புத்த கும்பலால் தாக்கப்பட்ட இலங்கை முஸ்லிம் மக்கள் புத்த கும்பலால் தாக்கப்பட்ட இலங்கை முஸ்லிம் மக்கள்

இலங்கையில் பிரபல சுற்றுலாத் தலங்களாக விளங்கும் இடங்கள் அலுட்கமா மற்றும் பெருவலா. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம் மதத்தவர். தலைநகர் கொழும்புவிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்த நகரங்கள் உள்ளன. எப்போதும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் காணப்படும் இந்த நகரங்களில் நேற்று மாலை வந்த புத்த கும்பல் ஒன்று அங்கிருந்த முஸ்லிம் மக்களின் கடைகளையும், வீடுகளையும் சூறையாடியது.

டஜன் கணக்கான வீடுகளுக்கும், கடைகளுக்கும் அவர்கள் தீ வைத்தனர். இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளைக் கொண்டு அந்த கும்பலை விரட்டியடித்தபோதிலும் வீடுகளையோ, கடைகளையோ தாக்கியதை அவர்களால் தடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று அந்த இரு நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிபிஎஸ் என்று அறியப்பட்ட புத்த கும்பல் தங்கள் வர்த்தக மையங்களுக்குத் தீ வைத்தபோது காவல்துறையினர் அதனைத் தடுக்க முடியவில்லை என்று அங்கிருந்த மக்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது பொலிவியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே செய்தி அறிந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையை வலியுறுத்தினார். சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆசிரியர்