செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ‘சங்கு’ – ‘சைக்கிள்’ அணி வசம் (படங்கள் இணைப்பு)

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ‘சங்கு’ – ‘சைக்கிள்’ அணி வசம் (படங்கள் இணைப்பு)

2 minutes read

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பரபரப்பான முத்தரப்புப் போட்டியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவானார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

36 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன தலா 5 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் சுயேச்சைக் குழு – 01 ஆகியன தலா இரண்டு ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு – 02 ஆகியன தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

இன்றைய தவிசாளர் தெரிவுக்கான போட்டியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் செல்வத்திசைநாயகம் தவநாயகமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் தியாகராஜா நிரோஷும், தேசிய மக்கள் சக்தி சார்பில் சிவசுப்பிரமணியம் சுகிர்தரூபனும் முன்மொழியப்பட்டனர்.

தவிசாளரைத் தெரிவு செய்வது பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என உள்ளூராட்சி ஆணையாளரால் கோரப்பட்டபோது, தவிசாளர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்பதை முடிவு செய்வதைக் கூட இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேசிய மக்கள் சக்தியினர் கோரிய நிலையில் சட்டதிட்டங்களின் பிரகாரம் அதனைச் செய்ய முடியாது என உள்ளூராட்சி ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

அதையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன பகிரங்க வாக்கெடுப்பையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி ஆகியன இரகசிய வாக்கெடுப்பையும் கோரின. அதன்படி பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தவிசாளர் பதவிக்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் 16 வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட செல்வத்திசைநாயகம் தவநாயகம் 11 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சிவசுப்பிரமணியம் சுகிர்தரூபன் 9
வாக்குகளையும் பெற்றனர்.

இந்நிலையில் முதலாவதாக வந்தவரை விட ஏனைய இருவர்களின் வாக்குகளின் கூட்டுத் தொகை அதிகமாகக் காணப்பட்டதால் மூன்றாவதாக வந்த தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் சுகிர்தரூபன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு ஏனைய இருவருக்கும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர ஏனைய 8 உறுப்பினர்களும் பங்கேற்காது நடுநிலை வகிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் செல்வத்திசைநாயகம் தவநாயகமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் தியாகராஜா நிரோஷும் மீண்டும் இரண்டாம் சுற்றில் களமிறங்கினர்.

அதையடுத்து தவிசாளருக்கான வாக்கெடுப்பு பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என உள்ளூராட்சி ஆணையாளரால் கோரப்பட்டபோது பகிரங்க வாக்கெடுப்புக்கும் இரகசிய வாக்கெடுப்புக்கும் சரிசமமாக14 வாக்குகள் கிடைத்ததால் திருவுளச்சீட்டின் பிரகாரம் இரகசிய வாக்கெடுப்பை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் 16 வாக்குகளையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட செல்வத்திசைநாயகம் தவநாயகம் 11 வாக்குகளையும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லுபடியற்ற வாக்காகப் பதியப்பட்டிருந்தது.

இதன்படி தவிசாளராக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த தியாகராஜா நிரோஷ் தெரிவானார்.

உப தவிசாளராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த தர்மலிங்கம் ஜனார்த்தனன் தெரிவானார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கடந்த தடவையும் தவிசாளராகத் தியாகராஜா நிரோஷ் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Screenshot

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More