டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது.
இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில் இடம் பெற்ற ‘நான் ஒரு ராசி இல்லா ராஜா’, ‘வாசமில்லா மலர் இது’, ‘இது குழந்தைபாடும் தாலாட்டு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’ உள்ளிட்ட பாடல்கள் பட்டி, தொட்டியெங்கும் கலக்கின. காதலர்களின் தேசிய கீதங்களாக இவை அமைந்தன.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா வடபழனி ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இதில் ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்து இருந்தார்.
‘ஒரு தலை ராக’த்தில் கதாநாயகியாக நடித்து இருந்த ரூபா ஐதராபாத்தில் இருந்து வந்து இருந்தார். தும்புவாக நடித்த கைலாஷ் கேரளாவில் இருந்து வந்து இருந்தார். ஒருவருக்கொருவர் கைகளை பிடித்தபடி கண்ணீர் மல்க நலம் விசாரித்தனர்.
விழாவில் டி.ராஜேந்தர் பேசியதாவது:– ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினரை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் படித்த கல்லூரியிலேயே இந்த படத்தை எடுத்தோம். மேகத்தோடு மோதாத காற்று மாதிரி அப்போது காதல் இருந்தது. ஆனால் இப்போதைய காதல்கள் மேக்கப், பிக்கப், பேக்கப் என்பது போல் ஆகிவிட்டது. காலையில் ஒரு பெண்ணை பார்க்கிறான். அன்று மேட்னி ஷோவுக்கே பிக்கப் பண்ணுகிறான். இரவில் எல்லாம் முடித்து விட்டு பேக்கப் ஆகிவிடுகிறான்.
‘ஒருதலை ராகம்’ படத்தில் ரூபா நாயகனுடன் கிளைமாக்சில் தான் பேசுவார். அப்போது அவன் உயிருடன் இருக்க மாட்டான். காதலில் அப்போது ஜீவன் இருந்தது. அந்த படத்துக்கு முதலில் தடை போடும் மேகங்கள் என்று தான் தலைப்பு வைத்தேன். பிறகு அதை மாற்றினோம்.
சந்திரசேகர் நடித்த கேரக்டரில் என்னை நடிக்கும்படி இப்ராகிம் நிர்பந்தித்தார். ஆனால் அந்த கேரக்டரில் சிகரெட் பிடிக்க வேண்டி இருந்ததால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இன்று வரை சிகரெட்டை தொட்டது இல்லை. 34 வருடம் கழித்து இந்த சந்திப்பு நிகழ்கிறது.
ஆனால் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த உஷாவை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தோடு சேர்ந்து வாழ்வது போன்ற உணர்விலேயே எப்போதும் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூபா பேசும் போது, ‘ஒரு தலை ராகம்’ படத்தில் எனக்கு அதிகம் வசனமே இல்லை. அதில் நாயகனாக நடித்த சங்கர் படம் இயக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் பணியாற்றியவர்களை மீண்டும் சந்திப்பதில் சந்தோஷப்படுகிறேன் என்றார்.
பிறகு ‘மணல் நகரம்’ பாடல்கள் வெளியிடப்பட்டது. இதில் நாயகனாக நடித்த பிரஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.