கிளிநொச்சியில் தொடரும் நிலப்பறிப்பு | தமது காணிகளை கவனமாக பாதுகாத்துகொள்ளுங்கள் : சி.சிறீதரன்கிளிநொச்சியில் தொடரும் நிலப்பறிப்பு | தமது காணிகளை கவனமாக பாதுகாத்துகொள்ளுங்கள் : சி.சிறீதரன்

நிலங்கள் இராணுவத்தினரால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு நிலங்களையும் பயிர்ச்செய்கை நிலங்களையும் உரிமையாகக்கொண்டவர்கள் தங்களது நிலங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு நிலங்களையும் பயிர்செய் நிலங்களையும் உரிமையாகக் கொண்ட உறவுகளே!

எமது பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொடூரமான யுத்தமும், யுத்தத்தால் எழுந்த பேரிடர் நிலைமைகளும் காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் செல்ல வேண்டிய நெருக்கடி நிலை உருவானது என்பதை நாம் எல்லோரும் உணர்வோம்.

அந்த வேளையில் அத்தகைய குடிப் பெயர்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் பல குடும்பங்கள் மீளக் குடியேறியுள்ள போதிலும் சில நூறு குடும்பங்கள் கல்வி, தொழில்வாய்ப்பின்மை, பாதுகாப்பின்மை, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை காரணமாக மீளக் குடியேறாதிருக்கின்றனர்.

இத்தகைய நிலையைத் தனக்குச் சாதகாமாகப் பயன்படுத்தி பல தனியார் காணிகளை இராணுவத்தினர் குறிப்பாகச் சிவில் பாதுகாப்புப் படையினர் அத்துமீறிக் கையகப்படுத்தி வருகின்றனர்.

இதனால் பல நூற்றுக் கணக்கானவர்களின் சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், தொண்டமான்நகர் பகுதிகளில் பல தனியார் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

இது எமது மாவட்டம் முழுவதும் பரவலடையும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்தான நிலைமையை நாம் அவசரமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே எமது மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இலங்கைத் தீவிற்குள்ளோ அல்லது புலம்பெயர் தேசங்களில் எங்கு வாழ்ந்தாலும் உடனடியாக உங்கள் காணி உரித்தினை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அந் நிலங்களை எவ்வகையிலாயினும் பயன்பாட்டிற்கு உள்ளாக்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.

ஆசிரியர்