Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கலைந்தும் கலையாத.. | சிறுகதை | விமல் பரம்

கலைந்தும் கலையாத.. | சிறுகதை | விமல் பரம்

10 minutes read

அலுவலகத்தில் இருந்து வந்ததும் அண்ணா தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டான். முகத்தில் கவலை தெரிந்தது. ஏதோ நடந்திருக்கிறது. நான் அம்மாவைப் பார்த்தேன். இரவுச் சமையலில் மும்முரமாக இருந்தாள். முடித்து விட்டு சாப்பிடக் கூப்பிட்டபோது அண்ணா வெளியில் வரவில்லை. அம்மா போய் கதவைத் தட்டினாள்.

“வெளியில வா. சாப்பிட்ட பிறகு கதைக்கலாம்”

குரலை உயர்த்திக் கூப்பிட்டதும் வெளியே வந்தான். சாப்பிடும் போது ஏதாவது சொல்லி என்னை வம்புக்கு இழுப்பவன் என் பக்கம் திரும்பவேயில்லை. தலை கவிழ்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான். இதைக் கவனித்தாள் அம்மா.

“என்னடா திரும்பவும் என்ன பிரச்சனை”

“அம்மா.. மஞ்சுவின்ர அப்பா அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறாராம். நான் மஞ்சுவுக்கு என்ன பதில் சொல்லுறது” என்றான் தயக்கத்துடன்.

“தங்கச்சி இருக்க கலியாணத்துக்கு என்ன அவசரம் உனக்கு. அவளுக்குச் செய்திட்டு நீ செய் எண்டு சொன்னனான்தானே. நானும் அவளுக்குப் பாக்கிறன் ஒண்டும் சரி வருகுதில்லையே”

“எனக்கு அவசரமில்லையம்மா. மஞ்சுவைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லி மூண்டு வருசமாயிட்டுது. என்ர வயதுதானே அவளுக்கும். இருபத்தொன்பது வயசாச்சு இனிப் பொறுக்கேலாது இரண்டில ஒரு முடிவு சொல்லச் சொல்லி அப்பா கேட்கிறார் நான் என்ன சொல்லுறது எண்டு மஞ்சு அழுகிறாள். நான் என்ன செய்கிறதம்மா”

சொல்லும் போது அண்ணாவின் கண்களும் கலங்கி விட்டது.

“எல்லா விஷயத்திலும் அண்ணாவுக்குத்தானே முதலிடம் குடுப்பீங்கள். கலியாணத்தையும் அவனுக்கு முதல் செய்யுங்கோவன். பிறகு என்னாலதான் பிந்தினது எண்டு ஒருத்தரும் வந்து என்னோட கோவிக்கவேண்டாம்” சொன்னதும் அண்ணா என்னைப் பார்த்து முறைத்தான்.

மூன்று வருடங்களுக்கு முன் அண்ணா தான் விரும்பிய விஷயத்தைச் சொல்லி திருமணம் செய்யச் சம்மதம் கேட்டபோது அம்மா கோபத்தில் கத்திவிட்டாள்.

“இருபத்தாறு வயசில கலியாணத்துக்கு என்னடா அவசரம். அப்பா இல்லாத குடும்பத்தை நீ பாப்பாய் எண்டு படிப்பிச்சு ஆளாக்கிவிட வேலை எடுத்து ஆறு மாசமாகேல கலியாணத்துக்கு நிக்கிறாய். உன்னை விட இரண்டு வயசுதான் குறைய ஜோதிக்கு. நாள் போற வேகத்தில கலியாண வயசு வந்திடும் நான் தனிய என்ன செய்வன். அவளைப் பற்றி யோசிக்க மாட்டியா”

எப்போதும் தனக்கு துணையாய் இருப்பான் என்று நினைத்திருந்தவளுக்கு திருமணப் பேச்சை அண்ணா எடுத்ததும் பயந்துவிட்டாள்.

அப்பாவின் முகமே எங்களுக்கு ஞாபகத்தில் இல்லை. பரந்தனில் இரண்டு உழவுயந்திரம் வைத்து சொந்த வயலோடு குத்தகைக்கும் எடுத்து வயல் செய்து கொண்டிருந்தவர் போனதும் அம்மாவால் தனிய சமாளிக்க முடியவில்லை. சொந்த வயல்களைக் குத்தகைக்கு கொடுத்தாள். உழவுயந்திரங்களை விற்று சேமிப்பில் போட்டு அதிலிருந்து வரும் பணத்தில் எங்களை வளர்த்தாள். குடும்பத்தின் மூத்தமகன் என்று அண்ணாவில் அதிக பாசம். அவன் மனம் கோணாமல் பார்த்துப் பார்த்துச் செய்வாள். சின்னவயதிலிருந்து எந்தப் பொருளை வாங்கினாலும் அவனுக்குத்தான் முதலிடம். அதுக்காக எத்தனைமுறை நான் சண்டை போட்டிருக்கிறேன்.

“என்னம்மா நீங்கள். நான் கலியாணம் செய்தால் அவளைப் பாக்கமாட்டன் எண்டு சொன்னனானே. ஏன் இப்பிடிச் சொல்லிறீங்கள். மஞ்சுவோட பழகத் தொடங்கி நாலு வருசமாச்சு. நல்ல பிள்ளையம்மா வந்தால் என்னோட சேர்ந்து குடும்பத்தைப் பாப்பாள்”

“அந்தப் பிள்ளையை குற்றம் சொல்லேல. உனக்குப் பிடிச்சால் எனக்கும் சந்தோஷம். இப்ப உனக்கு வயசிருக்கு. தங்கச்சிக்கு செய்து போட்டு செய். இதைப் பற்றித் திரும்ப கதைக்காத”

அம்மா கண்டிப்புடன் சொன்னாள்.

“அண்ணா சொன்னது கேட்க மாட்டான். முதல் மாட்டன் எண்டு சொன்னாலும் செய்து வைப்பீங்கள் எண்டு அவனுக்குத் தெரியும். நீங்களும் அப்பிடித்தானே. என்ன வாங்கினாலும் செய்தாலும் அவருக்கு குடுத்துட்டு பிறகுதானே எனக்குத் தருவீங்கள். அதுதான் கலியாணத்தையும் எனக்கு முதல் செய்ய நினைக்கிறான்”

இடையில் புகுந்து நானும் என் ஆதங்கத்தைக் காட்டினேன்.

சின்னவயதில் மனதை நோகவைத்த சம்பவங்கள் அடிமனதில் பதிந்துவிட்டிருந்தது.

“ஸ்கூலுக்குத் தேவையான புத்தகப்பை பேனை பென்சில் எல்லாம் வாங்கி வைச்சிருக்கு. உனக்கு என்ன தேவையோ எடுத்திட்டு மற்றதை ஜோதிட்ட குடு” அம்மா சொன்னதும்

அவனுக்கு முதல் ஓடிப் போய் எனக்குப் பிடித்ததை எடுப்பேன். அதுதான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி விடுவான். அழுதாலும் திரும்ப எனக்கு கிடைக்காது. சாப்பாட்டு விஷயத்திலும் அவனுக்குப் பிடித்த சமையலைத்தான் அம்மா அதிகமாக சமைப்பாள்.

அந்த நேரங்களில் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சண்டை பிடிப்பேன். வளர வளர அன்பு பாசமாய் இருந்தாலும் என் மனதில் இந்த தாக்கம் இருந்து கொண்டேயிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் மாமி வீட்டுக்கு வந்திருந்தபோது இதைக் கவனித்து விட்டார்.

“பெடியனைத் தூக்கி தலையில வைச்சிருக்கிறாய். அவளையும் கவனி. செல்லம் குடுத்து வளர்த்துவிட நாளைக்கு கலியாணமாச்சுதெண்டால் மனிசியின்ர சொல்லுக் கேட்டு போயிடுங்கள். பொம்பிளைப் பிள்ளையள்தான் பொறுமையாய் எங்களைப் பாக்குங்கள்”

“இல்லையக்கா இரண்டையும் கண்ணுக்க வைச்சு வளக்கிறன். இரண்டும் என்னைப் பாக்குங்கள். அவளுக்கு கலியாணம் செய்து வைச்சிட்டு அவனோடதானே இருக்கப்போறன்”

கேட்டுக் கொண்டிருந்த அண்ணா

“அம்மாவுக்கு எந்தக் குறையுமில்லாமல் சந்தோஷமாய் நான் வைச்சுப் பாப்பன்”

“பாப்பம்… பாப்பம். நீ பாக்கிறியோ நான் பாக்கிறனோ எண்டு. கலியாணம் கட்டும் வரைக்கும் எல்லாம் சொல்லலாம். பிறகுதானே தெரியும்” அண்ணாவுக்கு சவால் விட்டேன்.

“எந்த நம்பிக்கையில நீ பாப்பன் எண்டு சொல்லுறாய். நீயும் கலியாணம் செய்திட்டால் செய்யிற ஒவ்வொண்டுக்கும் மனுசனைக் கேக்க வேணும். வேண்டாம் எண்டால் என்ன செய்வாய்”

“என்ன நடந்தாலும் நான் அம்மாவைப் பாப்பன். அப்பா இல்லாமல் எங்களோட கஷ்டப்பட்ட அம்மாவை விட்டிட்டுப் போகமாட்டன்” நான் உறுதியாகச் சொன்னேன். அண்ணாதான் குடும்பத்தைப் பார்ப்பானா.. நான் பார்க்கமாட்டேனா.. மனதுக்குள் பொருமினேன்.

இன்று அண்ணா திரும்பவும் திருமணப் பேச்சை ஆரம்பித்ததும் பழைய நினைவுகள் வந்து மோதி விலகியது. விரும்பியவள் அழுகிறாள் அவளுக்கு இருபத்தொன்பது வயது என்று சொன்னது அம்மாவை யோசிக்க வைத்தது.

“அம்மா மஞ்சுவுக்குப் பிறகு இரண்டு பேர் இருக்கினம். அவையளுக்கும் இருவத்தெழு இருவத்தைஞ்சு வயசம்மா. மஞ்சுவின்ர அப்பா அவசரப்படுறது நியாயம்தானே. இவ்வளவு நாளும் நீங்கள் சொன்னதாலதான் பொறுமையாய் இருந்தவை. ஜோதிக்கு இப்ப ஒண்டும் பொருந்தி வருகுதில்லை. நான் செய்த பிறகு அவளை விடமாட்டனம்மா” அண்ணா சொன்னதைக் கேட்டதும் அவன் நிலைமை எனக்கும் நன்றாக விளங்கியது.

“அண்ணா கலியாணமும் உனக்குத்தான் முதல் நடக்கும். அம்மா ஓமெண்டு சொல்லுவா. அண்ணி முதல் வீட்டுக்கு வரட்டும். பிறகு மற்றதை யோசிக்கலாம்” அண்ணாவின் கையைப் பிடித்து ஆதரவாய்ச் சொன்னதைக் கேட்டு அம்மாவின் முகத்திலும் நிம்மதியைக் கண்டேன்.

காத்திருந்ததுபோல் சம்மதம் சொன்னதும் அவர்களே பொறுப்பெடுத்து எல்லாவற்றையும் செய்தார்கள். இந்த வருசம் செய்யவேண்டும் என்று அவர்கள் முதலே ஆயத்தமாக இருந்ததினால் நாலுமாதத்தில் நாள் குறித்து திருமணமும் நல்லபடி நடந்து முடிந்தது. அண்ணி வீட்டுக்கு வந்தபின் வீடும் கலகலப்பாகி விட்டது. உறவினர்வீடும் விருந்துமாக சுற்றித் திரிந்ததால் ஒருமாதமாகியும் அண்ணியோடு நன்றாகப் பேசி பழக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்திலிருக்கும் மாமியும் அவர்களை விருந்துக்கு அழைத்தபோது எங்களையும் வரச்சொன்னாதால் நாமும் அவர்களோடு போக ஆயத்தமானோம்.

“அம்மா அங்க என்ர நாலைஞ்சு ப்ரண்ஸ் இருக்கிறாங்கள். நானும் மஞ்சுவும் மோட்டார்சைக்கிளில போனால் ஓடித்திரிய வசதி. நீங்களும் ஜோதியும் ஓட்டோவில வாங்கோ” நாங்கள் ஓட்டோவில் போக பின்னால் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

“வந்து கொஞ்சநாள் எண்டாலும் அண்ணியை எனக்கு பிடிச்சிருக்கு உங்களுக்கு”

நான் அம்மாவிடம் கேட்டேன்.

“நல்ல பிள்ளைமாதிரித்தான் தெரியுது. அவனைச் சந்தோஷமாய் வைச்சிருந்தால் போதும்”

“கலியாணம் செய்தாலும் அண்ணான்ர நினைப்புத்தான் எப்பவும்…” சொல்லி முடிக்கவில்லை

படாரென்ற இடிச்சத்தத்தில் அதிர்ந்துபோய் நிமிர பெரிய வாகனமொன்றின் அடியில் ஓட்டோ சிக்கியிருந்தது. காலை அசைக்கமுடியாத வலியிலும் வேதனையிலும் அம்மாவை இறுக பிடித்தபடி அலறிக்கொண்டிருந்தேன். முழங்காலில் இருந்து வழிந்த இரத்தத்தைப் பார்த்ததும் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

மயக்கமும் விழிப்புமாக இருந்த எனக்கு மங்கலாகத் தெரிந்த ஆட்களின் நடமாட்டமோ கதைப்பதோ எதுவும் மனதில் பதியவில்லை. உடல்மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தியதுபோல் வலித்தது. உடலை அசைக்கமுடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை மீண்டும் கண் விழித்தபோது அழுத கண்களோடு அண்ணா அருகிலிருந்தான். அவனைக்கண்டதும் எனக்கும் அழுகை வந்தது. ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தேன். அம்மாவையும் அண்ணியையும் தேடினேன். காணவில்லை.

“அம்மாவுக்கு கால்விரல் எலும்புகள் முறிஞ்சிட்டுது. மருந்து கட்டி வேற அறையில படுத்திருக்கிறா. அண்ணி பக்கத்தில இருந்து பார்க்கிறாள்”

“என்னால அசையேலாமல் இருக்கண்ணா எனக்கு அம்மாவைப் பார்க்க வேணும்”

“மூண்டுநாள் மயக்கத்தில இருந்தாய். முழங்கால் அடிபட்டு நசிஞ்சுட்டுது இழுத்துத்தான் எடுத்தோம். ஒப்பிரேஷன் செய்தும் காலைச் சரிப்படுத்த முடியேல கழட்டியாச்சுடா. அம்மாவுக்குச் சொல்லேல. சொன்னால் தாங்கமாட்டா. கொஞ்சநாள் பொறுடா. அம்மாவைப் பார்க்கலாம்”

இடி விழுந்தது போல் ஏங்கிப்போனேன். விம்மி வெடித்துக் கொண்டு அழுகை வந்தது.

தலை தடவி ஆறுதல் சொன்ன அண்ணாவைப் பார்த்துப் பார்த்து அழுதேன். பகல் முழுவதும் என்னோடு நின்றுவிட்டு அம்மாவிடம் போனான். இரவு அண்ணி வந்து என்னோடு தங்கினாள்.

வலி தெரியாமலிருக்க மருந்து ஏற்றினாலும் உடல் அசையாமல் படுத்திருப்பது கஷ்டமாக இருந்தது. அண்ணி அருகிலிருந்து தடவிக் கொண்டிருந்தாள். அண்ணா அண்ணியை நினைக்க கவலையாகயிருந்தது. காத்திருந்து இணைந்தவர்களை தனித்தனியாக அலைய விடுகிறோமே… இனிமேல் இவர்களுக்கு பாரமாய் இருக்கப் போகிறேனா… நொண்டியான எனக்கு இனி என்ன வாழ்க்கை இருக்கப் போகிறது…

கலியாணம் பிந்துதே என்று கவலைப்படும் அம்மா இனி எனக்கு கலியாணமே இல்லை என்றால் தாங்குவாளா… அம்மாவை சந்தோஷமாய் வைச்சிருக்கவேணும் என்று ஆசைப்பட்டேனே… இனி காலம் முழுவதும் அம்மாவுக்கு சுமையாக இருக்கப் போகிறேனா…. நினைக்கும் போதேல்லாம் தாங்க முடியாமல் அழுது கொண்டேயிருந்தேன்.

அண்ணாவும் அண்ணியும் மாறி மாறி எங்களைப் பார்த்துக்கொண்டார்கள். படுக்கையில் இருக்கும் எனக்கு காலையில் முகம் உடம்பு துடைத்து உடை மாற்றி விட்டுத்தான் அண்ணி அம்மாவிடம் போவாள். செய்யும்போது முகம் சுழித்ததில்லை. என்மனம் சங்கடப்படும்.

“உங்களையெல்லாம் கஷ்டப்படுத்திறேனே அண்ணி”

“இந்த நேரத்தில நாங்கள்தான் பாக்கவேணும். கவலையை விட்டு சந்தோஷமாயிரு”

“அம்மான்ர செல்லம் எண்டு அண்ணாவோட நெடுகவும் சண்டை பிடிப்பன் அண்ணி. இப்ப அவனும் என்னை நோக விடாமல் தாங்கிறான்”

“அதெல்லாம் ஒரு சண்டையே… வேணுமெண்டு உன்னை கோபப்படுத்துறதுக்கு அவரும் ஏதாவது சொல்லுவார். பிறகு நடந்தது எல்லாத்தையும் வந்து சொல்லிச் சிரிப்பார். உன்னைப்பற்றி நிறையக் கதைப்பார். வாயாடித் தங்கச்சி எண்டு உன்னிலையும் பாசம் அதிகம்தான்” சிரித்தபடி அண்ணி சொன்னதைக் கேட்டதும் ஆசையோடு அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

“ஐயோ அண்ணி இவ்வளவு நாளும் உங்களை மிஸ் பண்ணிட்டமே. அண்ணா சொன்னபோதே சம்மதிச்சிருக்கலாம். என்னாலதானே வராமல் இருந்தீங்கள்”

“இனி உன்னோடதானே இருக்கப் போறன்”

அதே நேரம் அண்ணாவும் வந்தார்.

“அம்மாவை நீ பாக்கமாட்டாய் நான்தான் பாப்பன் எண்டு உன்னோட சண்டை போட்டன். இப்ப நீதான் பக்கத்திலயிருந்து எல்லாம் செய்யிறாய். என்னையும் பாக்கிறாய் அண்ணா”

“மனசைப் போட்டு குழப்பாமல் பேசாமல் படு. காயம் ஆறினதும் வீட்டுக்குப் போகலாம். அம்மாவையும் பாக்கலாம்” இருவரின் ஆறுதல் வார்த்தைகளில் மனம் லேசானது.

இன்று வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னதும் அண்ணாவும் அண்ணியும் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்ய போய்விட்டார்கள். திரும்பி வரும்போது அண்ணா மட்டும் வந்தார்.

“அம்மாவையும் விட்டிட்டினம் அம்மாவோட அண்ணியையும் வீட்டில கொண்டு போய்விட்டிட்டு வாறன். வா நாங்களும் போவம்”

இரு கைகளாலும் குழந்தையைத் தூக்குவது போல் தூக்கி காரில் இருத்தி கவனத்துடன் ஓட்டிப் போனான்.

“காலம் முழுக்க உனக்கு பாரமாய் இருக்கப் போறன். அம்மாவோட என்னையும் வைச்சுப் பாக்கப் போறாய்” இயலாமையில் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

“இப்பிடியே உன்னை விடமாட்டன். கொஞ்சக்காலம் போக கால் பொருத்தி உன்னை நடக்க வைச்சு கலியாணமும் செஞ்சு வைப்பன். கவலைப்படாத”

பதில் சொல்ல நினைத்தபோது வீடு வந்து விட்டது. பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அண்ணி ஒரு சக்கரநாற்காலியைத் தள்ளிக் கொண்டு காருக்கு அருகில் வந்தாள். பார்த்ததும் இனிமேல் என் கால்கள் இதுதான். நான் போக நினைக்கும் இடங்களுக்கு இதுதான் என்னைக் கொண்டு போகும் என்ற நினைப்பு வந்து மனதை அழுத்தியது.

வீட்டுக்குள் போனதும் எதிரில் அம்மாவைக் காணவில்லை தேடினேன்.

“அம்மா அறைக்குள்ள உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறா”

கைகளால் சக்கரநாற்காலியை உருட்டிக் கொண்டு விரைந்து அறைக்குள் நுழைந்தேன். அம்மாவைக் கட்டிக் கொண்டு அழவேணும். தாங்கமுடியாத தவிப்போடு

“அம்மா… “

அழைத்தபடி நிமிர்ந்தேன். ஆயிரம் மின்னல் தாக்கியதுபோல் உடல் அதிர்ந்தது. அம்மாவைப் பார்த்து நம்ப முடியாமல் அலறினேன். மீண்டும் மீண்டும் பார்த்தேன்.

மரச்சட்டத்துக்குள் மாலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். மறைவுக்கு நேரே விபத்து நடந்த திகதி கண்ணில்பட்டது. அப்படியென்றால்… அன்றே…

கதறலோடு அண்ணாவைப் பார்த்தேன். அதுவரை அடக்கி வைத்த துயரம் வெடித்துச் சிதற என்னை அணைத்தபடி அவனும் கதறத் தொடங்கினான். எங்கள் இருவரையும் அணைத்தபடி அண்ணியும் சேர்ந்து கொண்டாள்.

மாறாத பார்வையோடு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.

.

நிறைவு

.

.

.

விமல் பரம்

.

நன்றி – சிறுகதை மஞ்சரி சஞ்சிகை February 2021

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More