யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி ‘அணையா விளக்கு’ தொடர் போராட்டம் இன்று ஆரம்பமானது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழிக்குச் சர்வதேச நீதி கோரி மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் ‘அணையா விளக்கு’ எனும் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் யாழ். நல்லூர் வளைவுக்கு அருகில் இன்று ஆரம்பமானது.
செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் உறவினர், மதத் தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து இன்று முற்பகல் 10.10 மணியளவில் அணையா விளக்கை ஏற்றிப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
அதன்பின்னர் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது
தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் சர்வமதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, செல்வராசா கஜேந்திரன், முன்னாள் யாழ். மாநகர சபையின் மேயர் வி.மணிவண்னணன், மக்கள் செயல் அமைப்பின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நாளன்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.