தென்மேற்கு இலண்டனின் பரபரப்பான கிளாப்ஹாம் ஹை ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை காலை லொரி மோதியதில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 11 மணியளவில் விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து, இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை, சம்பவ மேலாண்மை அதிகாரி மற்றும் விமான ஆம்புலன்ஸ் ஆகியன விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றன.
அங்கு, 70 வயதுடைய நபர் ஒருவர் கனரக சரக்கு வாகனத்தால் (HGV) மோதுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். துணை மருத்துவ ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து கிளாப்ஹாம் ஹை ஸ்ட்ரீட் மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தது ஐந்து பஸ் வழித்தடங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், நேரில் பார்த்தவர்கள் அல்லது டேஷ்கேம் காட்சிகள் வைத்திருப்போர் முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
“அவரது நெருங்கிய உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. தகவல் அல்லது டேஷ்கேம் காட்சிகள் உள்ளவர்கள் 101 என்ற எண்ணில் தொடர்புகொண்டு CAD2859/22MAY26 என்ற குறிப்பை மேற்கோள் காட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என மெட் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.