Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் அஞ்சுகோட்டை டூ ஜெர்மனி ……பேன்சி நகைகள் தயாரிப்பில் அசத்தும் இளம் தொழிலதிபர்: ஜேசு ஞானராஜ்

அஞ்சுகோட்டை டூ ஜெர்மனி ……பேன்சி நகைகள் தயாரிப்பில் அசத்தும் இளம் தொழிலதிபர்: ஜேசு ஞானராஜ்

5 minutes read

“வீட்டுக்கு அலங்காரம் மனையாள்” என்று சொல்வார்கள். அந்த அழகே அலங்காரப் பொருட்களை தயாரித்து குடும்ப வருவாயைப் பெருக்கினால் எப்படி இருக்கும். ஆம்! ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் வசிக்கும் திருமதி.மகேஸ்வரி பிரெஷ்னேவ், களிமண், குவிலிங் பேப்பர், பட்டு நூல் என பலவிதமானப் பொருட்களால் செயின், காதணிகள், வளையல்கள் என்று பேன்சி நகைகள் செய்து அசத்திவருகிறார். ரெசின் ஜுவல்லரி தயாரிப்பிலும் இவர் மிகவும் பிரபலம். முதுகலையில் பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் மனதுக்கு பிடித்தமான வேலையைத்தான் செய்யவேண்டும் என்ற முனைப்பில் இதில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்ல! துணிகளிலும் தன் கற்பனைவளத்தால் எண்ணிலடங்கா டிசைன்கள் செய்து பெண்களுக்கான உடைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இன்று ஜெர்மனியில் சொந்த தொழிலில் சாதித்துவருகிறார் என்றால் அதற்கு அவரின் கணவரின் சப்போர்ட்டும் மிக முக்கிய காரணம். அழகு பொருட்கள் தயாரித்தல் குடும்பத்தை நிர்வகித்தல், இதனிடையே தையல் வேலை என்று மிகவும் பிசியாக இருந்தவரின் பிரத்தியேக பேட்டி. வணக்கம் லண்டனுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

உங்களின் பூர்வீகம் எது?

தமிழ்நாட்டின் ராமநாதபுர மாவட்டம், திருவாடனை அருகே உள்ள அஞ்சுகோட்டை என்ற அழகான கிராமம் தான் என் சொந்த ஊர். அப்பாவும் அம்மாவும் விவசாயம் செய்றாங்க. அதைப் பெருமையாய் சொல்வதில் எனக்கும் என் இரண்டு அண்ணன்மார்களுக்கும் அத்தனை சந்தோஷம்! சின்ன வயசிலேயே அம்மாவிடம், வயலில் இருந்து வரும் போது, களிமண் கொண்டுவர சொல்வேன். அதில் பிள்ளையார் செய்து பார்த்தேன். அப்படியே அதில் ஆர்வம் அதிகமாகி, பல வடிவங்களில் பானை வகைகள் செய்தேன். அந்த ஆர்வத்தின் அடுத்த கட்டம் தான் இன்றைய பேன்சி நகைகள். கடந்த அக்டோபரில் மதுரையைச் சேர்ந்த திரு.பிரெஷ்னேவ் ஜீவானந்தத்துடன் திருமணம் முடிந்து அவருடன் ஜெர்மனி வந்தேன்.கணவர், பிராங்பேர்ட் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆட்டோமொபைல் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார்.

வேறென்ன பொருட்கள் செய்கிறீங்க?

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த பழைய நியூஸ் பேப்பரில் பழக்கூடை ஒன்றை செய்து பார்த்தேன். எனக்கே அது ரொம்பப் பிடித்திருந்தது. வீட்டில் தேவையற்று கிடக்கும் பொருட்களிலிருந்து புதுசா என்ன பண்ணலாம் னு யோசிச்சிக்கிட்டே இருப்பேன். வயர் கூடை, பாசிமணிகளில் கைப்பை என்று நிறைய செய்திருக்கிறேன்.M.E படிச்சிட்டு நல்ல கம்பனியில் வேலைக்கு போகாம இப்படி களிமண்ணை உருட்டிக்கிட்டு இருக்கிறீயே னு, சொன்னவங்க மூக்கு மேல விரலை வைக்கிறமாதிரி ஜெர்மனியில் என் தயாரிப்புகளை சந்தைப் படுத்திவருகிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர் தான் முதல் காரணம். அதன் பிறகு, திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு வந்தவுடன், அத்தையும் மாமாவும் என் திறமையை உணர்ந்து என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். எதை செய்தாலும் நேர்மையும் நேர்த்தியும் மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள். ஜெர்மனி வந்துவிட்டாலும் இன்றும் என் வாழ்வில் அதை நான் கடைபிடித்து வருகிறேன். இப்பொழுது பட்டு நூல், FIMO களிமண், வண்ண கற்கள் இவைகளைக் கொண்டு செயின், கம்மல், கை செயின், வளையல், மற்றும் நெக்லஸ் என்று நிறைய வெரைட்டியாய் பேன்சி நகைகள் செய்துகொண்டிருக்கிறேன்.

உங்கள் கணவர் எந்தளவுக்கு ஆதரவாக இருக்கிறார்?

ஜெர்மனி வந்தவுடன் கண்ணை கட்டி காட்டில விட்டமாதிரி இருந்தது. உனக்குத்தான் கைவினை பொருட்கள் தயாரிக்கிறதுல ஆர்வம் உண்டே! அதை செய்கிறாயா? என்று கேட்டவர், கையோடு மூலப்பொருட்களையும் வாங்கி வந்து தந்தார். அது தான் அவர் எனக்குத் தந்த முதல் பரிசு. அப்புறமென்ன! உடனே களத்துல இறங்கிட்டேன். இந்த ஒரு வருஷத்துல 3 முறை கண்காட்சியில் என் தயாரிப்புகளை சந்தைப்படுத்தியிருக்கிறேன்.சாதிப்பதற்கு கனவுகளும், கனவுகளுக்கு உறுதுணையாக அன்பான கணவரும் அமைந்துவிட்டால் எல்லா பெண்களுமே சாதனைப் பெண்கள் தான். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்.

ஜெர்மனியில் பேன்சி நகைகளுக்கான மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்கிறதா?

தொடக்கத்தில் எங்கே போய் வாங்குவது என்று தெரியவில்லை. நானும் என் கணவரும் நிறைய கடைகள் ஏறி இறங்கினோம். கூகிளிலும் தேடினோம். அப்படித்தான் சில கடைகளை கண்டு பிடித்தோம். FIMO களிமண், பாசிமணிகள், பலவண்ண கற்கள் போன்றவற்றை மாதம் ஒருமுறை போய் வாங்குவேன். தையல் வேலைக்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது சென்று வாங்குவேன்.கடையில் வித்தியாசமாக ஏதேனும் கண்ணில் பட்டால், உடனே அதை வாங்கி, புதுசா ஏதாவது செய்துவிடுவேன். ஜெர்மனியில் கிடைக்காத பொருட்களை அத்தையிடம் போனில் சொல்வேன். புகைப்படம் இருந்தால் அனுப்பி வைப்பேன். மாமா அந்த படத்தை கொண்டு காட்டி எப்படியாவது வாங்கி எனக்கு அனுப்பி விடுவார்கள். அந்த வகையில் அவர் எனக்கு இன்னொரு அப்பா.

ஜெர்மானியர்களுக்கு இந்த நகைகளில் ஆர்வம் இருக்கிறதா?

ரொம்ப ஆர்வமாய் வந்து பார்க்கிறாங்க. அதோடு மட்டுமல்லாமல் நிறைய வாங்கவும் செய்றாங்க. அவர்கள் எதாவது டிசைன் சொன்னால் அதை செய்தும் கொடுக்கிறேன்.வாடிக்கையாளர்களின் திருப்தி தான் எனக்கு முக்கியம். பணம் அதற்குப் பிறகு தான். பல வண்ணங்களில் செய்வதால், அவர்கள் உடுத்தும் உடைகளுக்கு மேட்ச் ஆக நிறைய வாங்கி செல்கிறார்கள்.

அதென்ன ரெசின் ஜூவல்லரி?

இது ஒருவிதமான பசை.நமக்கு தேவையான அச்சில இந்த பசை போன்ற திரவத்தை ஊற்றி, UV வெளிச்சத்தை அதில் பாச்சினால் transparent டான வடிவம் கிடைக்கும். நான் இதில் பலவித காதணிகள் செய்கிறேன். இங்கே பிராங்பேர்ட்ல் உள்ள பூங்காவிற்கு சென்று, சிறிய இலைகள், காய், விதைகள் மற்றும் மரக்கடைகளை கொண்டு வந்து அதையும் சேர்த்து இந்த ரெசின் நகைகளை செய்கிறேன். இதற்கு இங்கு நிறைய வரவேற்பு இருக்கிறது.

கிராமத்தில் இருந்து வந்த நீங்க, மற்ற பெண்களுக்கு கூறும் அறிவுரை என்ன?

பொதுவாக என் மாதிரி கிராமத்தில் வளர்ந்த பெண்களுக்கு எக்ஸ்போஷர் குறைவு தான். அதை நினைத்து துவண்டு விடாமல் பாரதியின் புதுமை பெண்ணாய் சவால்களை தைரியமாய் எதிர்கொண்டால் வெற்றி உங்கள் காலடியில். எதையுமே ‘முயன்று பார்ப்போம்’ என்று கையில் எடுங்கள்! வெற்றி தேவதை உங்கள் வீட்டு கதவைத் தட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த வெற்றி தேவதை உங்கள் வீட்டில் எப்போதும் குடியிருக்கட்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.

நேர்காணல் – ஜேசு ஞானராஜ்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More