செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழினப் படுகொலை: இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள்! – ஐ.நா. ஆணையரிடம் சிறீதரன் கோரிக்கை (படங்கள் இணைப்பு)

தமிழினப் படுகொலை: இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள்! – ஐ.நா. ஆணையரிடம் சிறீதரன் கோரிக்கை (படங்கள் இணைப்பு)

2 minutes read

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கோரியுள்ளார்.

இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், வணபிதா ஆம்ஸ்ரோங் அடிகளார், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட 2021.01.15 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களை மேற்கோள் காட்டி தனது கோரிக்கையை முன்வைத்த சிறீதரன் எம்.பி., எழுத்துமூல கோரிக்கை ஒன்றையும் ஆணையாளரிடம் நேரில் கையளித்துள்ளார்.

அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து ஆட்சிப்பீடம் ஏறிய அனைத்து அரசுகளும் சிங்கள – பௌத்த பெரும்பான்மைவாதத்தை நிறுவனமயமாக்கி, ஈழத்தமிழர்களின் அடையாளத்துவ வாழ்வை சிதைத்து, சுயாட்சி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அடியோடு இல்லாமல் செய்தன. இதற்காக நீண்ட காலம் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான ஜனநாயக எதிர்ப்புப் போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்ட பின்னர், ஆயுத மோதல் ஏற்பட்டிருந்ததடன், அதன் உச்சமாக 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை என்ற இனப் பேரவலம் நிகழ்ந்திருந்தது.

போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள்தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு என்பவை தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சியின் கீழும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 (2015) மற்றும் 46/1 (2021) தீர்மானங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டாலும், அவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும், செய்யப்பட்ட குற்றங்களின் வீரியத்தையும் ஈடுசெய்யத்தக்கவையல்ல என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். அதேவேளை இலங்கை அரசு OHCHR ன் OSLAP திட்டத்தை தடையின்றி அணுகுவதைத் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுக்கிறது.

இத்தகைய உள்ளக அரசியல் நிலைமாறுதல்களை கடந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானங்களுக்கு அப்பால் நகர்ந்து, தமிழினப் படுகொலை விவகாரத்தை ஐ.நா. பொதுச் சபைக்கும், ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லும் தெளிவான குறிக்கோளுடன் கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றைச் செயற்படுத்த வேண்டுமென தங்களை தயவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

நீதிக்கான பாதைகளை திறப்பதில் ஏற்படும் தாமதம், இலங்கை அரசுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான தைரியத்தை அதிகரிக்கும் சமநேரத்தில் ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் ஒரு தேசமாக அழிக்கப்படுவதையும் துரிதப்படுத்தும் என்ற அடிப்படையில் நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தாமதிக்கப்படாதிருப்பதை தங்கள் கொள்கை ரீதியான தலைமைத்துவம் உறுதிசெய்ய வேண்டும்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More