Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நடையில் வந்த பிரமை | சிறுகதை | முருகபூபதி

நடையில் வந்த பிரமை | சிறுகதை | முருகபூபதி

7 minutes read

.

மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும் பரிசில்களும் கௌரவங்களும் பெற்றிருப்பவர். இன்று வரை தனது இலக்கிய பாதையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

“வீடு திரும்பியதிலிருந்து என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

வீட்டின் விட்டத்தை பார்த்துக் கொண்டு திக்பிரமையுடன் இருந்த என்னை மனைவி பின்புறமாக வந்து தோளில் தட்டினாள்.

“ஒன்றுமில்லை” தொடர்ந்தும் மௌனமாக கைத்தொலைபேசியில் வாட்ஸ் அப் அலைப்பறைகளை பார்க்கின்றேன். எனது இளைய மகள் என்னை அநாவசியமாக இதற்குள் இழுத்து விட்டாள்.

தொடர்புக்கு மாத்திரம் இதுவரை காலமும் பாவித்த கைத்தொலைபேசியில் உலகமே அடங்கி விட்டது. தினமும் காலை எழுந்ததும், வாட்ஸ் அப்பில் வரும் வேடிக்கைகளுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி என்று ஒற்றை வரியில் பதில் கொடுக்காது விட்டாலும், ஏன்..? எதற்கு..? என்று விசாரிப்பதற்கும் ஒரு பெரிய வட்டம் உருவாகி விட்டது.

அந்த ஒற்றைவரிக்கு மேல் எதனையும் நான் எழுதுவதும் இல்லை. இன்று வெளியே நடைப்பயிற்சிக்கு சென்றபோது அறிந்த தகவல் உண்மையா..? கண்ட  காட்சி பொய்யா..? அவ்வாறாயின் நேற்று நான் அந்த எலிஸபெத்துடன் பேசியது வெறும் பிரமைதானா..?

கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக மனப்பிராந்தியும் வருமோ. வீட்டுக்குள் அதிக நேரம் அடங்கியிருப்பதனாலும், சமூக இடைவெளி பேணவேண்டி நேர்ந்தமையாலும் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் கூடியிருப்பதாகவும், சில சிக்கல்கள் விவாகரத்து வரையும் சென்று விட்டதாகவும், மன அழுத்தம் சமூகத்தில் கூடிவிட்டதாகவும் சொல்கிறார்களே..?

அவ்வாறாயின் எனக்கு இக்காலகட்டத்தில் என்ன நேர்ந்தது. பிள்ளைகளையும் கட்டிக்கொடுத்து பேரக்குழந்தைகளையும் பார்த்தாயிற்று. வீட்டுக்கடனும் தீர்ந்து வருடங்கள் ஓடிவிட்டன.

அரசாங்கம் தரும் ஓய்வூதியம் தாராளம். மருத்துவமனைக்கு அம்பூலன்ஸில் செல்ல நேர்ந்தாலும் ஓய்வூதிய அட்டை இருப்பதனால் எந்தக்கட்டணமும் இல்லை.

வாழ்க்கை நிம்மதியாக ஓடும்போது, உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக தினமும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது தானே அந்த எலிஸபெத் அறிமுகமானாள்.

புறநகர் வாழ்க்கையில் நடைப்பயிற்சிக்கு செல்கையில் தெருவில் காணுபவர்கள், “ஹாய்“ “ஹவ் ஆர் யூ..?“ “குட் டே“ என்று புன்னகையுடன் ஓரிரு சொற்களை உதிர்த்து விட்டு கடந்து சென்ற பலருக்கு மத்தியில் நடைக்கே வராமல், வீட்டு வாசலில் அல்லது முற்றத்தில் நின்றுகொண்டு என்னைக் கண்டதும் தரிக்கச்செய்து சில நிமிடங்களாவது உரையாடும் அந்த எலிஸபெத் உண்மையிலேயே இனிமேல் இல்லையா..?

அவ்வாறாயின் நான் கண்ட பெண் யார்..? அவளது உருவத்தில் அவளது சகோதரியா..? அப்படியும் இல்லை என்றுதானே, என்றைக்கும் என்னோடு பேசியிருக்காத அவளது கணவன் சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்னர் சொன்னான்.

நேற்று எலிஸபெத்தின் வீடு இருக்கும் பாதையில் செல்லும்போது, நீண்ட நாட்களின் பின்னர் அவளை மீண்டும் கண்டபோது, “ஹாய்… எப்படி இருக்கிறாய்..? பேரப்பிள்ளைகளை பார்க்க முடிந்ததா..? எப்போதுதான் நானும் எனது பேரப்பிள்ளைகளை பார்க்கப் போகிறேனோ தெரியவில்லை. சுகாதார அமைச்சரான அந்தப்பெண் தனது பதவியை துறந்திருக்கத் தேவையில்லை. இந்த கோவிட் 19 இலும் அரசியல் புகுந்து விட்டது. அடுத்த தேர்தலுக்கு கோவிட் 19 உம் பேசுபொருளாகும்“ என்றெல்லாம் சொன்ன எலிஸபெத்தை இனிமேல் என்னால் பார்க்கவே முடியாதா..?

நேற்றைக்கும் இன்றைக்கும் இடைப்பட்ட இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் எனக்குள் என்ன நேர்ந்துவிட்டது.

அவள் இறந்து ஒரு வாரமாகி விட்டது என்று அவளது கணவன் சொன்னானே.. அது பொய்யா..?

“இல்லை. என்னால் நம்பமுடியாது. நேற்றுத்தானே இந்த வீதியால் வரும்போது கண்டு பேசியிருந்தேன். உங்கள் மனைவி போன மாதம் எனக்குத்தந்த புத்தகம் இது“ எனச் சொல்லிக் கொண்டு, எலிஸபெத் எனக்கு படிக்கத்தந்திருந்த Handbook Of Diabetes புத்தகத்தை அந்த ஆளிடம் நீட்டினேன். வாங்குவதற்கு தயங்கினான்.

அந்தப்புத்தகத்தின் அட்டையிலும் கொரொனோ கிருமி இருக்கலாம் என்று யோசித்திருக்கலாம்.

“இது எலிஸபெத் உனக்குத் தந்த புத்தகமா..? இப்படி நிறைய வாங்கி வீட்டில் அடுக்கி வைத்திருந்தாள். ஆனால், உணவில் கட்டுப்பாடும் இல்லை. உன்னைப்போல் அவள் நடைப்பயிற்சிக்கும் செல்வதில்லை. உடல் பெருத்தது தான் மிச்சம். அவளது சேகரிப்பிலிருந்த இதுபோன்ற ஏராளமான புத்தகங்களை லைஃப் லைன், சல்வேசன் ஆமிக்கு கொடுத்து விட்டேன். நீயே இதனை வைத்துக்கொள். நிலைமை சீரடைந்த பிறகு நானும் இந்த வீட்டை விற்று விட்டு போய் விடுவேன். அவள் சேகரித்த புத்தகங்கள் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. உனக்கு வேண்டுமா..? தருகிறேன்“ என்றான்.

நான் திக்பிரமை பிடித்தவனாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

மீண்டும், மீண்டும் சொன்னதையே சொன்னேன்.

“ஹலோ… நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.. நான் நேற்று இதே நேரம் இருக்கும் இந்த முற்றத்தில் பார்த்தேன் என்று சொல்கிறேன். நீங்கள் எலிஸபெத் இறந்து ஒரு வாரமாகி விட்டது என்கிறீர்கள். என்னால் நம்பமுடியாது. பிளீஸ்… என்ன நடந்தது? நான் கடந்த இரண்டு வாரகாலமாக இந்த வீதியால் வரவில்லை. நேற்றுத்தான் மீண்டும் வந்தேன். இதோ, இந்த ரோசா மரத்திற்கு அருகில் நின்று கொண்டு தான் என்னுடன் பேசினாள். நான் எதற்காக பொய் சொல்லவேண்டும்“ எனச் சொன்னதும், அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

“புல்ஷீட்…“ எனச் சொல்லிவிட்டு வழக்காமான எஃப் எழுத்தில் தொடங்கும் அந்த நான்கு எழுத்தில் வரும் கெட்ட வார்த்தையை உதிர்த்து விட்டு, மன்னிப்பும் கேட்டான்.

நான் பதிலுக்கு புன்னகைத்தேன். எனது முகத்திலிருந்த சோகத்தின் ரேகைகள் அவனிடத்திலும் சலனம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

“நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டாய். உள்ளே வா. வந்து பார்… “

நான் தயக்கத்துடன் உள்ளே சென்றேன்.

அவன் காட்டிய சுவர்பக்கம் பார்த்தேன். ஒரு சிறிய மேசையில் வெள்ளை விரிப்பின் மீது எலிஸபெத்தின் உருவப்படம் இருந்தது. அதன் முன்னால் இரண்டு மெழுகுவர்த்திகள் ஏற்கனவே ஒளி வீசி, பாதியில் அணைந்திருந்தன. அவன் அருகிலிருந்த தீப்பெட்டி எடுத்து ஒளியேற்றிவிட்டான்.

திக்பிரமை என்னை மேலும் சூழ்ந்து கொண்டது. உடலில் லேசான நடுக்கம் வேறு.

“என் கடவுளே…“ என்று முணகினேன். கண்ணீர் வரும் முன்னர், அந்த படத்தை தொட்டு வணங்கினேன்.

என்ன நடந்தது எனக் கேட்டேன்.

“நடப்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். தன்னை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடுமாறு தினமும் புலம்பிக் கொண்டிருந்தாள். பிள்ளைகளும் சொன்னார்கள். என்ன செய்வது..? எலிஸபெத்தின் விருப்பப்படியே சேர்த்து விட்டேன். அங்கே சென்று பத்து நாட்களும் இல்லை. போய் விட்டாள். இதுதான் வாழ்க்கை. நீயாவது, நடந்து நடந்து உடல் நலத்தை கவனித்துக் கொள்…. உனக்கு எத்தனை பிள்ளைகள்…? உனது மனைவி எப்படி இருக்கிறாள்… பேரப்பிள்ளைகள் இருக்கிறார்களா…?“

ஏற்கனவே ஒருநாள் இந்த வீதியால் நடைப்பயிற்சிக்கு வந்தபோது, எலிஸபெத் தடுத்து நிறுத்தி கேட்ட கேள்விகளை அவன் இப்போது தான் கேட்கிறான்.

நான் எலிஸபெத்தின் படத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

லண்டனிலிருக்கும் எலிஸபெத் மகாராணி பிறந்த ஏப்ரில் 21 ஆம் திகதி தான் தானும் பிறந்ததாகவும், லண்டனிலிருந்து வந்து இங்கே குடியேறிய மூன்று தலைமுறைகளை அடுத்து பிறந்த வாரிசு தான் தான் என்றும், அதனால் தனது பெற்றோர்கள் எலிஸபெத் என்று பெயர் வைத்தாகவும் ஒருநாள் சந்திப்பில் அவள் சொன்னதையும் அவனிடம் சொன்னேன்.

“ஓ… அப்படியா… உன்னுடைய நல்ல சிநேகிதி தான். நீயாவது அவளை இழுத்துக் கொண்டு நடக்கப் போயிருக்கலாம். அவள் சோம்பேறி“ என்றான்.

“இறந்தவர்களை ஏசக் கூடாது… ஏசவேண்டாம்“ எனச் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப் புத்தகத்தை அவனிடம் நீட்டினேன்.

“வேண்டாம்… நீயே அவளது நினைவாக வைத்துக்கொள்.. இன்னும் புத்தகங்கள் இருக்கின்றன. இப்போது நான் வெளியே போகவிருக்கிறேன். ரியல் எஸ்டேட்டுடன் ஒரு சந்திப்பு இருக்கிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் வா. ஓகே“

“இந்த வீட்டை விற்கவா …? “

அவன் தலையாட்டினான். மீண்டும் எலிஸபெத்தின் படத்தை உற்றுப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன். உடலின் புல்லரிப்பு நீங்கவில்லை.

அவனுக்கு கைநீட்டி குலுக்கவும் இயலவில்லை. அவன் பின்புறமாக கையை கட்டிக் கொண்டு நின்றான். கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் எதிரி, அணைத்து ஆறுதல் சொல்லவும் விடாமல் தடுக்கிறதே.

தொடர்ந்தும் நடைப் பயிற்சியில் மனம் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.

எலிஸபெத் அன்று தந்த Handbook Of Diabetes புத்தகம் கையில் கனமாக இருந்தது.

நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் மனைவியிடம் சொன்னன். “உங்களுக்கு ஏதோ பிரமை. அதுதான் அப்படி. செத்துப்போனவள் எப்படி வந்தாள். சும்மா அலட்டிக்கொண்டிராமல், வாங்க வந்து சாப்பிட்டு நல்லா தூங்கிறதுக்குப் பாருங்க… உங்களுக்கு யோசனை கூடிட்டுது. தூக்கம் குறைந்து விட்டது” எனச் சொன்ன மனைவி, சுவாமி அறைக்குச் சென்று விபூதி எடுத்து வந்து எனது நெற்றியில் பூசினாள்.

“இதுவும் சிவபெருமான் சுடலையிலிருந்து எடுத்து பூசியது தானே..?“ என்றேன்.

“தலை எழுத்து… கலிகாலம். அதுதான் இயற்கைக்கும் பொறுக்கவில்லை. “

என்னை இவளும் நம்புகிறாள் இல்லையே… அப்படியென்றால் எனக்கு என்ன நடந்தது..? எலிஸபெத் நீ உண்மையிலேயே எங்கே இருக்கிறாய்..? மனம் அழுதது.

.

முருகபூபதி – (letchumananm@gmail.com)

நன்றி: அரங்கம் – இலங்கை இதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More