நாடாளுமன்றில் நேற்று(21.1.2020)இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குரல்பதிவுகளும் தன்னிடம் உள்ளது என தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை முழுவதும் இன்று எனது என கூறப்படும் குரல் பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நான் எனது பாதுகாப்புக்காகத்தான் இந்த குரல் பதிவுகளை சேகரித்து வைத்திருந்தேன். திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.என தெரிவித்த அவர் அனைத்து குரல் பதிவுகளையும் நான் இவ்வேளையில் சபையில் சமர்ப்பித்தார் .
மேலும் அக் குரல் பதிவுகளை பற்றி இதில், அரச தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் குடும்ப உறவுகள் என அனைவரின் குரல் பதிவுகளும் உள்ளன.அனைத்திற்கும் எம்மிடம் சாட்சிகள் உள்ளன. திருடர்களைப் பிடிப்போம் என்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், திருடர்கள் நாட்டை விட்டுத் தப்பித்துச் செல்ல ஹெலிகெப்டர்களை வழங்கினார்கள்.
முன்னாள் ஜனாதிபதி திருடர்களை பிடிக்க முற்பட்டார். ஆனால், இடையே மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி இடம்பெற்று விட்டது.இதன்போது, அர்ஜுன அலோசியஸ் என்னிடம் பேரம் பேசிய தொலைப்பேசி உரையாடலும் என்னிடம் உள்ளது.போதைப்பொருள் ஆசாமிக்கு மரண தண்டனை வழங்கியமைக்காக, முன்னாள் நீதிபதி பத்மினி என். ரணவக்கவின் மகனுக்கு அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அவரது மகனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். இதைத்தான் நான் பேசினேன். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்திர, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதுதொடர்பாக பேசினேன். அனைத்து குரல் பதிவுகளும் உள்ளன.
நான் பொலிஸாரை அவரது மகனின் பாதுகாப்பிற்காக அனுப்பினேன். இதுதான் நடந்தது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.ஆனால், இதைவிடுத்து இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஆசாமிக்கு சார்பாக அரசியல்வாதிகள், மதகுருமார்கள் கதைக்கிறார்கள்.
நான் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் குரலாகத்தான் இருந்துள்ளேன். இதனால், எனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் கூட வந்துள்ளன.நான் என்றும் பொய்க்கூறவில்லை. இதனால்தான் இன்றும் அச்சமில்லாமல் கதைத்துக் கொண்டிருக்கிறேன்.
இன்று எனது குரல் பதிவுகள் தொடர்பாக ஆராய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.இதனை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டவுடன் நான் தைரியமாக, எனது குரல் பதிவுகளுடன் முன்னிலையாவேன்.
அந்தக் குரல் பதிவுகளில் பிரதமரின் குரல் பதிவுகளும் உள்ளன என்பதை இவ்வேளையில் நான் கூறிக்கொள்கிறேன்.ஆதாரத்துடன் பேச வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாரிகளுடன் பேசினேன்.
சவுதியில் ரிசானா நாபீக்கின் மரண தண்டனை விவகாரத்தின்போது நான் அப்போது மஹிந்த ராஜபக்ஷவிடம் பேசியிருந்தேன்.இதன்போது என்னை அவர் கடுமையாக ஏசிய குரல் பதிவும் என்னிடம் உள்ளன.நீதிமன்றங்களுக்கு கடந்த காலங்களில் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பான குரல் பதிவுகள் உள்ளன.
கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பான குரல் பதிவுகளும் உள்ளன. திலங்க சுமத்திபால, ஆட்ட நிர்ணய சதி செய்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.ஏன், ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கு இலங்கையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பான தரவுகளும் என்னிடம் உள்ளன.
என்னை இங்கு யாரிடமும் நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. இங்கு யாரும் உத்தமர்கள் அல்ல.இதற்காக என்னை கொலை செய்தால்கூட பரவாயில்லை. ஆனால், குரல் பதிவுகளை ஒன்றும் செய்யமுடியாது. அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.