புளுஸ்டார் ஆப்ரேஷன் எதிரொலி | பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பயங்கர வன்முறைபுளுஸ்டார் ஆப்ரேஷன் எதிரொலி | பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பயங்கர வன்முறை

சீக்கியர்களின் புனித தலமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பொற்கோவிலுக்குள் இன்று மிகப்பெரிய வன்முறை வெடித்தது. சீக்கியர்களில் இரு பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட இந்த வன்முறையில் பலரும் கைகளில் ஈட்டி, கத்தி போன்றவற்றை எடுத்துக் கொண்டு எதிர் தரப்பினரை பயங்கரமக தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.

1984ல் பஞ்சாப் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் 30 வது ஆண்டு நாள் இன்று. இது குறித்த விவாதக் கூட்டம் இன்று பஞ்சாப் பொற்கோவிலில் நடந்தது.

கூட்டத்தின்போது சிரோன்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் பங்கேற்றனர். இதில் புளுஸ்டார் ஆப்ரேஷன் தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர். ஆனால் சிலருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்க முற்பட்டனர்.

இதில் வன்முறை வெடித்து, சிலர் தங்கள் கையில் வைத்திருந்த நீள வாள் மற்றும் பல அடி நீளம் கொண்ட ஈட்டி போன்றவற்றால் பலரை வெறியுடன் ஓட ஓட விரட்டி தாக்கினர்.

பொற்கோவிலுக்குள் வெறியுடன் ஆயுதங்களை கையில் ஏந்தி சீக்கியர்கள் மோதிக் கொண்ட சம்பவம் ஒரு போர்க்களம் போல காணப்பட்டது. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்னும் அங்கு நிலைமை சீரடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்