செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

1 minutes read

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமான முறையில் ஊடுருவிய, இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள இலங்கையர்கள் இருவரை ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு இன்று (24)  அதிகாலை இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் சென்று இறங்கியதாக ராமேஸ்வரம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது இலங்கையை சேர்ந்த இருவர் வந்திருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார், ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட்டாலை, ம்பகா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 30, 31 வயதுகளையுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் நேற்று (23) இரவு  மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து 3 லட்சம் பணம் கொடுத்து படகு ஒன்றில்  புறப்பட்டு இன்று (24) அதிகாலை சுமார் 4 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் சென்று இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும், ஐஸ், ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல, நிலுவையில் உள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்ட விரோதமாக மறைந்திருப்பதற்காக இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என மரைன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட இருவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை மற்றும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையர்கள் இருவர் மீதும், மரைன்  பொலிஸார், சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டின்றி தமிழகத்துக்கு ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்து, புழல் சிறையில்  அடைக்க நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில்,  கியூ பிரிவு பொலிஸார், கைதான இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கையில் நிலுவையில் உள்ளதால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது என தீர்மானித்துள்ளனர்.

இதனால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதியில் நேற்று (23) தொடங்கிய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று (24) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள குறித்த இருவரும்   சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுறுவிய சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.