September 22, 2023 3:48 am

மட்டு. மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உள்ளிட்டோர் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகப் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இன்று காலை மாவட்ட செயலகத்தின், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், மாவட்ட செயலகத்துக்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்ட செயலகத்துக்குள் நுழைய முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன், மாவட்ட செயலகத்துக்குள் பொதுமக்கள் நுழைய முடியாதவாறு வாயில் கதவுகள் மூடப்பட்டன.

இதன்போது மாவட்ட செயலகக் கதவை றித்து பொதுமக்களும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வாகனேரி பகுதியில், சூரிய மின்கல மின்திட்டத்தை அமைப்பதற்காக விவசாயக் காணியை எடுக்க முனையும் செயற்பாட்டைக் கண்டித்தும், வாகரைப் பகுதியில், இல்மனைட் அகழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை நிறுத்தக் கோரியும், வாகரைப் பகுதியில், காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடத்தாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்தி, காணி தொடர்பான அரசுக்குச் சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதேநேரம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை உள் நுழைவதற்கு அனுமதிக்காத நிலையில் பொலிஸாருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையும் காணக்ககூடியதாக இருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும் செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஷ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்குத் செல்வதற்கான அனுமதியைப் பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்ட செயலகத்துக்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட வேளை மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மக்களின் கோரிக்கைக்குத் தெளிவுபடுத்தல் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, சாணக்கியன் எம்.பியும் சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, அவரும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்