும் பயப்பிடுத்திறாய்”

செல்வி கிட்ட வந்து என்னை அணைத்துக் கொண்டு தலையை வருடினாள்.

“வேண்டாம் செல்வி. நீயும் எனக்கு கிட்ட வரவேண்டாம். பிள்ளை இருக்கிறான். அவனைக் கவனமாய் பார்க்கவேணும்”

“அவனை நினைக்கத்தான் கவலையாய் இருக்கு. நீங்கள் வீட்டில இருந்தால் அப்பா அப்பா எண்டு உங்களையே சுத்திக் கொண்டு இருக்கிறவனை அப்பாட்ட போகாத எண்டு சொன்னால் கேக்க மாட்டான். அழப் போறான்” என்றாள்.

வீடு முழுவதும் கிருமிநாசினியினால் துடைத்து எடுத்தாள். ஒரு அறையில் என் பொருட்களோடு இருக்கத் தொடங்கினேன். நேரத்துக்கு நேரம் சாப்பாடுகளைக் கொண்டு வந்து அறை வாசலில் தருவாள். கதவு மூடியபடி இருந்தது. என்னைக் காணாமல் மகன் தேடுவது தெரிந்தது.

“அப்பா எப்ப வருவாரம்மா. அப்பாவோடதான் படுப்பன் எனக்கு அப்பா வேணும்” அழுது அடம் பிடிக்கும் குரலும்

“வருவாரடா உன்னை விட்டிட்டு அப்பா எங்க போகப் போறார். இப்ப அம்மாவோட படு. அப்பா வந்து உனக்குப் பக்கத்தில படுப்பார்”

சமாதானப்படுத்தும் குரலும் கேட்டுக் கொண்டிருந்தது.

அறையில் இருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு நாளும் போகப்போக அப்பா வேணும் என்ற பிடிவாதத்திற்கும் அழுகைக்கும் ஈடு கொடுக்க முடியாமல் செல்வி திணறிக் கொண்டிருந்தாள்.

கடவுளே எனக்கு ஏதாவது நடந்தால் பிள்ளையோட செல்வி எப்பிடிச் சமாளிப்பாள். அப்பா எங்கே என்ற ஏக்கத்துடன் வளருவானே..

மகேந்திரனின் பிள்ளைகளை நினைத்தேன். அப்பா இல்லை என்று அவர்களுக்கு இருக்கும் வலியும் வேதனையும் வாழ்நாள் முழுவதும் தொடருமே. அன்பான தந்தையோடு வாழக் கொடுத்து வைக்கவில்லையே. எனக்கு அப்பா அம்மாவின் நினைவு வந்தது.

அம்மாவுக்கு போன் எடுத்தேன். என் குரலைக் கேட்டதும் சந்தோஷத்துடன்,

“எப்பிடியப்பு இருக்கிறாய். எல்லாரும் கவனமாய் இருங்கோ. கண்டபடி திரியாதேங்கோ. சனத்தின்ர சாவும் கூடிக்கொண்டு போகுது. உங்கத்த நியூசைப் பார்க்க பயமாயிருக்கு”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சொன்னால் இருவரும் பயந்து விடுவார்கள்.

“ஒரு பயமும் இல்லையம்மா. நீங்களும் கவனமாய் இருங்கோ” சொல்லி விட்டு போனை வைத்தேன். மனம் கனத்துப் போயிருந்தது.

அருகில் இருக்கும்போது அவர்களின் அருமை புரியவில்லை. என் எதிர்காலத்துக்காக என்னோடு போராடினார்களே அவர்களின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்தேனா. கண்ணுக்கு முன்னால் சொல்பேச்சு கேளாமல் சுற்றிக் கொண்டு திரிவதைப் பார்த்து எப்பிடித் துடித்திருப்பார்கள்.

இன்று என் மகனை அப்படி விடுவேனா… அவனின் சுதந்திரம் என்று கண்டிக்காமல் அவன் போக்கில் விடுவேனா…

நான்கு சுவர்களுக்கு நடுவே தனிமையில் நாளைக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கும்போது எல்லா நினைவுகளும் வந்து மூச்சு முட்டுவது போலிருந்தது. எழுந்து ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன். குளிர்காற்று வந்து முகத்தில் மோதி அமைதிப் படுத்தியது. வீதியில் வாகனத்தின் இரைச்சலையோ மக்களின் நடமாட்டத்தையோ காணவில்லை. மழை பெய்து ஓய்ந்தது போல் எங்கும் அமைதியாக இருந்தது.

ஆறாம் நாள் காலை எழுந்தபோது தொண்டைநோவும் தலையிடியும் லேசான காய்ச்சலும் இருப்பதைப் பார்த்து பயந்து விட்டேன். பரிசிற்றமோல் எடுத்த சிறிது நேரத்தில் காய்ச்சல் குறைந்துவிட்டது. தொடர்ந்து காய்ச்சல் இல்லையென்றாலும் ஒரு நாளைக்கு ஒருமுறை வந்தது. குணமான பின்பு எழுந்து நடமாட முடியாத அளவுக்கு உடம்பில் வலி இருந்தது. மூன்றாம் நாள் இருமல் வந்து தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தேன். என்னால் படுக்க முடியவில்லை. காய்ச்சலும் இருமலும் மாறி மாறி என்னை வதைக்கத் தொடங்கியதைப் பார்த்து தாங்கமுடியாமல் செல்வி அழுது கொண்டிருந்தாள்.

கொஸ்பிற்றலோடு கதைத்தபோது பரிசிற்றமோலை தொடர்ந்து எடுக்கச் சொன்னார்கள். இருமல் தொடங்கிய நாலாம் நாள் இருமலோடு மூச்சுத் திணறலும் வந்து மூச்சு விட முடியாமல் நடக்க முடியாமல் விழுந்துவிட்டேன்.

கொஸ்பிற்றலுக்கு அறிவிக்க அம்புலன்ஸ் வந்தது. நிலைமையைப் பார்த்து ஓக்ஸிஜன் மாஸ்க் போட்டார்கள். அதன்பின் மூச்சுத்திணறல் குறைந்தது. சோர்ந்து போனேன். அழுது கொண்டிருக்கும் செல்வியையும் மகனையும் பார்த்தேன். இவர்களைத் தவிக்கவிட்டுப் போகிறேனே திரும்பி வருவேனா… அம்மா அப்பாவை நினைத்ததும் தாங்கமுடியவில்லை. இருக்கும்போதும் கவலையைக் கொடுத்தேன். இனி தீராத துன்பத்தைக் கொடுக்கப் போகிறேனா… தாங்குவார்களா. செல்வி சொன்னதைக் கேட்டு இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். உடலும் மனமும் வலிக்க ஐயோ என்று கத்தி அழவேண்டும் போலிருந்தது.

ஏற்கனவே எனக்கு கொரோனா என்று உறுதிப் படுத்தியதால் கொரோனா நோயாளிகளுடன் என்னை விட்டிருந்தார்கள். இருமல் சத்தங்களும் வேதனையின் புலம்பல்களும் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு இருமல் குறைந்து இருந்தது. காய்ச்சல் வந்தபோது மருந்து தந்தார்கள். மாஸ்க் போட்டிருந்ததால் மூச்சும் விடக்கூடியதாக இருந்தது.

போன் எடுத்து செல்வியோடு கதைத்தேன். என் குரலைக் கேட்டு அழத் தொடங்கியவளுக்கு

“சுகமாய் இருக்கிறதாலதானே உன்னோட கதைக்கிறன் அழாத. பிள்ளை பயந்திடுவான். கவனமாய் இருங்கோ. நான் வந்திடுவன்” என்றேன்.

“அப்பா கெதியாய் வாங்கோ. நான் உங்களோட விளையாட வேணும். எனக்கு பெரிய கார் வேணும்”

மகனின் குரலைக் கேட்டதும் துக்கம் வெடித்துக் கொண்டு வந்தது. குரலில் காட்டக் கூடாது என்று அடக்கினேன். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவர்களோடு கதைத்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

இரவு எதிர் கட்டிலில் இருந்து தொடர்ச்சியாக இருமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நள்ளிரவுக்குப் பின் சத்தம் நின்று விட்டது. சிறிது நேரத்தில் ஆட்கள் நடமாட்டமும் வண்டில் நகர்த்தும் சத்தமும் கேட்டது. இதயம் ஒரு முறை நின்று அடித்தது.

அடிக்கடி நடக்கும் இச்சம்பவங்களால் மனம் தளர்ந்து போனது.

மனம் தளர்ந்து உயிர்ப்பயம் வரும்போது டொக்டர் சதானந்தனின் கனிவான முகம் கண்முன்னே தோன்றும். எங்களைப் பார்க்க வரும் போதெல்லாம் அன்போடும் வாஞ்சையோடும் அவர் சொல்வது நினைவுக்கு வரும்.

பயந்துபோய் இருக்கும் உள்ளங்களுக்கு மருந்தாய் அமையும் ஆறுதல் வார்த்தைகள்.

“பயந்து கொண்டிருந்தால் எதுவும் நடக்கலாம். பயப்பிடக் கூடாது தைரியமாய் இருக்க வேணும். அதுதான் உங்களைக் காப்பாற்றும்”

கொரோனா நோயாளிகளின் வைத்தியசாலைக்கு பொறுப்பாக இருக்கும் தமிழ் டொக்டர். நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் படித்து உயர்ந்த நிலைக்கு வந்தவர். இந்த நேரத்தில் இந்த பயங்கரமான சூழ்நிலையில் தெரிந்தவரைக் காணும் போதும் அவரின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்கும் போதும் என் மனதுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.

உயிரைப் பணயம் வைத்து இவரைப்போல் எத்தனை வைத்தியர்கள் எங்களைக் காப்பாற்ற போராடுகிறார்கள். அதில் சிலர் உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள். மருந்தே இல்லாத நோயோடு நாமும் போராட வேண்டும். பயந்து கொண்டிருந்தால் பாதி உயிர் போய்விடும். நினைத்த அந்த நிமிடம் பயம் விலகி தைரியம் வந்தது. மாஸ்கின் ஒக்சிஜன் அளவைக் குறைத்த பின்பும் சுவாசிக்கக் கூடியதாக இருந்தது. மனம் லேசானது.

எதிர்காலக் கனவுகள் கண்முன்னே விரிந்தன.

அப்பா அம்மா ஆசைப்பட்டதை மகன் மூலம் நிறைவேற்ற வேண்டும். அவனைப் படிப்பித்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும். என்னை நம்பி வாழவந்த செல்வி சந்தோஷமாய் இருக்க வேண்டும். நண்பனின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும். எத்தனையோ கடமைகளும் பொறுப்புகளும் எனக்காகக் காத்திருக்கின்றன. எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும். அதற்கு இதிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும். வருவேன்.

நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும்தானே வாழ்க்கை.

நான் காத்திருக்கிறேன்……!

நிறைவு..

– விமல் பரம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More