September 22, 2023 6:46 am

கஜேந்திரகுமார் எம்.பிக்குப் பிணை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது வீட்டில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அவரைக் கைது செய்ய கிளிநொச்சியில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று சென்றிருந்தது.

இதன்போது, தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், சபாநாயகரைத் தொடர்பு கொண்டு விடயத்தைத் தௌிவுபடுத்தினார்.

எனினும், பொலிஸார் சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரைக் கைது செய்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர்.

இதேவேளை, மருதங்கேணி சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை 4 மணித்தியாலங்கள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வாக்குமூலம் பெறுவதற்காக யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான மனு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் செல்வராஜா உதயசிவம் ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்