பல்லேகல பயிற்சி முகாமில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க பங்கேற்பு

எதிர்வரும் உலகக் கிண்ண டி20 போட்டிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் 25 தொடக்கம் 30 ஆம் திகதி வரை கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆறு நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாம் முடிந்த பின் உலகக் கிண்ண சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்களுக்கு ஒக்டோபர் 1 ஆம் திகதி ஓய்வு அளிக்கப்பட்டு, அதற்கு அடுத்த தினமான ஒக்டோபர் 2ஆம் திகதி இலங்கை அணி அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிக்கவுள்ளது.  

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணி நாடு திரும்பிய பின் சிறிது காலம் ஒய்வு எடுத்துக் கொண்ட நிலையில் பல்லேகலவிலேயே முதல் முறை பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளது.  

உலகக் கிண்ணத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 15 வீரர்கள் மற்றும் மேலதிக வீரர்களாக இடம்பெற்றுள்ள அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகிய வீரர்களும் இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும் இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர மற்றும் லஹிரு குமாரவின் உடல் தகுதி அடிப்படையிலேயே அவர்கள் உலகக் கிண்ணத்தில் இடம்பெறுவது தங்கியுள்ளது.  

இலங்கை அணி பயிற்சியாளரான இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் தலைமையில் இடம்பெறும் இந்த பயிற்சி முகாமில் அணியின் உதவிப் பயிற்சியாளர் நவீட் நவாஸ், சுழற்பந்து பயிற்சியாளர் பியல் விஜேதுங்க மற்றும் ஏனைய பணிக் குழுவினர் பங்கேற்கின்றனர்.  

உலகக் கிண்ண டி20 போட்டி ஒக்டோபர் 16 தொடக்கம் நவம்பர் 13 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் 7 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஆசிரியர்