இங்கிலாந்து மற்றும் வொயில்ஸில் புதிய வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும்போது மூன்று ஆண்டுக்கு ஒருமுறை கட்டாய கண் பரிசோதனை செய்யும் நடைமுறை வரவிருக்கிறது.
இந்தக் கட்டாய கண் பரிசோதனையில் அவர்கள் தோல்வியடைந்தால் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படும்.
பார்வைக் குறைபாடுள்ள ஓட்டுநர்களால் ஏற்பட்ட நான்கு இறப்புகள் குறித்த விசாரணையில், “இங்கிலாந்தின் உரிமம் வழங்கும் முறையே ஐரோப்பாவில் மிகவும் தளர்வானது” என்று ஒரு பிரேத பரிசோதனை அதிகாரி கூறியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஸ்காட்ட்லாந்தின் நடைமுறையில் உள்ள மதுபோதையில் ஓட்டும் வரம்பை (35 மைக்ரோகிராம் முதல் 22 மைக்ரோகிராம் வரை) இங்கிலாந்து மற்றும் வொயில்ஸிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், சக பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால் தண்டனை புள்ளிகளை வழங்கும் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் இலையுதிர்காலத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ள புதிய வீதிப் பாதுகாப்புத் திட்டங்களில் இந்த மாற்றங்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீதி விபத்துகளால் ஆண்டுக்கு 1,600 பேர் மரணிப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் NHS ஆண்டுக்கு £2 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகிறது,” என்று டைம்ஸில் வெளியான ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.