செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பு! – ஆளுநர் ஆதங்கம்

வடக்கில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பு! – ஆளுநர் ஆதங்கம்

2 minutes read

“வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்ற வேண்டும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்றுறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்தபோதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட தேவையுடைய மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கும்போது அவர்களுக்கு காணி இல்லை என்பதைக் காரணம் காட்டி வீடுகளை வழங்காமல் விட வேண்டாம். காணிகளை அவர்களுக்குக் கண்டறிவதற்குரிய ஒழுங்குகளை நாங்கள் முன்னெடுப்போம்.

கடந்த காலங்களைப் போன்று பனைசார் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சில ஆலயங்களில் பின்பற்றப்படுவதைப் போன்று பனைஓலையிலான அர்ச்சனைப் பெட்டிகளை ஊக்குவிக்க வேண்டும்.” – என்றார்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்கள் கள்ளை உற்பத்தி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கும், உற்பத்தி வரியாகவும் அரசுக்குப் பல மில்லியன் ரூபாவைச் செலுத்தியுள்ளன. அதேபோன்று 2 தனியார் நிறுவனங்கள், பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து போத்தல் கள்ளை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் ஊடாக பல இலட்சம் டொலரை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளன.

கூட்டுறவுத் திணைக்களம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சங்கங்களுக்கு 6 சதவீத வட்டிக்குக் கடனை வழங்குகின்றன. அதனை அவர்கள் மக்களுக்கு ஆகக்கூடியது 15 சதவீதம் வரைக்கும் வழங்க முடியும். ஆனால், வடக்கில் சில சங்கங்கள் வேறு சமாசங்களிடமிருந்து 15 சதவீத வட்டிக்குக் கடனைப் பெற்று அவற்றை மக்களுக்கு 21 சதவீதம் வரைக்கும் வழங்குகின்றன. இது வடக்கு கூட்டுறவுத்துறைக்குச் சவாலாக இருக்கின்றது.” – என்றார்.

இதன்போது வடக்கு ஆளுநர், அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும், கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பணித்தார்.

சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா, திணைக்களத்தின் பல்வேறு வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும், பணிப்பாளர், தம்மிடம் பல்வேறு உதவிகளைக் கோரி மக்கள் வருவதாகவும், ஆனால் தமது எல்லைக்குட்பட்டு அவர்களுக்குரிய உதவிகளைச் செய்ய முடியாத நிலைமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறானவர்களுக்கு நன்கொடையாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உதவிகளைச் செய்ய முடியும் என்றும், அவ்வாறு உதவி கோரி வருபவர்களின் விவரங்களை வழங்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், நலனோம்பு மன்றம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும், அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்ததுடன் அதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More