இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான மின்னணு மருத்துவப் பதிவேட்டை (single patient record) உருவாக்கும் திட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் முறையாக விவாதிக்கின்றனர்.
நோயாளிகள் ஒவ்வொரு முறையும் தங்களது மருத்துவ வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க, பொது மருத்துவர், மருத்துவமனை மற்றும் சமூகப் பாதுகாப்புத் தரவுகளை ஒருங்கிணைப்பதே, இதன் நோக்கமாகும்.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளின் மருந்து விவரங்கள் மற்றும் ஒவ்வாமைகளை உடனடியாகப் பார்க்க முடியும். இதன்மூலம் தவறான நோயறிதல்கள் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 20,000 நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முறை 2027 முதல் என்.எச்.எஸ் செயலி (NHS App) மூலம் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும். இது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை குறித்து பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) கவலை தெரிவித்துள்ளது. இந்தத் தரவுகளை வணிக நிறுவனங்கள் லாபத்திற்காகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்ற அச்சமும் எழுப்பப்பட்டுள்ளது.
எனினும், தரவுப் பாதுகாப்பிற்கு வலுவான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் சைபர் பாதுகாப்பு வழங்கப்படும் என்று சுகாதாரச் செயலாளர் ஜேம்ஸ் முர்ரே உறுதியளித்துள்ளார். மேலும், யார் தரவை அணுகினார்கள் என்பதைக் கண்காணிக்க முறையான தணிக்கை வழிமுறை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டம் ‘என்.எச்.எஸ் நவீனமயமாக்கல் மசோதாவின்’ (NHS Modernisation Bill) ஒரு பகுதியாகும். இந்த மசோதாவில் என்.எச்.எஸ் இங்கிலாந்து (NHS England) அமைப்பைக் கலைப்பது போன்ற கூடுதல் சீர்திருத்தங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.