March 24, 2023 3:15 am

சருமத்துக்கு குளிர்ச்சி தரும் ‘பேஸ் பேக்குகள்’

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது. அவை நீரிழப்பு, உலர் சருமம் போன்ற கோடை கால சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். கோடை கால சரும பிரச்சினைகளை தீர்க்கவும், சருமத்தை குளிர்ச்சியாக உணர வைக்கவும் சில காய்கறிகள், பழங்களை கொண்டு பேஷியல் மற்றும் மசாஜ் மேற்கொள்ளலாம்.

பழ பேஸ்பேக்:

பழங்கள் சாப்பிடுவது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். அதுபோல் பழங்களை பயன்படுத்தி முகத்திற்கு பேஷியல் செய்வதும் சரும அழகை மெருகேற்றும். பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை பயன்படுத்தி பேஷியல் மேற்கொள்ளலாம். பப்பாளியில் என்சைம்கள் அதிகமாக உள்ளன. அவை இறந்த செல்களை அகற்ற உதவும். வாழைப்பழம் சரும செல்களை இறுக்கமாக வைத்திருக்க உதவும். ஆப்பிளில் இருக்கும் பெக்டின் சருமத்தை சுத்தப்படுத்த துணை புரியும். ஆரஞ்சு பழம் சருமத்தின் அமில-கார சம நிலையை மீட்டெடுக்க உதவும்.

செய்முறை: வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களை ஒன்றாக சிறு துண்டு களாக நறுக்கி விழுதாக அரைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20-30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். கோடை காலத்தில் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு இடம் கொடுக்காமல் முகத்திற்கு புத்துணர்வு அளிக்க இந்த ‘பழ பேஸ்பேக்’ உதவும்.

ரோஸ் வாட்டர் – சந்தனம்:

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டும் குளிர்ச்சி தன்மைக்கு பெயர் பெற்றது. இந்த இரண்டு இயற்கை பொருட்களும் நீண்ட காலமாக சரும பராமரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை குளிர்ச்சியான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற உதவும். அதிலும் ரோஸ் வாட்டர் புத்துணர்ச்சியை உணர வைக்கும்.

செய்முறை: இரண்டு தேக்கரண்டி சந்தனப் பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பசை போல் குழைக்கவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு உடனடியாக குளிர்ச்சியை வழங்கும்.

தயிர்-கற்றாழை:

இவை இரண்டும் குளிர்ச்சி தரும் பொருட் களாகும். அவை கோடை காலத்திற்கு ஏற்றவை. கற்றாழை சருமத்தை புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியுடனும் உணர வைக்கும். தயிர் பல்வேறு சரும பிரச்சினைகளை தடுப்பதோடு, உடனடியாக குளிர்ச்சியாக உணர வைக்கும்.

செய்முறை: கற்றாழையில் இருந்து ஜெல் பகுதியை தனியாக பிரித்தெடுக்கவும். பின்பு ஒரு கப் தயிருடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்க்கவும். அதனை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு முகத்தை கழுவி விடலாம்.

தர்பூசணி – வெள்ளரி:

வெள்ளரி மற்றும் தர்பூசணி இரண்டு பழங் களையும் கோடை காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும். இவை இரண்டிலும் அதிக நீர்ச்சத்து உள்ளது. சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதில் இவை இரண்டுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கூழாகவோ, சாறாகவோ தயாரிக்கவும். அதேபோல் தர்பூசணியின் சதை பகுதியை எடுத்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். பின்பு வெள்ளரி, தர்பூசணி இரண்டையும் கலந்து பசை போல் குழைக்கவும். விருப்பப்பட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக்கொள்ளலாம். இந்த பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கால் மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இந்த பேஸ் பேக் சருமத்திற்கு குளிர்ச்சியையும், புத்துணர்வையும் தரும்.

தக்காளி – தேன்:

தக்காளி, தேன் கலவை சருமத்திற்கு அதிசயங்களை செய்யக்கூடியது. தக்காளியில் டெடனிங் பண்புகள் உள்ளன. அது கோடையில் குளிர்ச்சியான பேஸ் பேக் தயாரிப்புக்கான சிறந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை குளிர்ச்சியை உணர வைக்கும்.

செய்முறை: ஒரு தக்காளியை விழுதாக அரைத்து அதிலிருந்து மெல்லிய கூழ் எடுக்கவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலக்கவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

நன்றி | மாலை மலர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்