அரசு உதவித்தொகை மோசடி செய்த இங்கிலாந்துப் பெண்ணுக்கு 27 மாதங்கள் சிறைத் தண்டனை அரசு உதவித்தொகை மோசடி செய்த இங்கிலாந்துப் பெண்ணுக்கு 27 மாதங்கள் சிறைத் தண்டனை

இங்கிலாந்தின் டார்ட்மவுத் பகுதியைச் சேர்ந்த கரேன் டிரன்ட்(52) என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அங்கு ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் வீடு, நகரசபை வரி உதவி, வேலைவாய்ப்பு ஆதரவுத் தொகை, வருமான ஆதரவு, உடல்நலம் குன்றியவர்களுக்கான இயலாமை ஆதரவு போன்ற பல உதவித் தொகைகளைத் தொடர்ந்து பெற்று வந்துள்ளார்.

தனக்கு தொடர்ந்து கண்காணிப்பு தேவை, வழிகாட்டல் அல்லது மேற்பார்வை இல்லாமல் வெளியில் செல்லமுடியாத சூழ்நிலை, நெரிசல் மிகுந்த இடங்களில் தனக்கு ஏற்படும் மன அழுத்தம் என்று பலவிதமான காரணங்களைக் கூறி இவர் அந்த உதவித் தொகைகளைப் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த பணத்தில் அவர் இந்தியாவின் உல்லாச விடுமுறைத்தலமான கோவாவில் தனது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்திருப்பது பின்னர் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இங்கு கண்டோலிம் பகுதியில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் கடந்த 2004ஆம் ஆண்டில் வீடு ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். இதனால் அவரால் இங்கு ஐந்து மாதங்களுக்கு மேலும் தொடர்ந்து தங்கியிருக்க முடிந்துள்ளது. இங்கு அவர் தனது நேரத்தை அழகு சிகிச்சையிலும், குதிரை சவாரிகளிலும், பலதரப்பு மக்களுடனும் கலந்திருக்கும் நிகழ்ச்சிகளிலும் கழித்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையால் கைது செய்யப்பட்ட கரேன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவரை விசாரித்த பிளைமவுத் கிரௌன் நீதிமன்றம்  இவர் அரசிடம் மோசடி செய்த 1,34,000 பவுண்ட் நிதி உதவிக்காக 27 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது

ஆசிரியர்