Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியீடு!

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியீடு!

3 minutes read

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் மணல் அகழ்வு நடக்கிறது என்ற செய்திகள் அண்மைக்காலமாக பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமான ஒரு தெளிவை ஏற்படுத்த விரும்புகிறோம்.

மேற்படி பகுதியில் யாழ். ஆயர் இல்லத்திற்கு சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர்கள் காணிகள் உள்ளன. அவை போர் சூழுல் மற்றும் காரணிகளால் நீண்ட பல வருடங்களாக எவ்வித அபிவிருத்தியுமில்லாமல் இருக்கின்றன.

தற்போது அவற்றை அபிவிருத்தி செய்யக்கூடிய சூழ்நிலை இருப்பதால் கடந்த 2018 செப்ரம்பர் மாதம் முப்பத்தியிரண்டு ஏக்கர் காணியை ஒரு சாராருக்கு அபிவிருத்தி செய்யும்பொருட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது.

இவ் ஒப்பந்தத்தின்படி ஒப்பந்தகாரர்கள் இப்பகுதியில் நிலமட்டத்தின்மேல், புவிச்சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் பணியகத்தின் வழிநடாத்தலிலும், அதன் நியமங்களின் அடிப்படையிலும், அரச சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய அனுமதிகள் பெற்று மேலதிக மணலை அகற்றி, அவ்விடத்தைச் சுற்றி வேலிகள் அமைத்து தென்னம்பிள்ளைகள், மரமுந்திரிகைக் கன்றுகள் நட்டு காணியை மீண்டும் ஆயர் இல்லத்திற்கு கையளிக்கவேண்டும் என்பதே இவ் ஒப்பந்தமாகும்.

அத்துடன் அங்கிருந்து கொண்டு செல்லப்படும் மணலுக்கேற்ப ஒவ்வொரு டிப்பருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை ஆயர் இல்லத்துக்கு செலுத்தவும் ஒப்பந்தகாரர் இணங்கியிருந்தார்கள்.

ஆயினும் ஒப்பந்தகாரர்கள் மணல் அகழ்வில் மட்டும் கவனம் செலுத்தியதாலும், காணி அபிவிருத்தியை அதாவது வேலி அடைத்தல், தென்னம்பிள்ளைகள், மரமுந்திரிகைக் கன்றுகள் நடுதல் போன்றவற்றில் அக்கறையின்றி செயற்பட்டதாலும், செலுத்தவேண்டிய பணத்தை முறையாக செலுத்தாததாலும் இதுபற்றி பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை செய்தும் பலனில்லாமல் போனதால் கடந்த ஏப்ரல் மாதம் உனடடியாக சகல மண் அகழ்வு நடவடிக்கைகளை நிறுத்தும்படியாகவும், காணிகளிலிருந்து வெளியேறும்படியாகவும் ஆயர் இல்லம் அறிவுறுத்தியது.

இதனால் ஒப்பந்தகாரர் ஆயருடனும் மறைமாவட்ட காணிகள் அபிவிருத்திக் குழுவினருடனும் நேரடியான சந்திப்பை ஏற்படுத்தி தமது தவறுகளை ஏற்றுக்கொண்டதோடு தமக்கு வருகிற செப்ரம்பர் மாதம் வரை மண் அகழ்வதற்கான உரிய அனுமதி இருப்பதாகவும் அதுவரை தாம் மணல் அகழ்வைத் தொடர்வதோடு ஒப்பந்தத்தின்படியான அபிவிருத்திகளை செய்து தருவதாகவும், செலுத்தவேண்டிய மிகுதிப்பணம் முழுவதையும் செலுத்துவதாகவும் வாக்களித்தார்கள்.

இவற்றை ஏற்றுக்கொண்ட ஆயர் இல்லம் கடுமையான எச்சரிக்கைகளுடன் அவர்களை வருகிற செப்ரம்பர் மாதம் அனுமதி காலாவதியாகும்வரை தொடர்ந்து மணல் அகழ்வு செய்யவும் அதே வேளையில் அபிவிருத்தி செய்யவும் அனுமதித்துள்ளது.

இதேவேளையில், மேற்படி முப்பத்தியிரண்டு ஏக்கர் காணிக்கு அருகிலுள்ள பத்து ஏக்கர் காணியிலும் இதே போன்று தென்னம்பிள்ளைகள், மரமுந்திரிகைக் கன்றுகள் நடுவதற்கான ஆயத்தங்களை அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோட்டத்திற்குப் பொறுப்பான குருவானவரிடம் ஆயர் இல்லம் கெட்டுக்கொண்டது.

இதற்குக் காரணம் என்னவென்றால் அருகிலுள்ள ஒப்பந்தகாரருக்கு காணி அபிவிருத்தி தொடர்பான ஒரு முன்மாதிரிகையைக் காட்டுவதுமாகும். தென்னம்பிள்ளைகள், மரமுந்திரிகைக் கன்றுகள் நடுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக நிலம் மட்டப்படுத்தப்பட்டு மேலதிக மணல் எற்கனவே அவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுனாமி மண் அணையோடு சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றின் ஒளிப்படங்கள்தான் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இங்கு குவிக்கப்பட்டுள்ள மணல் யாருக்கும் விற்பனை செய்யப்படவோ அல்லது வெளியில் எடுத்துச் செல்ல யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவோ இல்லை என்பதையும் ஆயர் இல்லம் உறுதிப்படுத்துகிறது.

இது தவிர, நாம் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும். களவாக மணல் அகழ்வுசெய்வதும் விற்பதும் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒரு குற்றச்செயலாகும். இதற்கு பலர் உடந்தையாகவும் இருக்கிறார்கள்.

இப்படியான குற்றச்செயல்கள் எமது ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளிலும் இடம் பெற்றால் அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. இதற்குப் பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் இவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

காணிகளை அபிவிருத்தி செய்வதும் அவற்றிலிருந்து வரும் பொருளாதாரத்தைக்கொண்டு மக்களுக்கு உதவுவதும் ஆயர் இல்ல செயற்பாடுகளில் முக்கியமானதாகும். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணிகள் பொதுத் தேவைகளுக்காகவும், தனிப்பட்ட குடும்பங்களுக்காகவும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எல்லா செயற்பாடுகளிலும், நேர்மையோடும், உண்மையோடும், நீதியோடும் செயற்படுவதுமே கத்தோலிக்க திரு அவையின் நோக்கமாகும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More