Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் யதார்த்தம் | சிறுகதை | கௌரி கோபாலகிருஷ்ணன்

யதார்த்தம் | சிறுகதை | கௌரி கோபாலகிருஷ்ணன்

5 minutes read

“மயக்கமா கலக்கமா மனதினில் குழப்பமா “ யாரோ மொபைலில் பாட்டு கேட்டு கொண்டு கடந்து போனார்கள்.

பூங்காவில் குழந்தைகள் குதூகலமாக விளையாடி கொண்டிருந்தனர். அந்த சத்தம் தேவகானமாய் இருந்தது எனக்கு. பல நாள் கழித்து இங்கு வருவது புதிதாய் ஒரு உலகத்திற்கு வந்தது போல் இருந்தது.

என்ன ஒரு இரண்டு மாதம் இருக்குமா, இப்படி காலார நடந்து. திடீரென்று பர்வதத்திற்கு ஸ்ட்ரோக் வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து, உதவிக்கு ஆள் இல்லாமல் அலைந்து, அப்பப்பா, எத்தனை டென்ஷன். எத்தனை தவிப்பு.

இவையெல்லாம் கனவா, நனவா என நினைத்து பார்க்கவே நேரம் இல்லை . இப்போது தான் கடவுள் அருளால் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிறது.

யாரிடமாவது தன் துக்கத்தை பகிர்ந்து கொண்டால் தேவலாம் போல் இருந்தது. எப்போதும் வரும் இரு நண்பர்களை கூட இன்று காணோம். அவர்களுக்கு என்ன பிரச்சினையோ!!

நினைவுகள் பின்னோக்கி சென்றன. ஆறு குழந்தைகளை பெற்று வளர்க்க அம்மா அப்பா பட்ட கஷ்டத்தை பார்த்து ஒரே பிள்ளையுடன், போதும் என தானும் பர்வதமும் முடிவு செய்தது தவறோ!

நாலு பெண்களை அப்பா கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொடுத்த, பின்னர் கடை குட்டியான எனக்கு திருமணம் ஆகவே முப்பத்திரண்டு வயதாகி விட்டது. பின்னர் விக்னேஷ் பிறக்கும் போது முப்பத்தைந்து .

செல்லமாக வளர்ந்தாலும் நன்றாக படித்து, உடனடியாக நல்ல வேலையிலும் அமர்ந்து விட்டான் விக்னேஷ்.

அதற்கு பின் வந்தது தான் வரமா இல்லை வருத்தமா எனத் தெரியவில்லை. முதலில் ஏதோ ப்ராஜக்ட் என யு.எஸ் போய் வந்தவன், அந்த வாழ்க்கை பிடித்து போய், அங்கேயே ஒரு வேலையை, ஏன் கூடவே ஒரு பெண்ணையும் பார்த்துக் கொண்டான். அவன் சந்தோஷம் தான் முக்கியம் என முடிவு செய்து, அவன் இஷ்டப் படியே எல்லாம் நல்ல படியாக முடித்து வைத்தாயிற்று.

திருமணம் ஆகி கிளம்பி போனவர்கள், ஒரு வருடம் கழித்து வந்தார்கள். ஒரு நாள் மட்டும் இருவரும் இங்கு இருந்தனர். பின்னர், அந்த பெண் ஷாலினி அவள் அம்மா வீட்டிலும் விக்னேஷ் இங்கேயும் அங்கேயுமாக ஒரு மாதம் ஓடி விட்டது. பர்வதமும் மருமகள் ஷாலினிக்கு பயங்கர சப்போர்ட்.

தான் தன் மாமியாரிடம் கஷ்டப் பட்டது போதும். தனக்கு வரும் மருமகள் சுதந்திரமாக இருக்கட்டும் என நினைப்பவள். பாவம், அவளும் அவள் பெற்றோரை வருடத்திற்கு ஒருமுறை தானே பார்க்கிறாள். அங்கேயே இருக்கட்டும் என்று கூறி, சிறிது வருத்தப் பட்ட என்னையும் அடக்கி விட்டாள் .

அப்போது திரும்பி சென்றவர்கள் தான், இரண்டு வருடங்கள் ஆகிறது. இப்போது பர்வதம் உடல்நிலையை பற்றி தகவல் தெரிவித்த போதும், எனக்கு உடனடியாக லீவ் கிடைப்பது கடினம். கவலைப்படாதே அப்பா, எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். நல்ல டிரீட்மென்ட்க்கு ஏற்பாடு செய் என கூறி விட்டான்.

மருத்துவ மனை நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த சரளா என்ற பெண்ணின் உதவியுடன், எப்படியோ இத்தனை நாள் பர்வதத்தை பார்த்து கொண்டாயிற்று. பக்கத்து மெஸ்ஸிலிருந்து மூன்று வேளைக்கும் உணவு ஏற்பாடு செய்தாயிற்று.

யோசனைக்கு நடுவே ஒரு முடிவுடன் வீட்டை அடைந்தேன்.

இன்னிக்கு ஒருநாள் மட்டும் நான் வீட்டுக்கு போயிட்டு பசங்கள பார்த்துட்டு வரேன் சார். அம்மாவிற்கு கஞ்சி எல்லாம் ரெடியா இருக்கு. நாளைக்கு காலைலே வந்துர்ரேன், வீட்டிற்கு போக ரெடியாக இருந்தாள் சரளா.

சரிம்மா, தாராளமா போயிட்டு வா என்றேன். பர்வதத்துடன் சிறிது நேரம் செலவழித்த பின், இரவு உணவும் முடித்தாயிற்று.

பர்வதம் தூங்கிய பின், சிறிது நேரம் கழித்து, விக்னேஷுக்கு கால் போட்டு, இன்று முடிவு பண்ணியதை அவனிடம் பேசி விட வேண்டும்.

ஃபோனை எடுத்தவுடன் வழக்கமான விசாரிப்புகளுக்கு பின், விக்னேஷ், அப்பா, ஒரு விஷயம். இன்னும் பத்து நாட்களில் நாங்கள் இருவரும் இந்தியா வருகிறோம் என்றான். சந்தோஷம்பா, அம்மாவிடம் இதை உடனே சொல்ல வேண்டும் என்றேன்.

இப்போது வேண்டாம்பா, அம்மாவிற்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் .

சரி. உன் இஷ்டம். நான் சொல்ல மாட்டேன் .

ஏன் திடீரென இந்த முடிவு, எத்தனை நாட்கள் இருப்பீர்கள் எதுவுமே கேட்கவில்லை.

ஃபோனை வைக்கும் போது சிறிது தயங்கிய மாதிரி இருந்தது, என்ன விக்னேஷ் என்றேன்.

ஒன்றுமில்லை, ஃபோன் கட் ஆனது. நானும், நான் சொல்ல நினைத்ததை இன்னும் பத்து நாட்கள் தானே, பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டேன்.

விக்னேஷும், ஷாலினியும் வந்தாயிற்று. விக்னேஷை பார்த்தவுடன் பர்வதம் ஒரே அழுகை. இந்த முறை ஷாலினி நேராக அவள் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள்.

சரி. இரண்டு நாட்கள் கழித்து வருவாள் என நினைத்து நானும் ஒன்றும் கேட்கவில்லை. விக்னேஷும் ஒன்றும் சொல்லவில்லை.

மூன்றாவது நாள், விக்னேஷ் பெயருக்கு ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்தது. அவன் வெளியில் சென்றிருந்ததால் நான் தான் அதை கையெழுத்துப் போட்டு வாங்கினேன்.

என்னவோ தப்பாக தோன்றியது. விக்னேஷ் வந்தவுடன் அவனிடம் அந்த தபாலை கொடுத்தேன்.

சலனமில்லாமல் வாங்கி கொண்டவன் , அதை பிரித்து படித்து பார்த்தான். முகத்தில் சிறிது சந்தோஷத்தின் அறிகுறி தோன்றியது போல் இருந்தது.

படித்து முடித்ததும் என்னை பார்த்து, அப்பா, ஒரு விஷயம். எனக்கும் ஷாலினிக்கும் சரிபட்டு வரவில்லை. இது டிவோர்ஸ்க்கான பேப்பர் தான். அதற்காக தான் நாங்கள் இந்தியா வந்தோம்.

நான் இனி யு.எஸ் போக போவதில்லை. உங்களுடன் இங்கேயே இருக்க போகிறேன்.

அம்மாவிடம் உடம்பு சிறிது சரியான பின்னர் சொல்லி கொள்ளலாம் என படபடவென சொல்லி முடித்தான்.

பிள்ளை என்னுடனே இருக்க போகிறான் என சந்தோஷப்படுவதா, அவன் வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதா, இதையும் ஒரு சாதாரண விஷயமாக சொல்லும் அவனின் அணுகுமுறையை பார்த்து வியப்படைவதா ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தேன்.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்.

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை.”

எங்கேயோ எஃப்எம் பாடுகிறது.

காலிங் பெல் ஒலித்தது. சரளாவை வரவேற்க எழுந்து சென்றேன்.

.

நன்றி : கௌரி கோபாலகிருஷ்ணன் | எழுத்து இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More