Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிறுகதை | அப்பா | தீபச்செல்வன்

சிறுகதை | அப்பா | தீபச்செல்வன்

10 minutes read

சலசலத்துக் கொண்டிருந்தது குளத்து வேம்பு. மெல்லிய மருத மரத்திலிருந்து ஒரு பறவையைப் போல எழுந்து சென்றது காற்று. சிறு குளத்து மீன்கள் நீந்துவதை நிறுத்தி விட்டு இவனைப் பார்த்தன. இவன் ஒரு கயிற்றை மருதமரக் கிளையில் கட்டினான். தற்கொலை செய்கிற அளவுக்கு இவனுக்கு என்ன பிரச்சினை என்று காணாங் கோழிகள் அதிசயத்துடன் விழிகளை மேலும் கீழும் உயர்த்தின.
இரண்டு தும்பிகள் ஒன்றை ஒன்று செல்லமாக மோதிக் கொண்டு பறந்து சென்றன. இவனுக்கு தனது தம்பி நிலவனின் நினைவுகள் தும்பியின் சிறகாய் மனதிற்குள் உருண்டன. விழியெழிலன் எப்போதும் தும்பியை பிடித்து நூலில் கட்டி விளையாடுவான். “அதுகள் பாவம்… அதுகளை விடு அண்ணா…” அவனிடமிருந்து அதனை விடுவித்து பறக்கும்போது அதை பார்க்கையில் நிலவனின் கன்னங்களில் புன்னகை வழியும். “இது அப்பா தும்பி… இது அம்மா தும்பி.. இது நீயும் நானும்…” அவன் தும்பியைப் போல குதூகலிப்பான். இரண்டு சின்னத் தும்பிகள் முட்டி மோதி விளையாடிக் கொண்டு பறந்தன. தனக்கும் நிலவனுக்கும் இடையிலான செல்ல மோதல்களை அந்த தும்பியின் இறகுகள் நினைவுபடுத்திக் கொள்ளவும் கழுத்தில் சுற்றிக் கொண்ட கயிற்றை மெல்ல கழற்றினான்.

“ஆமி கெடுத்து, அரச மரத்தின் கீழ் தூக்குப் போட்டு செத்துப் போன ஈசா அக்கா, நக்கை தள்ளியபடி தொங்கிக் கொண்டிருந்தவா…” நினைக்கவும், இவனுக்கு நடுங்கியது. கயிற்றை தூரமாக பற்றைக்குள் வீசினான். மருத மர நிழலில் குந்தியிருப்பவனின் மனதில், அசையும் தாமரைகளைப் போல நினைவுகள் புரண்டெழுந்தன.

விழியெழிலன், கறுத்துலர்ந்த முகம். நெற்றியில் வழியும் சுருண்ட முடி. புழுதி படிந்த கால்கள். ஏக்கம் குடியிருக்கும் விழிகள். “அம்மா பாவம்…” எப்போதும் பொறுப்பாகவே பேசிக் கொள்ளும் அவன் வகுப்பில் சுமாராகத்தான் படிப்பவன். எட்டாம் வகுப்பில் படிக்கிற இவனுக்கு கவின்தான் உற்ற  நண்பன்.

கவின், எப்போதும் ஒரு பெரிய மனுசனைப் போல பேசிக் கொண்டிருப்பது இவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். விழியெழிலனின் வீட்டில் இருக்கும் அந்த சிவம் என்பவர் யார்? மாமாவா?  என்ன முறையில் மாமா? என்று எவராவது கேட்டால் விழியெழிலனின் முகம் வாடிவிடும். பதில் சொல்ல முடியாதிருக்கும் அப்போதெல்லாம் இவனை கவின்தான் சமாளிப்பான். வேறுகதைகளை கூறி திசைமாற்றுகிற உத்தியும் அவனுக்குத் தெரியும்.

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம் என்ற பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார் அறிவுநதி ரீச்சர். புதிதாக தமிழ் பாடத்திற்கு நியமனம் பெற்று வந்திருக்கும் அவளுக்கு எந்தப் பிள்ளையின் விபரமும் பெரிதாக நினைவில் நிற்காத நாட்கள். பாடத்தைக் கற்பித்துக் கொண்டிருந்த அறிவுநதி ரீச்சர், “பிள்ளையள், உங்கடை அப்பா உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரா? இல்லாட்டில், நீங்கள் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறியளா…” ஒவ்வொரு பிள்ளையாய் கேட்டுக் கொண்டே வந்தாள். கொழும்புக்கு கட்டிட வேலைக்குப் போயிருக்கும் தந்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருவதாகவும்  அவருக்கு  இடையிடையே தான் கடிதங்களை எழுதுவதாகவும் நிருபன் கூறினான்.

“விழியெழிலன் நீங்கள்.. அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறியளோ…”

கேட்கும் அறிவநதி ரீச்சரை அமைதியாகப் பார்த்தான். அவனுக்கு அப்பாவை தெரியாது. நினைவு தெரிய முதலே விழியெழிலனின் அப்பா, புதுமாத்தளனில் வைத்து செல்லடியில் இறந்துபோய்விட்டார். ஏதும் பேசாமல் உறைந்துபோனவன், அப்பாவின் படத்துடன் மனதிற்குள் பேசியிருப்பதை எப்படி ரீச்சருக்கு சொல்வதென யோசித்தான். அப்பா என்று ஒருநாள்கூட தான் அழைத்ததில்லை என்றெல்லாம் கவினுக்கு சொல்லிருக்கிறான்..

“அப்பாவுக்கு நான் கடிதம் எல்லாம் எழுதேல்லை ரீச்சர்…”

ரீச்சரின் காதுக்குள் விழியெழிலனின் கதையை சொல்லிக் கொண்டான் கவின்.

“காணாமல் ஆக்கப்பட்ட எங்கடை அப்பாவுக்கு நான் கடிதம் எழுதி அனுப்பிறனான். அப்பாவின்டை பேரைப் போட்டிட்டு, கீழை காணாமல் ஆக்கப்பட்டவர்  என்று அட்ரஸ் போட்டு, போஸ்ட் ஒப்பீஸ் பெட்டியிலை போடுறானான். எங்கையோ இருந்து அப்பா அதைப் படிப்பார். எண்டுதான் அம்மாவும் சொன்னவா…”

எங்கோ ஒரு திசையை காட்டினான் கவின். தலையை தடவி, அவனை ஆறுதல் படுத்தினாள் ரீச்சர். அவன் அப்பாவித்தனமாக சொல்லி முடிவுக்கவும் பரிவோடு பார்த்துக் கொண்டான் விழியெழிலன்.  “சிவம் மாமா மாதிரி எங்கடை வீட்டை அம்மா ஆரையும் கூட்டிக் கொண்டு வந்தால், நல்லா இருக்கும்.. இரவிலை பயம் இல்லாமல் நித்திரை கொள்ளுவன்… கால் போட்டுக் கொண்டு படுப்பன்..”  கவின் சொல்லிக் கொண்டு, தனது ரொட்டித் துண்டில் பாதியை நீட்டினான்.

நேரம் பன்னிரண்டு மணியாக இருக்க வேண்டும். சூரியன் மருத மரத்தின்மேலாய் நின்றது. இன்று பள்ளிக்கூடம் போயிருந்தால் இது ஏழாவது பாடம். சித்திரபாடம் நடந்திருக்கும். இப்போது, கவின் படங்களை வரைந்து கொண்டிருப்பான். ஒருவேளை அவன் ஒரு குளக்காட்சியை வரைவானா? அப்படி வரையும் அந்தக் காட்சியில் தூக்குக் கயிற்றுடன் தானும் இருப்பதை அவன் வரைவானா என்று எண்ணிக் கொண்டான் விழியெழிலன்.

எழுந்தான் வேகமாக… ஆளரவற்ற பின் வீதியை நோக்கி நடந்தான். தூரத்தில் குளத்தில் யாரோ குளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் இவனைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். இவன் குளத்தின் துரிசுப் பக்கமாய் போனான். கிட்டத்தட்ட பதினைந்தடி உயரம் அந்த துருசு. அங்கிருந்து குதித்து தண்ணீரோடு போய்விடலாம் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

தாமரை இலைகளில் சில குருவிகள் வந்தமர்ந்து வெம்மை தணித்தன. இலைகளின் இடையே நீந்தும் குட்டி மீன் குஞ்சுகளைப் பார்த்தான். ஒரு பெரிய மீன் குஞ்சும், குட்டி மீன் குஞ்சும் ஒரு புறமாய் நீந்தி வந்தது. இன்னொரு புறத்திலிருந்து இன்னொரு பெரிய மீனும் ஒரு குட்டி மீனும் நீந்தி வந்தன. அவைகள் தமக்குள் ஏதோ பேசிக் கொள்வதையும் மகிழ்ச்சியோடு எதனையோ பகிர்ந்துண்ணுவதையும் பார்த்தான்.

விழியெழிலன், குதிப்பதற்கு காலை நெம்பினான். அங்கு வந்த மீன் குஞ்சின் பார்வையில் அவன் விழிகள் கசிந்தன. நிலவனின் விழிகளை ஒத்த அந்த மீன் குஞ்சின் விழிகள் அவனுக்கு நினைவடுத்தியிருக்க வேண்டும். குதிக்க மனதின்றி அந்தக் குளக்கட்டில் குந்திக் கொண்டான்.

விழியெழிலனின் அம்மா வைத்தியசாலையில் ஒரு சுத்திகரிப்பாளராக வேலை செய்து வருகிறாள். வைத்தியசாலையில் அழகு படுத்தும் அவள் அங்கு வரும் நோயாளிகளுடன் அன்பாக பழகுவாள். அவர்களுக்கு தண்ணீர் எடுத்து கொடுப்பாள். உணவு விடுதிக்குச் சென்று தேனீர் வாங்கி வந்து கொடுப்பாள். அவளிடம் தண்ணீர் வாங்கி கொடுத்தாலே தாகம் அடங்கும் என்று சொல்பவர்களைப் பார்க்க அவளுக்கு அப்படி ஒரு ஆறுதலாய் இருக்கும். அவள் செய்யக்கூடிய சின்னச் சின்ன ஒத்தாசைகளும் சொல்லும் வார்த்தைகளும் மருந்துபோல் இருக்கும். கையில் ஒரு தும்புத்தடியும் வாளியும் வைத்திருப்பதால்தான், அவள் ஒரு சுத்திகரிப்பாளர் என்று யாரும் சொல்லுவார்கள். ஒரு மருத்துவிச்சியைப் போன்றது அவளின் சொற்கள்.

அப்படித்தான் நிலவனையும் அவனது தந்தை சிவத்தையும் அந்த வைத்தியசாலையில் சந்தித்தாள். வைத்தியசாலையின் முன்னால் இருக்கும் மாமரத்தின் கீழ் ஒரு கல்லிருக்கையில் நிலவனை வைத்திருந்தபடி உறங்கிப் போனான் சிவம். இவள் ஒரு போத்தலில் தண்ணீர் கொண்டு வந்து தட்டி எழுப்பினாள். களைப்பில் கண்கள் திறக்க மறுத்தன. சொற்கள் வரவில்லை. நிலவனின் தலையை தடவியபடி உடைந்து அழுதான் சிவம்.

போரில் சிவத்தின் மனைவி கமலம் இறந்து போய்விட்டாள். அப்போது நிலவன் ஒரு மாதக் குழந்தை. கடுமையான சண்டை நடந்த நேரம். சுதந்திரபுர்த்திலிருந்து தேவிபுரம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர் சிவமும் கமலமும். பிள்ளை பெத்த பச்சை உடம்பு. வாய்க்கு இதமான உடம்புக்குப் பலமான சாப்பாடில்லை. பச்சிளம் குழந்தையை தூக்கியபடி தள்ளாடிக் கொண்டே நடந்தாள். எந்தச் சன்னங்களும் தீண்டவில்லை. எந்தச் செல்களும் அவளைக் கிழிக்கவில்லை. திடீரென மயங்கி விழுந்தவள். பச்சை குழந்தையாய் இருந்த நிலவனை வெறும் மண்ணில் கிடத்தி விட்டு கைகளை வீசி கண்களை சொருகிக் கொண்டே உயிர் விட்டாள்.

இறந்து விட்ட கமலத்தை தூக்கி அடக்கம் செய்யக் கூட முடியாதவனாய் நிலவனை தூக்கியபடி ஓவென அழுதபடி போனான் சிவம். தெருவெங்கும் செத்து வீழ்ந்த மனிதர்களும் தறிபட்டு வீழ்ந்த மரங்களும் கண்களை மூடிக்கொண்டு விறுவிறுவென நடந்தான்.

அன்றைக்கு பாடசாலையில் விளையாட்டுப் போட்டி. படிப்பில் எந்தளவுக்கு நிலவனுக்கு அக்கறையோ அந்தளவுக்கு விளையாட்டுக்களிலும் ஈடுபடு உண்டு. ஆனாலும் கொஞ்சக் காலமாய் விளையாடிய பிற்கு அவன் சோர்ந்திருப்பதை சீலன் சேர் அவதானித்தே வந்தார். மைதானம் களைகட்டியிருந்தது. நூறு மீற்றர் ஓட்டப் போட்டியில் ஓடிக்கொண்டிருந்த நிலவன் திடீரென மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் மைதானத்தை நோக்கி ஓடினர். நிலவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவன் கைகள் குறண்ட தொடங்கியது. தேகமும் உருகத் தொடங்கியது. பரிசோதனைகள் நடந்தன. மேலதிக சிகிச்சைக்காக அவன் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டான்.

“என்ட பிள்ளைக்கு என்ன நடந்தது டொக்டர்….”

அழுது துடித்துக் கொண்டிருந்தான் சிவம். பேராதைனை குறிஞ்சிக் குமரன் கோயிலுக்கு சென்று மனமிரங்கி தொழுதுவிட்டு வந்தான். திருநீற்றை எடுத்து வந்து நிலவனின் நெற்றியில் பூசினான். கைகள் படபடத்தன. அவன் நிலவின் கேவல் அழுகையுடன் பார்த்தான். அவனோ நடப்பறியாது சிவத்தைப் பார்த்து புன்னகைக்க முயன்றான். அவன் வயிறு ஒட்டிப் போயிருந்தது.

“டொக்டர் உங்களை வரட்டாம்” என்றபடி நகர்ந்தாள் தாதியொருத்தி. மளமளவென ஓடினான் சிவம். “உங்கடை மகனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். இங்க தொடர்ந்து வைச்சும் ஒண்டும் செய்ய ஏலாது. நான் சொல்ற டைம் இங்க கொண்டு வாறது.. கிளிநொச்சி ஒஸ்பிட்டல்லே கிளினிக் போட்டு தாறது… ஹரி…” சிங்கள டொக்டர் சொல்லி முடிவுக்கவும் சிவத்திற்கோ கண்கள் இருண்டது. வாயைப் பொத்தியபடி தேம்பினான்.

மரணத்திற்கு காத்திருக்கும் பிள்ளையின் கதையை கேட்கவும் துடிதுடித்துப் போனாள் மாலா.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நிலவன், கிளினிக் வரும்போதெல்லாம், அவனை கவனித்துக்கொள்ளுவாள் மாலா. வீட்டில் இருந்து ஏதாவது சாப்பாடு எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விடுவாள். போரில் கணவனை பறிகொடுத்து விட்டு ஒரு தனிப் பெண்ணாய் வாழும் மாலா, ஒரு கட்டத்தில் நிலவனுக்கும் தாயாய் இருக்க தீர்மானித்தாள். “இனி நான் தான் உன்ரை அம்மா…” என்று தன் முடிவை அறிவிக்கவும் சிவத்தின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர். உருத்திரபுரம் சிவன் கோயிலில் மாலையை மாற்றிக் கொண்டு, இருவரும்  பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

“ஆர் இந்த மாமா? இவர் ஏன் இஞ்சை வந்திருக்கிறார்…” மாலாவை துருதுருவிக் கேட்டான் விழியெழிலன். “இனி இவன் உனக்கு தம்பி…”  நிலவனைக் காட்டினாள் மாலா.

அவனுக்கும் நிலவனை நன்றாகப் பிடித்துவிட்டது. பழுத்த அவன் விழிகள் இவனைக் கண்டு மினுங்கின. பயிற்றங்காய் போல மெல்லிய கைகளைப் பற்றிக் கொண்டான். செம்பாடடித்து வறண்ட தலைமுடி. காற்று தூக்கிச் செல்லும் மெலிந்த தேகம். ஏனோ விழியெழிலனுக்குப் பாசத்தைப் பெருக்கியது.

விழியெழிலனும் நிலவனை தம்பி என்று அழைக்கத் துவங்கினான். விழியெழிலனை கட்டிப் பிடித்துக் கொண்டுதான் உறங்குவான். நிலவனின் சோர்வடைந்த முகத்தில் இலேசாக ஒரு மலர்ச்சியை காணவும், “என்ரை பிள்ளை இன்னும் கொஞ்சநாள்கூட என்னோடை இருப்பான்…” என நினைத்துக் கொண்டான் சிவம்.

அடர்ந்திருக்கும் நரை விழுந்த தாடி. எப்போதும் வெளித் திண்ணையில் படுத்திருந்து, பீடியை புகைத்துக் கொண்டிருப்பான் சிவம். கன்றுகளை பதியமிட்டு, அதை சந்தையில் கொண்டுபோய் விற்றுவிட்டு, தெருக்கரையால் நடந்து வருவான். சிலவேளை பாடசாலை வாசலில் நின்று, விழியெழிலனையும் நிலவனையும் கூட்டிச் செல்வான்.

சிவம் யார் என்ற சக மாணவர்களின் கேள்விக்கு விழியெழிலன் பெருத்த விளக்கம் அளித்து தோற்றுப் போனான்.

“நிலவன் ஆரு…”

“அவன் என்ரை தம்பி…”

பாடசாலையில் இடைவேளையின்போது, நிலவனைப் போய் பார்ப்பான். அவனுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பான். கடையால் வரும்போது, அவனுக்கு ஏதாவது வாங்கி வந்து ஊட்டி பிறகுதான் எதுவும் செய்வான். அவனை கிளினிக் கூட்டிச் செல்வதற்காக இரண்டு மாத்திற்கு ஒரு தரம் விடுமுறையும் எடுப்பான். தனது புத்தக பையால் வெயிலை மறைத்து அழைத்து வருவதைப் பார்த்து ஆறுதல்படுவான் சிவம்.

படத்திற்கு ஆசிரியர் வராவிட்டால், விழியெழிலன் வீட்டில் இருப்பது யார் என்ற விவாதத்தை விதுசன் தொடக்குவான். “மாமா எண்டுறாய்… இவ்வளவு காலமும் எங்கை இருந்தவர்…?” விதுசன் கிண்டிக் கிண்டிக் கேட்டான். நிலவனை தம்பி எண்டால்.. சிவம் அண்ணை…? விதுசனின் காதுக்குள் சதீஸ் ஏதோ குசுகுசுத்தான். விழியெழிலன், எழுந்து புத்தகப் பையை தூக்கினான். வேறு இடத்தில் சென்றமர்ந்தவனுக்கு அருகில் கவின் அமர்ந்து கொண்டான்.

வீட்டுக்கு வந்த விழியெழிலனின் முகம் வாடிப் போயிருந்தது. “எனக்கு சாப்பாடு வேண்டாம்…” என்று கோப்பையை போட்டு விட்டு, பேசாமல் படுத்திருந்தான். நிலவன் எப்போதும்போல் அவன் அருகில் வந்து படுத்துக் கொண்டான். “அப்பா, பனங்கிழங்கு வாங்கியந்தவர்.. சாப்பிடு…” வேண்டாம் என தட்டி விட்டான் விழியெழிலன்.

“ஏன் அண்ணா என்னோடை  கதைக்கிறாய் இல்லை…”

கன்னங்களைத் தடவினான். இவன் பதில் ஏதும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தான். தன் அண்ணனின் சுருள் முடிகளுக்குள் கையை விட்டு, விளையாடினான் நிலவன். “பேசாமல் அங்காலை போறியா… சும்மா வந்து நோண்டிக் கொண்டு இருக்கிறாய்…” நிலவனின் முகம் சட்டென சுருங்கிக் கறுத்தது. அவன் பேசாமல் எழுந்து  தனித்துப் போய் கிடந்தான். விழியெழிலன் எழுந்து நடக்கத் துவங்கினான்.

சிவம் யார்? அவர் ஏன் எங்கடை வீட்ட இருக்கிறார்… அம்மாவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? விதுசனின் காதுக்குள் சதீஸ் முனுமுனுத்தது என்ன? கேள்விகள் மனதை குடைந்தன. சிவநகர் குளக்கட்டின், மருத மர நிழலில் படுத்திருந்தான்.

கூழாவடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் பாலா அடிக்கடி வீட்டுப் பக்கம் வந்தபோது, மாலா பேசிக் கலைத்தாள். விழியெழிலன் கடைக்குப் போனால், ஒரு கிலோ அருசிக்கு காசு கொடுத்தால், அவன் இரண்டு கிலோ அருசியை போட்டுக் கொடுப்பான். திருப்பிக் கொண்டு போய் அவன் முகத்தில் வீசி எறிந்துவிட்டு “இந்த சில்லறை வேலை பாக்காதை…” என்று அகோரமாய்  பேசிவிட்டு திரும்பினாள் மாலா.

பாலா விட்டபாடில்லை. சடைத்து இணைந்த அவளின் புருவக் கிடங்கில் விழுந்த அவனால் மீள இயலவில்லை. பொசுபொசுத்த கன்னங்களின் வழியும் குழந்தைமை தனத்தை பாலாவுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. நல்ல சிவப்பி. நெற்றியில் சிவன் கோயில் திருநீறும் சந்தனப் பொட்டும். வெள்ளை வெளீர் என்ற ஆடை. கறுப்பு பட்டன் தோடுகள் காதில் பளிச்சிடும். அள்ளி முடிந்த கொண்டையில் ஒரு நாகலிங்கப் பூ எப்போதும் இருக்கும். அந்த எளிமைதான் அவளின் பேரழகு. “அவளை எப்பிடி எல்லாம் வைச்சிருப்பன்..” மண்யாச்சியும் தலையாட்டினாள்.

“எனக்கு என்ரை அம்மாவைத் தவிர ஆரும் இல்லை… கடையிலை நல்ல வருமானம். பொடியனை என்ரை பிள்ளையைப் போல வளப்பன். நல்லாய் படிப்பிப்பன்.. அவளை கேட்டுச் சொல்லுங்கோ…” மணியாச்சியை தூதனுப்பினான் பாலா. “நான் என்ரை பிள்ளைக்காகத்தான் வாழுறன்… வேற கதை ஒண்டும் கதைக்க விரும்பேல்லை ஆச்சி…”

“நல்ல பொடியன்… சோலி சுறட்டு இல்லாதவன்.. ஒரு இயக்கப் பொடியன் மாதிரி ஒழுக்கமானவன்… உழைப்பாளி.. உன்னை கட்ட ஒற்றைக்காலிலை நிக்கிறான்…” மணியாச்சி காலில் விழாக் குறையாய் கெஞ்சியும் பாத்தாள்.

தன் தாய் சொல்வதைக் கேட்க விழியெழிலனின் கண்கள் கலங்கி உடைந்தன.

“அவள் அசையிறாளில்லை…” வெறுங்கையுடன் திரும்பிய மணியாச்சியை கண்டு பாலாவின் முகம் சுருங்கியது.

அன்றைக்கு பள்ளிக்கூடம் விடுமுறை. காலையில் எழுந்து காப்பிளிக் கோழி குஞ்சுகளுக்கு உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான் விழியெழிலன்.

“அம்மா இது காப்பிளிக் கோழியின்டை குஞ்சில்லையே… சிவப்புக் கோழியின்டை குஞ்செல்லோ… எங்கை சிவப்புக் கோழி…”

அவனுக்கு தேனீரை கொண்டு வந்து வைத்தாள் மாலா.

“முந்த நாள் இரவு, கோழிக் கூட்டுக்குள்ளை பாம்பு புகுந்திட்டுது… சிவப்பியை கொத்தி அது செத்துப்போட்டுது… காப்பிளிக்கு அடை வைச்ச முட்டையளையும் குடிச்சிட்டுது… சிவப்பியின்டை குஞ்சுகள் தனிச்சுப் போய் இருந்ததுதகள் பாவம்… இப்ப காப்பிளிக்கோழி தன்ரை குஞ்சுகள் மாதிரி அதுகளைக் கூட்டிக்கொண்டு திரியுது… பாத்தியே…”

விடலைக்கோழியொன்று, நெருங்கி வர, அதை கொத்திக் கலைத்துவிட்டு தன் இறகுகளுக்குள் குஞ்சுகளை அணைத்துக் கொண்டது காப்பிளிக் கோழி. இவனுக்கு பெருத்த அதிசயமாகத் தோன்றிற்று. “பா…பா…. இந்தா….” இவன் குசுனிக்குள் சென்று அருசிக் குறுனியை எடுத்து வந்துபோட்டான். அது தன் குஞ்சுகளுக்கு இரை காட்டிக் கூப்பிட்டது. குஞ்சுகள் சிறகை விரித்தபடி ஓடி வந்தன. தன் அலகால் கொத்திக் கொத்திக் குஞ்சுகளுக்கு உணவுட்டுவதைப் பார்க்க இவனுக்குள் ஏதோ ஒரு நெருக்கம் படர்ந்தது.

இரண்டு குருவிக் குஞ்சுகள், ஏதே உரையாடிக் கொண்டிருந்தன. அவற்றின் கண்களில் அப்படியொரு கொண்டாட்டம். சற்று அருகில் தாய்க்குருவி. அது வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவிக் குஞ்சும் விழியெழிலனுக்கு தன் தம்பியை அவனுக்கு நினைவுபடுத்தியிருக்க வேண்டும். சட்டென சுதாகரித்தான் விழியெழிலன்.

சூரியன் மருத மரங்களின் கீழாக இறங்கிக் கொண்டிருந்தான். கண்களை திறந்தான். அதன் பொன்னொளி இவன் கண்களை கூசியது. தான் ஒரு சின்ன வார்த்தை சொன்னாலே அழுது அடம்பிடிப்பான் நிலவன். “பேசாமல் அங்காலை போ…சும்மா வந்து நோண்டிக் கொண்டு இருக்கிறாய்…” என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் இவன் காதுக்குள் ஒலித்தன.
“இப்ப பாலா, வந்து தன்னை கலியாணம் செய்யச் சொல்லி வற்புறுத்திறேல்லை.. பாலாவைப் பேசிப் போட்டு, நிலவனையும் அவன்ரை அப்பாவையும் அம்மா கூட்டியந்திருக்கிறா… இரவிலை கதவெல்லாம் திறந்துபோட்டு நித்திரை கொள்ளலாம்.. எனக்கு பக்கத்திலை என்ரை தலைமுடிக்குள்ளை விரலை விட்டிட்டு நிலவன் படுத்துக் கிடப்பான்… அவன் பசி கிடக்கக்கூடாது, யோசிக்கப்படாது எண்டெல்லாம் டொக்டர் சொன்னவர்…”

பெரிய மனுசனைப்போல தனக்கு தானே  சமாதானம் செய்து கொண்டான். தன் நியாயங்களை  மரஞ்செடிகளுடன் பேசிக் கொண்டே அவன் விறுவிறுவென எழுந்து வீடு நோக்கி நடந்தான்.

வீடே வெளித்துப் போய்க் கிடந்தது. இவனைக் கண்டதும் காப்பிளிக் கோழி தன் குஞ்சுகளை கூட்டிக் கொண்டு குதூகலிப்புடன் ஓடி வந்தது.

காய்ந்த முகத்தில் கண்ணீர் பொருக்குகள் உடைந்திருக்க கிடந்தாள் மாலா. “நேற்றிலை இருந்து எங்கை ராசா போனனீ? அம்மா செத்தெல்லே போயிருப்பன்…” இவன் கைகளை பற்றிக் கொண்டு அழுதாள். மளமளவென அறைகளை எட்டிப் பார்த்தான்.

“அம்மா.. நிலவன் எங்கை…” துடித்தபடி கேட்டான்.

“அவை இஞ்ச இருக்கிறது… உனக்கு விருப்பம் இல்லைதானே…  அதான் தங்களின்டை வீட்ட போயிற்றினம்…”

விழியெழிலனின் முகம் வாடிற்று. அவன் மாலாவுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டான். “அம்மா வாங்கோ… போய் தம்பியை கூட்டியருவம்…” தாயின் கைகளை உலுக்கினான்.

இருவரும் விறுவிறுவென நிலவனின் வீட்டை நோக்கி நடந்தனர். பாலா தலையை நிமிர்த்திப் பார்க்காமல் சைக்கிளை மிதித்துக்கொண்டு போனான். வெட்டை வெளியில், ஒரு சில கொப்புக்களுடன் உள்ள நிழல் மரவள்ளி மரத்தின் அருகில் இருந்தது அந்தக் குடிசை. சிவம் பானையை கழுவி உலை வைத்துக் கொண்டிருந்தான்.

நிலவன் வெளித் திண்ணையில் கூனிக்குறுகிப் படுத்திருந்தான்.

“தம்பி… தம்பி…” விழியெழிலனின் அழைப்பை கேட்டதும் எழுந்து கண்களை கசிக்கிக் கொண்டு பார்த்தான். துள்ளிக் கொண்டு ஓடினான். அவனின் உலர்ந்த கண்கள் லேசாகக் கலங்கின.

“வா… வீட்டை போவம்…”

அவன் பதிலற்று அமைதியாய் இவனைப் பார்த்தான். ஒரு சின்னக் கோவம் அவன் உதடுகளில் துருத்திக் கொண்டு நின்றது. மாலா அவன் கன்னங்களைத் தடவினாள். அருசியை கழுவி உலையில் போடும் சிவம் இவைகளை கவனித்துக் கொண்டே அருசியை போட்டுவிட்டு, முருக்கம் இலைகளை வறுப்பதற்காக உருவிக் கொண்டிருந்தான்.

“என்ரை தம்பியை இனி நான் பேச மாட்டன்… எங்கடை வீட்ட போவம்…”

நிலவனின் தோள்களில் கைகளைப் போட்டு அவனை அணைத்துக் கொண்டு முத்தமிட்டான். மளமளவென அடுப்படிக்கு நுழைந்தான் அவன்.

“அப்பா… வாங்கோ வீட்டை போவம்…”

நிலவனை அணைத்துக் கொண்டான் சிவம். “உன்னை காணாமல் உன்ரை தம்பி ஏங்கித் துடிச்சுப் போட்டான் பாரன்… சாப்பிடவும் இல்லை…”

விழியெழிலனை அள்ளி அவன் நெற்றியில் முத்தமிட்டான் சிவம்.

நிலவு பிரகாசித்துக் கிடந்தது. அசையும் நிழல் மரவள்ளியின் கீழே முருக்கம் இலை வறுவலும் பருப்பும் சட்டியில் குழைத்து, விழியெழிலனுக்கும் நிலவனுக்கும் ஊட்டிக் கொண்டிருந்தான் சிவம். நிலவன் பெரிதாக சிரித்து சிரித்து தன் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த சத்தம் அந்த இரவில் ஒரு இனிய பாடலைப்போல கேட்டது. நிலவில் மாலாவின் முகத்தில் வெட்கம் ஒளிர்ந்தது. அவள் கன்னங்கள்வரை விரிந்திருந்த அந்தப் புன்னகையை சிவம் இதுவரையில் பார்த்ததில்லை. அவள் அவனின் தோளில் மெல்லச் சாய்ந்தாள்.

நன்றி- தீராநதி செப்டம்பர் (சிறுகதைச் சிறப்பிதழ்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More