தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அறிவிப்புதாய்லாந்தில் ராணுவ ஆட்சி அறிவிப்பு

  szgf

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில், நேற்று திடீரென ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2006ல், பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ராவை பதவியில் இருந்து இறக்கிய ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு பின், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில், ஷினவத்ரா சகோதரி, யுங்லக் வெற்றி பெற்று பிரதமரானார். அவரின் அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த, பார்லிமென்ட்டின் கீழ்சபையை அவர் கலைத்ததால், கடந்த நவம்பரில் கடும் எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்தார்.

 

அதையடுத்து, அந்நாட்டின் அரசியல் அமைப்பு கோர்ட் உத்தரவின் படி, யுங்லக் பதவி இழந்தார். நிவட்டுரம்ராங், இடைக்கால பிரதமராக இருந்து, அரசு நிர்வாகத்தை, கடந்த ஆறு மாதங்களாக கவனித்து வருகிறார்.சமீபத்தில் அவர், ‘நானே நிரந்தர பிரதமர்; பதவியிலிருந்து இறங்கப் போவதில்லை’ என, அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என, வலியுறுத்தியும், அந்நாட்டின் பிரபல கோடீஸ்வரர் தக்ஷின் ஆதரவாளர்களான, ‘ரெட் ஷர்ட்’ அமைப்பினர், கடந்த நாட்களாக போராட்டத்தை நாடு முழுவதும் துவக்கியுள்ளனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் காலை முதல், தலைநகர் பாங்காக் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில், பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று திடீரென ராணுவ தலைமை தளபதி பிரயுத் சான் – ஓச்சா, ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.

 

”கடந்த ஆறு மாதங்களாக அரசு எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால், நாடு ஸ்திரத்தன்மையை இழந்துவிட்டது; நாடு சகஜ நிலைக்கு திரும்பும் வரை, ராணுவ ஆட்சி தொடரும்,” என, அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அந்நாட்டு, ‘டிவி’களில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக, ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

 

ஆசிரியர்