இங்கிலாந்தில் இ-ஸ்கூட்டர் விபத்துக்களால் காயமடையும் சிறுவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.
லிவர்பூல், மான்செஸ்டர் மற்றும் ஷெஃபீல்ட் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள சிகிச்சை மையங்களில் மட்டும் 2019ஆம் ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட 477 சிறுவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டில் 10க்கும் குறைவாக இருந்த விபத்துகளின் எண்ணிக்கை, 2024 இல் சுமார் 150ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 12ஆக உள்ளது. இதில் 9 வயது சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்தள்ளது. சில இ-ஸ்கூட்டர்கள் “டர்போ மோட்” மூலம் மணிக்கு 28 மைல் வேகம் வரை செல்லக்கூடியவை. எனவே, இது சிறுவர்களுக்குப் பாதுகாப்பற்றது என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது இங்கிலாந்தின் தனியாருக்குச் சொந்தமான இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கு வயது வரம்போ அல்லது வேகக் கட்டுப்பாடோ இல்லை.
இருப்பினும், இவற்றை பொது வீதிகள், நடைபாதைகள் அல்லது கால்தடப் பாதைகளில் ஓட்டுவது சட்டவிரோதமானது. தனியாருக்குச் சொந்தமான இ-ஸ்கூட்டர்களை, உரிமையாளரின் அனுமதியுடன் தனியார் நிலங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதுவரை இ-ஸ்கூட்டர் தொடர்பான விபத்துகளில் இங்கிலாந்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளில் காயமடைபவர்களில் 10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகம் (50%) பாதிக்கப்படுகின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இ-ஸ்கூட்டர்கள் ஒன்றும் “தீங்கற்ற பொம்மைகள்” அல்ல என்று எச்சரித்துள்ள பொலிஸார், இந்த விபத்துகளைத் தடுக்க, வேகக் கட்டுப்பாடு கருவிகளைப் பொருத்துதல் மற்றும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு சட்ட விதிகளைத் தெளிவாக விளக்குதல் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, இ-ஸ்கூட்டர் பயன்படுத்தும் போது தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட புதிய சட்டங்களைக் கொண்டுவர இங்கிலாந்து போக்குவரத்துத் துறை ஆலோசித்து வருவதாகத் தெரியவருகிறது.