அப்பாவித் தமிழர்களை தூக்கில் ஏற்ற மத்திய அரசு தீவிரம்- ராமதாஸ் கண்டனம் அப்பாவித் தமிழர்களை தூக்கில் ஏற்ற மத்திய அரசு தீவிரம்- ராமதாஸ் கண்டனம்

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்களை தூக்கில் ஏற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு மூவர் விடுதலைக்கு எதிரான மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு வழக்குகளைத் தொடுப்பதை தமிழ் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “”ராஜிவ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டுவிட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களும் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்நேரத்தில் அவர்களுக்கு மீண்டும் தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இதயங்களில் ஈட்டியாக பாய்கிறது.

எனவே, மூன்று தமிழர்களின் தண்டனைக் குறைப்புக்கு எதிராக வழக்கு தொடருவதை மத்திய அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக் காலத்தைவிட அதிக காலத்தை சிறையில் கழித்துவிட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களையும் விடுதலை செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்