





உருளைக்கிழங்கை எப்போதும் வேக வைத்தோ அல்லது வேறு ஏதேனும் சமையல் முறையிலோ சமைத்து தான் சாப்பிட வேண்டும். பச்சையாக மட்டும் சாப்பிடக்கூடாது. பச்சையாக சாப்பிடடால் வயிற்று உப்புசம் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அஸ்பாரகஸில் என்ன தான் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் அதிகம் இருந்தாலும், இதை பச்சையாக சாப்பிடக்கூடாது. பச்சையாக சாப்பிட்டால் தீங்கு ஏதும் நேராது. இருப்பினும், சமைத்து சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் அஸ்பாரகஸை சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்படுகிறது.
காளான்கள் ஆரோக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், காளானை பச்சையாக சாப்பிட்டால், அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சில வகையான காளான்களை பச்சையாக சாப்பிட்டால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.
கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் பாதுகாப்பற்ற பொருளான சோலனைன் உள்ளது. பெரும்பாலும் இந்த சோலனைன் ஆரம்பத்தில் அறுவடை செய்த கத்திரிக்காயில் அதிகளவில் இருக்கும். பச்சையாக கத்திரிக்காயை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகள் மற்றும் சோலனைன்பாய்சனிங்கை ஏற்படுத்தலாம்.
காலிஃப்ளவர் மற்றும் ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அடிப்படையாகவே செரிமான மண்டலத்தால் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கலாம். அதுவும் இவற்றை பச்சையாக சாப்பிடும் போது, அதில் உள்ள ஆக்ஸலேட்டுகள் சிறுநீரக கற்களை உருவாக்குவதோடு, அதிகளவில் உண்ணும் போது அது இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.
பசலைக்கீரையை பலரும் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடுவதுண்டு. பசலைக்கீரையை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பற்றது அல்ல. இருப்பினும், பசலைக்கீரையை சமைத்து சாப்பிடுவதனால் அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை உடலுக்கு எளிதில் கிடைக்கும்.
பலருக்கு முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடப் பிடிக்கும். ஆனால் முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிட்டால், அது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். எனவே முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுங்கள்.