இங்கிலாந்தின் முன்னாள் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்ட ருவாண்டா அகதிகள் தஞ்சம் அளிக்கும் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச நீதிமன்ற வழக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் ருவாண்டாவிற்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக வழங்க வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வருபவர்களை ருவாண்டாவிற்கு அனுப்பி, அங்கேயே அவர்களின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் திட்டத்தை முன்னாள் அரசு கொண்டு வந்தது. ஆனால், பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர் கட்சி அரசு பொறுப்பேற்றவுடன், இந்தத் திட்டத்தை ரத்து செய்தது.
ஒப்பந்த விதிமுறைகளை இங்கிலாந்துமீறிவிட்டதாகக் கூறி, ருவாண்டா அரசாங்கம் சுமார் 100 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் (£100m) இழப்பீடு கோரி, நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் (Permanent Court of Arbitration) வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ருவாண்டா கோரும் எந்தவொரு இழப்பீட்டுத் தொகைக்கும் அது தகுதியற்றது என்று தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடுகையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது பழைய திட்டங்களை ரத்து செய்வது முற்றிலும் தர்க்கரீதியானது. இனிமேல் எந்தப் பணமும் வழங்கத் தேவையில்லை என்பது ஒரு சாதாரண பொது அறிவு சார்ந்த விஷயம் என்று வாதிட்டனர்.
இந்தத் திட்டம் முதன்முதலில் 2022இல் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனால் அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிஷி சுனக் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைச் சிறிய படகுகள் மூலம் கடந்து வருபவர்களைத் தடுக்கும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டது.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால், 2022இல் திட்டமிடப்பட்ட முதல் விமானம் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு பேர் மட்டுமே தானாக முன்வந்து ருவாண்டாவிற்குச் சென்றுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய இங்கிலாந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர், அரசாங்கம் தனது நிலப்பாட்டை நீதிமன்றத்தில் வலுவாகப் பாதுகாத்ததாகத் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் எல்லைக் கட்டுப்பாடுகளைச் சீரமைப்பதிலும், சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.