செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்சிறுகதைகள் மௌனத்தின் மரணம் | ஒரு பக்கக் கதை | இரா.கலைச்செல்வி

மௌனத்தின் மரணம் | ஒரு பக்கக் கதை | இரா.கலைச்செல்வி

2 minutes read

இருபது வருடங்களாக அண்ணன் மாணிக்கமும், தம்பி முத்துவும் பேசிக் கொள்வதே இல்லை. அவர்களுக்கு இடையில் ஒரு பெரிய‌ சுவர் இல்லாத மௌனம் நிலவிக் கொண்டிருந்தது. அன்று ஒரு சிறு பண விஷயத்தில் வந்த தவறான புரிதல், இருவர் மனங்களிலும் ஈகோவாக வளர்ந்து, பெரும் சுவராக நின்றிருந்தது. ஏதேனும் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டால் கூட, அவர்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்து வந்தனர்.

அன்று முத்துவின் பேத்திக்கு முதல் பிறந்தநாள். விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள். தன் அண்ணன் மாணிக்கம் வரமாட்டார் என்று தெரிந்தும், முறைக்காக வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வைத்து விட்டு வந்தார். விழா மேடையில் முத்து தன் பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் தன் அண்ணன் மாணிக்கம் வருவது தெரிந்தது.

கீழே இறங்கி தன் அண்ணனை வரவேற்க சென்ற முத்து, தன் அண்ணன் கூட்ட நெரிசலில் தடுமாறுவதை கண்டு, முத்து பதறி ஓடி போய், அவரைத் தாங்கினான்.

​மாணிக்கம் நிமிர்ந்து பார்த்தபோது தன் தம்பி முத்து. வயது முதிர்வால் கண்கள் சோர்வடைந்திருந்தன. தம்பியின் கைகள் அண்ணனை இறுகப் பற்றியிருந்தன. இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

​”ஏன்டா முத்து… இன்னமும் என் மேலே கோவமா தான் இருக்கியா?” என்ற மாணிக்கத்தின் குரல் தழுதழுத்தது.

“இல்லண்ணே. நான் உங்ககிட்ட பேசத்தான் ஆசைப்படுகிறேன். ஆனா நீங்க… என் முகத்தைக் கூட பார்ப்பதில்லை” என்று முத்துவும் தழுதழுத்த குரலில் இழுத்தான்.

அப்போதுதான் இருவருக்கும் புரிந்தது – இருவருமே ஒருவருக்கொருவர் பேசுவதற்கு மனதிற்குள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை. ஆனால் “யார் முதலில் பேசுவது?” என்கிற ஒற்றை ஈகோதான் இத்தனை ஆண்டுகளாக அவர்களின் இதயத்தை‌ தின்று தீர்த்திருக்கிறது. யார் முதலில் பூனைக்கு மணி கட்டுவது என்று ரீதியில் ,இருவரும் மனதிற்குள்ளே வெதும்பி கொண்டிருந்தார்கள்.

மாணிக்கம் தன் மடியிலிருந்து ஒரு பழைய, நைந்துபோன டைரியை எடுத்தார். அதில் முத்துவின் சிறுவயது புகைப்படமும், அவன் விளையாட்டில் சாதித்த செய்தித்தாள் வெட்டுகளும் இருந்தன. அதைக் காட்டி “இது நினைவிருக்கா உனக்கு” என்று கேட்ட அந்த நொடி , முத்து நிலை குலைந்து போனான். “உன்மேல எனக்கு எப்பவும் கோவம் இருந்ததில்லையப்பா.‌ ஆனால் ஏதோ ஒரு இது. என்னன்னு சொல்ல தெரியலப்பா. நீ சின்னவன் தானே இறங்கி வந்து பேச கூடாதா என்று நினைப்போ என்னவோ! சின்ன வயசுல நாம எப்படி பேசி சிரிச்சு ஒன்னா இருந்தோம்.” என்றார்.

முத்துவின் கண்கள் கலங்கின. வயசான மட்டும் ஏன் இப்படி சுயகௌரவம் வந்து மனதை ஆட்டி படைக்குதுன்னு தெரியல. இருபது வருட மௌனச் சுவர் ஒரு நொடிப் பார்வையில், ஒற்றைக் கட்டியணைப்பில் நொறுங்கிப் போனது. இருபது வருட மௌனம் அந்த ஒரு நொடியில் மரணித்துப் போனது.

உறவுகளின் புரிதலுக்குத் தேவை, நீண்ட வாதங்கள் அல்ல, “நான் இருக்கிறேன்” என்கின்ற ஒற்றை அன்பு கலந்த விட்டுக்கொடுத்தல் மட்டுமே!

 

– இரா.கலைச்செல்வி

நன்றி : சிறுகதைகள்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.