செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அழகிய நிலாக்காலம் பேசும் மூன்று கிராமங்களின் கதை | தாட்சாயணி

அழகிய நிலாக்காலம் பேசும் மூன்று கிராமங்களின் கதை | தாட்சாயணி

4 minutes read

இலக்கிய வகைமைகளில்‌ வாசகர்களின்‌ விருப்பத்‌ தேர்வில்‌ இருப்பவற்றில்‌

தலையாயதாகக்‌ கருதப்படக்‌ கூடியது நாவல்‌ வடிவமே. நாவலொன்றில்‌

வரலாற்றுக்‌ கூறுகள்‌ இயல்பாகப்‌ பொதிந்து வருவது நாவலின்‌ தன்மைகளில்‌

ஒன்று.செவ்விதான நாவல்களுக்கு இது பொருந்தும்‌. அது போலவே வரலாற்று

நூல்கள்‌ சில அருமையாக நாவலின்‌ சுவாரஸ்யத்தைக்‌ கொண்டு அமைந்து

விடுவதுமுண்டு. ஏனைய வரலாற்றுச்‌ செய்திகள்‌ வாசிப்பிற்குப்‌ பாகல்‌ போல்‌

கசப்பாயிருந்தால்‌ சொற்‌ சேர்க்கைகளின்‌ சிக்கல்‌ இருக்கும்‌ போது, வாசகன்‌

தன்‌ கல்வித்‌ தேவைக்கு மட்டுமே, அதனைப்‌ பயன்படுத்து விட்டு அப்பால்‌

போய்‌ விடுவான்‌.

 

ஆனால்‌, அது ஒரு அழகிய நிலாக்காலம்‌ எனும்‌ சுய வாழ்வைக்‌ கூறும்‌ நாவல்‌

மூலம்‌ மகாலிங்கம்‌ பத்மநாபன்‌ செய்ய விளைவது மூன்று கிராமங்களின்‌

கதையை வரலாற்றுப்‌ பின்னணியோடு அழகாகக்‌ கோர்த்தெடுத்ததேயாகும்‌.

 

கிராமங்கள்‌ எவ்வாறு உருவாகின்றன? காடுகளாய்‌ இருந்த பூமியில்‌ எவ்வாறு

மனிதர்கள்‌ வந்து சேருகின்றார்கள்‌? அவர்கள்‌ எப்படிக்‌ காடு திருத்தி வளமான

ஒரு பூபியை உருவாக்குஇறார்கள்‌? அங்கு இயற்கையாகவே இருக்கும்‌

அச்சுறுத்தல்கள்‌ எவை? முதன்‌ முதல்‌ அங்கு ஆண்கள்‌ மட்டுமே வந்து

குடியிருப்புக்களை அமைத்த பின்‌ முதல்‌ பெண்மணி தனித்து அவ்வூரில்‌

குடியிருக்க வரும்‌ போது அவளுடைய உணர்வலை எப்படி இருந்திருக்கும்‌?

அதன்‌ பின்‌ அங்கு பாடசாலைகள்‌, வாய்க்கால்கள்‌, சனசமூக நிலையங்கள்‌

எவ்வாறு உருவாகின? அதற்குப்‌ பங்களித்த மூத்தவர்கள்‌ எவர்‌? எனப்பல

கேள்விகளுக்கான பதில்களாக இந்நாவல்‌ விரிந்து கொண்டு செல்கிறது.

 

பொதுவான நாவலாக இல்லாமல்‌ இதை ஒரு சுய வரலாற்று நாவலாகக்‌

குறிப்பிடலாம்‌. வரலாற்றின்‌ முக்கிய தேவையைப்‌ பகுத்தாய்ந்து, அதற்குரிய

அம்சங்களை வாழ்வியலுடன்‌ பிணைத்து, வாசகன்‌ சற்றும்‌ சலித்து நூலை

வைத்து விடாதபடி இந்நாவல்‌ எழுதப்பட்டிருக்கிறது.

 

ஒவ்வொரு அத்தியாயங்களுக்குள்ளும்‌, முகப்புச்‌ செய்தியாக அவ்வவ்‌

அத்தியாயங்களுக்குள்‌ வரும்‌ விடயங்கள்‌ பற்றிய தெளிவுக்‌ குறிப்பு

வாசகனுக்குப்‌ பல விடயங்கள்‌ பற்றிய விளக்கத்தை அளிக்கிறது…

கல்விப்புலத்தில்‌ சிறந்து விளங்கிய ஒருவராக இக்கதையின்‌ ஆசிரியர்‌

இருப்பதன்‌ அர்த்தம்‌, அத்‌ தெளிவான விளக்கத்தினூடு புலப்படுகிறது.

 

தனியே வறிய மக்கள்‌ மட்டும்‌, காணி தேடி வன்னி நோக்குப்‌ புறப்படவில்லை என்பதும்‌ அக்காலங்களில்‌ தென்னிந்தியாவிலிருந்து பிழைப்புத்‌ தேடிக்‌

கடற்பாதையினூடாக இங்கு வந்த தமிழர்கள்‌ பற்றியும்‌, அவர்களைக்‌ கைது

 

செய்வதற்காக அரசாங்கம்‌ இயற்றிய சட்டங்களையும்‌, அவற்றையும்‌ மீறி

அங்கு குடியேறிய மக்கள்‌, அவர்களை உபசரித்துப்‌ பாதுகாத்து

அவர்களுக்குரிய வாழ்க்கையை அளித்ததையும்‌, அவர்கள்‌ தம்‌

குடும்பத்தினரைச்‌ சந்திப்பதற்கு கச்சதீவு சென்று அங்கு சந்தித்துக்‌

கொள்வதையும்‌ நாவல்‌ உணர்வுபூர்வமாக வரலாற்றுப்‌ பிசகுகள்‌ இல்லாத

வண்ணம்‌ சித்தரிக்கின்றது.

 

கிராம அலுவலர்‌ பதவியின்‌ தோற்றுவாய்‌ எவ்வாறு அமைந்தது? அதன்‌ ஆரம்ப

காலங்கள்‌, அவர்களின்‌ பணிப்‌ பொறுப்புகள்‌ எவ்வாறு அமைந்தன

என்பதைத்‌ தந்தையின்‌ அருகிலிருந்து பார்த்த மைந்தன்‌ எனும்‌ வகையில்‌

மிகச்‌ சுவாரசியமாக எழுத்திச்‌ செல்கிறார்‌ பத்மநாபன்‌. அதிலும்‌, ஓவ்வொரு

நாளும்‌ இனக்குறிப்புப்‌ புத்தகத்தில்‌ தன்னுடைய வேலை பற்றிய

குறிப்புக்களை பதிந்து கொள்பவர்‌, தன்னுடைய பணியில்‌ தான்‌ தவறியதாக

வெள்ள அனர்த்த காலத்திலேயே மேலதிகாரிகளால்‌ இழிவுபடுத்தப்பட்ட

போது, அதனை ஒப்படைத்து வேலையை உதறும்‌ சுய கெளரவம்‌ மிக்க

மனிதராயிருந்தார்‌ என்பதுவும்‌, அவரது தன்னலமிக்க சேவையும்‌ நாவல்‌

பூராவும்‌ ஒரு மலரின்‌ வாசமென விரவி நிற்கிறது.

 

பாடசாலை லொக்‌ புக்கில்‌ இருக்கும்‌ நுண்ணிய தகவல்கள்‌ எவ்வளவு

முக்கியமானவை என்பதுவும்‌, அவ்வரலாற்றுத்‌ தகவல்கள்‌ யுத்தத்தின்‌ ஒரு

எல்லை வரை எவ்வளவு கவனமாக ஆவணப்படுத்தப்பட்டன என்பதுவும்‌

மெல்லிய ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும்‌, அவை தொலைந்து விட்டன

எனும்‌ பதைப்பை இந்நாவல்‌ ஆவணப்படுத்தி விட்ட விடயங்கள்‌ இல்லாமல்‌

செய்து விட்டன என்பதுவே உண்மை.மேலும்‌ லொக்‌ புத்தகத்தில்‌

குறிப்பிடப்பட்ட பத்மநாபன்‌ வயிற்றுக்‌ குத்தினால்‌ வீடு திரும்பிய விடயம்‌

நாவலின்‌ இடையே சற்றுப்‌ புன்னகைக்க வைக்கிறது.

 

நாவலின்‌ வரலாற்றுக்கிடையில்‌ கோகிலாம்பாள்‌ கொலை வழக்கும்‌ மெல்ல

ஊசலாடுகிறது. வடபுல மக்களை ஒரு காலத்தில்‌ மிகவும்‌ பரபரப்பூட்டிய

இவ்வழக்கின்‌ ஆதார சாட்சியாக இருந்த அக்காலக்‌ இராம அலுவலராக

இருந்தவர்‌ இந்நூலின்‌ நாயகராகிய மகாலிங்கம்‌ என்பதை ஆவணப்படுத்தி

இருப்பதுடன்‌ ஒரு சிறு அத்தியாயத்தில்‌ அக்கொலையின்‌ சுருக்கக்‌

குறிப்புகளையும்‌ ஆவணப்படுத்தியிருக்கிறார்‌ கதாசிரியர்‌. நீதிமன்ற

வழக்குகளில்‌ கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும்‌ கடமை விடுமுறை,

பட்டா பற்றியும்‌ உரிய விளக்கம்‌ நாவலில்‌ கிடைக்கிறது. மேலும்‌

அவ்வழக்குகளில்‌ ஆர்வமுற்று நீதிமன்றத்துற்குப்‌ பார்க்கச்‌ செல்லும்‌,

கிராமத்து மனிதர்கள்‌, அவர்களில்‌ ஒருவருக்கொருவர்‌ ஏற்படுத்திக்‌

கொள்ளும்‌ நெருக்கம்‌ இறுதியில்‌ திருமண உறவு வரை நீள்வது எனக்‌

கதையின்‌ சுவாரசியம்‌ எள்ளளவும்‌ குறைவில்லாமல்‌ இச்‌ சுய வரலாறு எளிய

முறையில்‌ இனிமையாகப்‌ படைக்கப்பட்டுள்ளது. இந்நாவலில்‌ தோன்றும்‌

பெண்‌ கதாபாத்திரங்களும்‌ காலத்திற்கேற்ற வகையில்‌, உறுதியோடும்‌

அவரவர்‌ இயல்புகள்‌ மாறாமலும்‌ படைக்கப்பட்டிருக்கிறார்கள்‌. கணவனை

 

இழந்து சிறுவன்‌ கணபதியோடு தனித்திருக்கும்‌ முதல்‌ பெண்மணியான

விசாலாட்சி துணிந்து இரண்டாம்‌ மணம்‌ புரியவும்‌, வன்னிக்குள்‌ முதல்‌

பெண்மணியாக வந்து சேரவுமாகிய திடம்‌ கொண்டிருக்கிறாள்‌. அவள்‌

கடைசிவரை தன்னுடைய ஊருக்குத்‌ திரும்பிச்‌ செல்லவில்லை. அந்த

வைராக்கியத்துடனேயே அவள்‌ தன்‌ பிள்ளைகள்‌, பேரப்பிள்ளைகள்‌ உயர்வில்‌

தன்னைத்‌ தேய்த்து மறைகறாள்‌ ஒரு விடி நட்சத்திரம்‌ போல.

 

போருக்கு முன்பான காலத்தில்‌ அக்‌ குடியிருப்புகளில்‌ ஏற்பட்ட வெள்ள

அனர்த்தம்‌ பற்றி நாவல்‌ விரிவாக்கப்‌ பதிவு செய்கிறது.

 

பெரிய பரந்தன்‌ கிராமத்துக்குக்‌ காடு வெட்டச்‌ செல்லும்‌ முத்தர்‌,

ஆறுமுகத்தார்‌, தம்பையா எனும்‌ மூவருடன்‌ ஆரம்பிக்கும்‌ கதை காடு

வெட்டும்‌ போது அவர்கள்‌ காட்டு விலங்குகளிடமிருந்து தம்மைப்‌ பாதுகாக்க

எடுத்த முயற்சிகளையும்‌, ஒற்றுமையாக ஓரே சமையலிலும்‌ ஈடுபட்டு,

காட்டைக்‌ கழனியாக்கப்‌ பாடுபட்ட தன்மையையும்‌, காட்டு விலங்குகளை

வேட்டையாட ‘டார்‌’ போட்டு கெளதாரிகள்‌, கோழிகளைப்‌ பிடித்த

கதைகளையும்‌ சுவாரஸ்யமாகச்‌ சொல்கிறது.

 

காட்டுப்‌ பாதையை அடையாளம்‌ காண அவர்கள்‌ குறித்துக்‌ கொண்ட

குறிப்பம்‌ புளியமரம்‌, அங்குள்ள பனைமரங்கள்‌, பனங்கூடல்கள்‌, ஒரு

குடியிருப்பு ஏற்படத்‌ தொடங்கிய போது அங்கு அவர்கள்‌ முதன்முதல்‌

பிரதிட்டை செய்த கடவுள்‌ உருவங்கள்‌ என்பன குறித்து விலாவாரியாக

விபரிக்கின்றார்‌ ஆசிரியர்‌.

 

குடாநாட்டில்‌ பாடசாலைகள்‌ திண்ணைப்‌ பள்ளிக்கூடங்களாகவிருந்து,

வளர்ச்சியடைந்த விதம்‌, பெரிய பரந்தனில்‌ பாடசாலை உருவாக்கம்‌, அதன்‌

ஆசிரியர்‌, அதிபர்‌ நியமனம்‌, இணுவில்‌ வைத்தியசாலையின்‌ பிள்ளைப்‌

பேற்று விடுதிகள்‌, அங்கு சேவையாற்றியோர்‌ போன்றவற்றை இக்கதையின்‌

பாத்திரங்கள்‌ சார்ந்த உண்மைச்‌ சம்பவங்களாக இந்நாவல்‌ அலசுகிற போது

அவ்வரலாற்று உண்மைகள்‌ இலகுவில்‌ மனதில்‌ தங்குகின்றன.

 

கோவில்கள்‌ சார்ந்து நாட்டுக்கூத்துகள்‌ வளர்ந்தமை, பண்டம்‌ எடுத்து வந்து

பொங்கல்‌ பொங்கியமை, திருமணச்சடங்குகள்‌ ஆரம்பத்தில்‌ சோறு

கொடுத்தலாக இருந்து படிப்படியாக எவ்வாறு மாற்றமடைந்தது என்பனவும்‌,

மூன்று தலைமுறையின்‌ வாழ்வினூடாக எடுத்தியம்பப்படுகின்றன.

 

வயல்‌ வேலைகளுக்கு இடையூறாக இருக்கும்‌ பாலாமை, சிராய்‌ ஆமைகளை

எவ்வாறு காட்டல்‌ கொண்டு சென்று விட்டு வந்தார்கள்‌ என்பதுவும்‌,

பன்றிக்காவல்‌, யானைக்காவல்‌ போன்ற விடயங்களும்‌, வயலில்‌

காணப்படுகின்ற கிடைச்சி, கோரை, கோழிச்சூடன்‌ போன்ற பூண்டுகளின்‌

தகவல்களும்‌ வாசகனுக்கு வேளாண்மை சார்‌ தகவல்களை சுவையுடன்‌

அளிக்கின்றன.

 

பழையகால உணவுப்பழக்க வழக்கங்களான, பாற்கஞ்சி, பழங்கஞ்சி,

பாற்பிட்டு, புழக்கொடியல்‌, மோர்‌ போன்றவையும்‌, வயல்‌ செய்பவர்கள்‌ புதிர்‌

உண்ணும்‌ வழக்கங்கள்‌, புதிரை வயலில்‌ படைத்தல்‌, அருவி வெட்டி உப்பட்டி

போடுதல்‌, எல்லா வயல்களதும்‌ அருவி வெட்டு, சூடுமிதிப்பில்‌ எல்லோரும்‌

கலந்து கொள்தல்‌ போன்ற விடயங்கள்‌ நாவலினூடே நகரும்‌

பாத்திரங்களூடாக கஞ்சியில்‌ பயறு போலப்‌ பரிமளிக்கின்றன.

 

பெரிய பரந்தனுக்கு முதன்‌ முதல்‌ சலவைத்‌ தொழிலாளி, சிகை

அலங்கரிப்பாளர்‌, சீவல்தொழிலாளி வந்து சேருதல்‌, அவர்களுக்கு ஒவ்வொரு

வேளாண்‌ காலத்திலும்‌ அரிசி வழங்குதல்‌, அக்காலகட்டத்தில்‌ தந்திக்கு

இருந்த முக்கியத்துவம்‌ போன்றன இக்கால இளைய சந்தததி அறியாத புதிய

விடயங்களாகக்‌ காலத்தைப்‌ பதிவு செய்கிறன.

 

வரலாற்றை எழுதுதல்‌ எனும்‌ பெரும்‌ பணிக்குத்‌ தன்னை ஒப்புக்‌

கொடுத்ததுமல்லாமல்‌, அதை வாசகனும்‌ ரசிக்கும்‌ படியாக இனிய தமிழ்‌

நடையில்‌ புதினமாக எழுதுவதில்‌ கதாசிரியர்‌ வெற்றி பெற்றிருக்கிறார்‌

என்றே சொல்ல வேண்டும்‌.

 

– தாட்சாயணி

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More