செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அல்சருக்கு ஏற்ற உணவு தயாரிக்கும் முறைகள்

அல்சருக்கு ஏற்ற உணவு தயாரிக்கும் முறைகள்

3 minutes read

அல்சர் எப்படி உருவாகிறது
வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.

டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும். அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, ‘ஹெச் பைலோரை’ (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகையான பாக்டீரியா. உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம். இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான ‘டியோடினம் ‘என்ற பகுதியில்தான் அல்சர் உருவாகும். இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு ‘பெப்டிக் அல்சர்’ என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்து விடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், இரைப் பையில் சுரக்கக் கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டு விடும். வந்திருப்பது அல்சர்தானா? புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது? ஹெச் பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?’ என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டு பிடித்துவிடலாம். முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம். எண்டோஸ் கோபி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.

வயிற்றில் புண் வந்து ஆறும்போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன் குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு ‘திம்’என்று இருக்கும். இதை சிலர், ‘சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை. வாயுத் தொல்லையாக இருக்குமோ?’ என்று நினைப்பார்கள். இப்படி அடைப்பு ஏற்படும் போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறு குடலுக்கு போய் விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கி விடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.

வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால் அல்சரை அறவே ஒழித்து விடலாம்.

அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகள்
கடுகு-தேங்காய் பச்சடி

தேவையானவை

கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்)

தேங்காய் துருவல் – அரை மூடி (100 கிராம்)

தயிர் – ஒரு கப் (100 மில்லி)

சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை

சின்ன வெங்காயம் – 2, உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் அவியல் கூட்டு

தேவையானவை

பொடியாக நறுக்கி கேரட், சௌசௌ, சுரைககாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது – ஒரு கப், தயிர் – அரை கப் (50 மில்லி), சர்க்கரை – ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் – கால் கப் (25 கிராம்), பயத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 5 மில்லி.

செய்முறை

வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். பயத்தம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும். இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவியாக இருக்கும். வீரியமிக்க புண்களையும் ஆற்றக்கூடிய அருமருந்தான தேங்காய் எண்ணெயும் சேர்க்கப்படுவதால், வயிற்று எரிச்சல் குணமாகும். கடுகு சேர்த்திருப்பதால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்.

ஆதாரம்: விதை 2 விருட்சம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.