May 31, 2023 6:18 pm

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா? – அனில் ஜாசிங்க

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள டொக்டர் ஜாசிங்க, இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில நாட்களில் பல இடம்பெற்றுள்ளன என்றும் எனினும் அவர் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டவர் என்பதால் அவரிடமிருந்து வேறொரு நபருக்கோ அல்லது தொற்று பரவுவதற்கோ வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொற்றாளரின் உடலில், இறந்த RMA பாகங்கள் இருப்பதாலேயே அவர் மீண்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தொற்றுக்குள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் எவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் வசிக்கும் 36 வயதான குறித்த பெண் மே மாதம் 18 ஆம் திகதி குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 28 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.

அதன் பின்னர் அவர் ஹோமாகமயில் உள்ள கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே குணமடைந்து கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடலில்  தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்