Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அனலிடை பூக்கள் | சிறுகதை | விமல் பரம்

அனலிடை பூக்கள் | சிறுகதை | விமல் பரம்

10 minutes read

விடிய எழுந்ததில் இருந்து மனம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் செய்த வேலைகளையே திரும்பச் செய்து கொண்டிருக்கிறேன். லண்டனிலிருந்து முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருக்கும் தேவகியம்மா குமரபுரத்தில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வருவதாக மூன்று நாட்களுக்கு முன்பு சொன்னதில் இருந்து இருப்புக் கொள்ளவில்லை. அன்றே துப்பரவு வேலைகளைத் தொடங்கிவிட்டேன். வீட்டின் தூசுகளை தட்டித் துடைத்துக் கழுவியாச்சு. முற்றத்திலுள்ள புல்லுகளைச் செதுக்கி கூட்டி அள்ளியாச்சு. கோழிக்கூட்டிலுள்ள பழைய உமியை மாத்தி புது உமி போட்டாச்சு. ஆட்டுப்பட்டியின் சீமெந்து நிலத்தையும் மணம் போகக் கழுவி நாலு ஆடுகளுக்கும் புதுக் கயிறு மணிகளோடு வாங்கிக் கட்டியாச்சு. வருபவர்கள் சாப்பிடுவார்களோ தெரியவில்லை. ஆனாலும் விடிய எழுந்து பத்து மணிக்குள் சமையலையும் முடிச்சாச்சு. இனி எந்த நேரமும் அவர்கள் வந்து இறங்கலாம். வீட்டுக்குள் இருக்க முடியாமல் வாசலுக்கு வந்து வீதியை எட்டிப் பார்த்தேன்.

சைக்கிள், மோட்டார்சைக்கிள்களின் ஓட்டமும், நடந்து போகிறவர்களின் நடமாட்டமும் இருந்ததேயன்றி கண்ணுக்கெட்டிய தூரம்வரை வாகனம் எதுவும் கண்ணில் படவில்லை.

“வாறன் எண்டு சொன்னவையள் வருவினம்தானேம்மா. நீங்கள் ஏன் றோட்டில போய் நிக்கிறீங்கள்” மூத்தவள் சாந்தியின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

“முதல்முறை வாற தேவகியம்மா என்ன சொல்லுவாவோ எண்டு படபடப்பாய் இருக்குதடா”

“இது எங்கட வீடா எண்டு எனக்கே சந்தேகமாய் இருக்கு. உங்கட கைபட்டு எல்லா இடமும் பளபளக்குதம்மா”

“என்ர உழைப்புக்கு உதவி செய்யிறதோட உன்ர படிப்புக்கும் காசு அனுப்பி படிக்க வைச்சதாலதானேடா இண்டைக்கு நீ யூனிவர்சிற்றிக்கு எடுபட்டிருக்கிறாய். சின்னவளும் ஆர்வமாய் படிக்கிறாள். தேவகியம்மா செய்யிற உதவிகளை ஒருநாளும் மறக்கக் கூடாது. நாங்களும் கஷ்டப்பட்டு உழைச்சு அம்மாவைத் திருப்திப்படுத்த வேணும்”

“உங்களால முடிஞ்சவரைக்கும் உழைக்கிறீங்கள். போனிலேயே பாராட்டுறவா நேரில பாத்தால் நிச்சயம் சந்தோஷப்படுவாம்மா”

என்றவள் அருகில் வந்து என் இடது கையை எடுத்து மெல்லத் தடவிக் கொடுத்தாள்.

தடவிக் கொடுத்த என் கையைப் பார்த்தேன். விரல்களில்லாது மணிக்கட்டோடு முடமாகி எரிகாய வடுக்களோடு சுருங்கியிருந்தது. நாட்டில் நடந்த இறுதிப் போரில் கையை மட்டுமா இழந்தேன் வாழ்க்கையையும் இழந்தேனே… கண்முன்னால் வந்து வெடித்துச் சிதறிய குண்டோடு கணவரின் உடலும் சிதறிப் பறந்ததையும், கையில் பட்ட காயத்திலிருந்து பெருகிய இரத்தத்தோடு இரண்டு குழந்தைகளையும் கட்டி அணைத்து கதறிய கதறலையும் இன்றுவரை மறக்க முடியவில்லை. எட்டு வயது, ஆறு வயதான பெண் குழந்தைகளைப் பார்ப்பேனா… பெருகும் இரத்தத்தைக் கட்டுப் படுத்த ஆஸ்பத்திரிக்குப் போவேனா என்று கலங்கித் துடித்த நேரம் எனக்குக் கிடைத்த ஆறுதல் செல்லம்மா ஆச்சி. அதே குண்டு வெடிப்பில் மகள், மருமகன், பேரப்பிள்ளைகளை இழந்து எழுபத்தைந்து வயதில் யாருமில்லாமல் அநாதையாய் நின்ற ஆச்சியின் துணை.

“நான் குழந்தையளைப் பாக்கிறன் நீ போய் மருந்தைக் கட்டு. என்னைப்போல அநாதையாய் தவிக்கக் கூடாது அதுகளுக்கு நீ வேணும். போ பிள்ளை”

முதல் நிமிடம் வரை யார் என்றே தெரியாத ஆச்சியிடம் குழந்தைகளை விட்டுப் போனேன். உயிர் போகும் காயங்களோடு வந்தவர்களுக்கே இடமில்லாமல் திணறிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் சிதைந்த என் கைக்கு மருந்து கட்டி மூன்றாம் நாளே அனுப்பி விட்டார்கள்.

குழந்தைகளைத் தேடினேன். ஆச்சியின் அரவணைப்பில் அவர்களைக் கண்டதும் கட்டியணைத்துக் கதறிவிட்டேன். அதன்பிறகு முள்ளிவாய்க்காலில் இருந்து செட்டிகுளமுகாமுக்கு அனுப்பப்பட்டோம். செட்டிகுளமுகாமில் இருந்த அந்த ஒன்றரை வருடங்கள் கஷ்டங்களிலும் துன்பங்களிலும் துணையாய் இருந்தாள். ஆச்சரியப்பட்டேன்.

“என்னில பிள்ளையளில இவ்வளவு பாசம் வைச்சிருக்கிறீங்களே எப்பிடி ஆச்சி”

“இதை நான்தான் கேக்கவேணும். இந்தக் கிழவியைப் பாத்துப் பாத்து கவனிக்கிறியே ஏன்”

அநாதையாகிப் போன எங்களுக்குள் உண்டான பந்தம் இது. இறுக பற்றிக் கொண்டோம்.

எனக்கு சொந்தமும் இல்லை சொந்தநிலமும் இல்லை என்று ஊருக்குத் திரும்பி வந்தபோதும் எங்களுடன் வந்தாள். நிவாரணமாய் தந்த தடி தகரங்களால் குடிசை போட்டு இருந்தோம். உதவி நிறுவனங்களால் பணமும் உணவுப் பொருட்களும் கிடைத்தன. மூன்று நேரமும் பசியாற முடியாவிட்டாலும் இருப்பதைப் பகிர்ந்து உண்டோம். ஊர் பழைய நிலைமைக்கு மாறி வயல்வேலைகள், தோட்டவேலைகள் தொடங்க ஒரு கையால் செய்யப் பழகி என்னால் முடிந்த வேலைகளுக்குப் போனேன். ஆச்சியும் என்னோடு வந்தாள்.

வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் உள்ளே வந்து நலம் விசாரிக்கும் குடிசையில், வளரும் பிள்ளைகளை எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும். கலங்கிக் கொண்டிருந்த நேரம் வீட்டுத்திட்டம் வந்தது. வீடு கட்டுவதற்கு ஐந்தரை லட்சம் கிடைக்கும் என்ற நிம்மதி கட்டத் தொடங்கும்போது பறிபோனது. அவர்களின் திட்டப்படி வீட்டின் அளவு இருக்கவேணும். நாமே பணம் போட்டு வீட்டின் வேலைகளைத் தொடங்கவேணும். ஒவ்வொரு பகுதியாக கட்டி முடித்தபின்தான் அதற்காக ஒதுக்கியிருக்கும் பணம் எமக்குக் கிடைக்கும். கேட்டதும் இடிந்து போனேன். அத்திவாரத்திற்கு தேவையான கல், மணல், சீமெந்தை வாங்க யாரிடம் போய் பணம் கேட்பது. கேட்டால் என்னை நம்பித் தருவார்களா…

“மூர்த்தியைக் கேட்டுப்பாரன். மனுசியும் நல்லது கஷ்டப்பட்ட சனத்துக்கு உதவிற சனங்கள். மெசின் வைச்சிருக்கிறான். காசு வந்தவுடன தாறன் எண்டு கல்லையும் மண்ணையும் ஏத்திப் பறிக்கச் சொல்லு. அவன் செய்வான்” ஆச்சி சொன்னாள்.

சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லாத நேரங்களில் வேலை கேட்டு கண்மணியக்கா வீட்டுக்குப் போயிருக்கிறேன். இல்லையென்று சொல்லாமல் ஏதாவது வேலை தந்து பணமும், மரக்கறிகளும் தருவாள். பிள்ளைகளுக்கு கொடு என்று சாப்பாடு தரும்போது கண்கள் நிறைந்து விடும். சிலவேளைகளில் லண்டனில் இருக்கும் அவர்களின் பிள்ளைகள் அனுப்பியதாகப் பணமும் உடுப்புகளும் தருவார்கள்.

அவர்களிடமிருந்த நம்பிக்கையில் தயங்கியபடி போனேன்.

“வீட்டுத்திட்டம் கிடைச்சது சந்தோஷமாய் இருக்கு கமலா. கஷ்டம்தான் ஆனாலும் கடனவுடன வாங்கி கட்டி முடிச்சிடு காசு வரக் குடுக்கலாம்” என்றாள் கண்மணியக்கா.

“தொடங்கிறதுக்கு கையில காசில்லையக்கா. மணலும், கல்லும் ஏத்திப் பறிக்க அண்ணையிட்ட கேக்க வந்தனான். சீமெந்தும் வாங்கவேணும்.. நான் என்னக்கா செய்வன்”

சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். திரும்பக் கேட்க நா எழவில்லை.

“இரண்டு மூண்டு பேர் கேட்டவை. நாளைக்கு அவையளுக்கு ஏத்திப்பறிப்பன். உனக்கும் கொண்டு வந்து தாறன்” என்றார்.

“காசு வந்தவுடன எடுத்து தாறனண்ணை”

“கவலைப்படாமல் போ. அவர் தேவையான உதவிகளைச் செய்து தருவார்”

கண்மணியக்கா சொன்னது ஆறுதலைத் தந்தது.

அடுத்தநாள் மணல், கல் மட்டுமல்ல சீமெந்தையும் வாங்கித் தந்து ஆட்களையும் ஒழுங்கு செய்து தந்தார். வைப்பகத்தில் கணக்குத் தொடங்குவதற்கு கண்மணியக்கா உதவி செய்தாள். பணம் வரும் என்ற தைரியத்தில் வேலைக்குப் போகும் இடங்களிலும் பணம் கேட்டேன். வீடு கட்டி முடிக்க வேணுமே என்ற ஆதங்கத்தில் அலைந்து திரிந்தேன். அத்திவார வேலைகள் முடிந்ததும் முதல் பகுதிப் பணம் ரூபா ஐம்பதினாயிரம் என் கணக்கில் வந்தது. எடுத்து மூர்த்தியண்ணையிடம் கொடுத்தேன். வந்த காசை விட செலவு அதிகமாகிவிட்டது. சுவர் எழுப்ப திரும்பவும் அவரிடம் வாங்கினேன். ஒவ்வொரு முறையும் கட்டுவதற்குத் தரும் பணத்தை விட செலவு அதிகமாகயிருப்பதால் கடனும் ஏறிக் கொண்டு போனது. பொருட்களை வாங்கும்போதும் கடை கடையாய் ஏறி இறங்கி மலிவு பார்த்து வாங்கினேன். மரவேலைக்கும் ஓடு போடுவதுக்கும் முதலே இரண்டு லட்சம் தந்தார்கள். அதன் பெரும்பகுதி மரம் வாங்கவே போய்விட்டது. ஓடு வாங்க பணம் போதவில்லை. முயற்சி செய்தும் பணம் கிடைக்காததால் வீட்டு வேலைகள் இரண்டு மாதமாக நின்று விட்டது.

கண்மணியக்கா வீட்டுக்கு வரச்சொன்னாள். போனேன்.

“உன்னைப் பற்றி பிள்ளையளோட கதைச்சனான். எல்லாருமாய் சேர்ந்து ஒரு லட்சம் அனுப்பியிருக்கினம்” பணத்தைக் கையில் தந்த போது கண்கள் கசிந்தன.

“அண்ணையிட்ட ஒரு லட்சத்துக்கு மேல கடனக்கா. இதை எடுங்கோ”

“பிள்ளையள் உன்ர கையில குடுக்கச் சொன்னவையள். குறை வேலைகளை முடி. பிறகு கடனைத் தரலாம்” பணத்தை வாங்கிக் கொண்டேன்.

இருக்கும் பணத்தோடு ஓடு போடவும், வெளிப்பக்க யன்னல்களுக்கும், வாசல்கதவுக்கும் நிலை வைத்துக் கட்டவும்தான் முடிந்தது. கதவுகள் போடவும், சுவர் பூசி நிலம் போடவும் முடியவில்லை. வீட்டுவேலைகள் முழுவதையும் முடித்தபின் தருவதாகச் சொன்ன இறுதிப் பணம் ரூபா ஐம்பதினாயிரத்தை முதலே தரும்படி கச்சேரிக்கு நடையாய் நடந்து என் நிலைமையைச் சொல்லியும் தரவில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த என்னால் வேறு என்ன செய்யமுடியும். நிலத்துக்கு மண் போட்டு இறுக்கி சாணகத்தால் மெழுகி விட்டேன். வெளிப்பக்க ஜன்னல் நிலைக்கு பசளைப்பை வைத்து அடைத்தேன். தகரத்தால் கதவு போட்டு வீட்டுக்குள் வந்தோம்.

“வீட்டுக்குள்ள வந்திட்டீங்கள் இனி நான் நிம்மதியாய் போவன்” என்றாள் ஆச்சி.

ஆச்சியை இழந்த நாளையும் மறக்க முடியாது. ஐந்து வருடங்கள் என்னோடு உழைத்தவள் உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது சொன்ன வார்த்தைகள்…

“இனி பிழைக்கமாட்டன் பிள்ளை. இவ்வளவு நாளும் என்னை வடிவாய் பாத்தனி. நான் செத்தால் என்ர காரியம் செய்ய காசுக்கு கஷ்டப்படாத. சொந்தமில்லையெண்டு சொல்லிப் போட்டு நீ போ. அநாதைப் பிணம் எண்டு இங்கேயே அடக்கம் செய்வினம். எனக்கென்ன தெரியவா போகுது” என்றாள். என்னால் தாங்க முடியவில்லை.

“என்ன ஆச்சி சொல்லுறீங்கள். தாயாய் பிள்ளையாய் பழகிட்டு அநாதையா உங்களை விட்டிட்டுப் போவனே… பந்தம் பிடிக்க இரண்டு பேரப் பிள்ளையளை வைச்சுக் கொண்டு இப்பிடிச் சொல்லுறீங்களே” அழுது விட்டேன்.

கண்களில் நீர் வழிய என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மூச்சு நின்று ஆச்சியைக் கொண்டு வந்து விறாந்தையில் படுக்க வைத்த பின்தான் என்ன செய்யப் போகிறேன் என்று கலக்கமாய் இருந்தது. விஷயம் அறிந்ததும் ஊரே கூடி விட்டது. மரணம் எதிர்பார்த்து வருவதில்லை. திடீரென மரணம் நிகழ்ந்தால் நல்லபடி அடக்கம் செய்ய தங்களால் முடிந்த பண உதவி செய்வது எங்கள் ஊரின் வழக்கம். என் நிலைமை தெரிந்ததால் தாங்களாகவே முன்வந்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆச்சியின் இறுதிப் பயணம் எங்கள் வீட்டில் இருந்தே புறப்பட்டது மனதுக்கு அமைதியைத் தந்தது.

பிள்ளைகள் வளர வாழ்க்கைச் செலவுகளோடு படிப்புச் செலவுகளையும் சமாளிக்க முடியவில்லை. படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மேலதிக வகுப்புகளை ஒழுங்கு செய்து கொடுக்கவும் முடியவில்லை. வீட்டுக்கடனும் என்னை மிரட்டிக் கொண்டிருந்தது. மூர்த்தியண்ணையைத் தவிர மற்றவர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். என் கஷ்டங்களை கண்மணியக்காவிடம் சொல்லி ஆறினேன்.

அன்று வேலைக்குப் போன என்னை ஆர்வமாய் வரவேற்றாள்.

“கமலா, மகளுக்குத் தெரிஞ்ச ஒரு அன்ரி இங்க கஷ்டப்பட்ட நிறைய பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்திருக்கிறா. இப்ப ஒரு குடும்பத்திற்கு தொழில் செய்ய உதவி செய்யப் போறாவாம். மகள் நம்பர் தந்து அன்ரியோட உன்னைப் பற்றிக் கதைச்சனான். கோழிக்கூடு போட்டு குஞ்சுகள் வாங்கிறதுக்கும் காசு அனுப்புறாவாம். உன்ர கஷ்டங்களைச் சொல்லி நீயும் கதை”

கேட்டதும் அதிர்ந்து விட்டேன். தொழில் செய்ய பணம் கொடுத்து உதவி செய்வதைப் பற்றி அறிந்து எனக்கும் கிடைக்காதா என்று எத்தனை நாட்கள் ஏங்கியிருக்கிறேன்.

“உதவி கிடைச்சால் கஷ்டப்பட்டு உழைச்சு உங்கட கடனையும் கொஞ்சம் கொஞ்சமாய் தந்து முடிச்சிடுவனக்கா” என்றேன் சந்தோஷமாக.

கண்மணியக்கா போனில் நம்பரை அழுத்தி விட்டு என் காதில் வைக்க மனம் படபடத்தது. மறுபக்கம் குரல் கேட்டது.

“நான் தேவகி கதைக்கிறன் கமலா. கோழி வளர்க்க உதவி செய்யிறன் நீ எனக்கு நேர்மையாய் இருக்கவேணும். என்ன பிரச்சனை எண்டாலும் மனம் விட்டுக் கதைக்கவேணும். உன்ர பாங்க் நம்பரை அனுப்பு காசு ஒரு லட்சம் போட்டிட்டு இரண்டு நாளில எடுக்கிறன். முதல் கோழிக்கூட்டு வேலையைத் தொடங்கு” குரலின் மென்மை மனதை என்னவோ செய்தது. பிள்ளைகளைப் பற்றியும் அவர்களின் படிப்புகள் பற்றியும் விசாரித்தார்.

“கெட்டிக்காரப் பிள்ளையள். ரியூசனுக்கும் போய் படிக்கட்டும் நான் காசு அனுப்பிறன் ”

“இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டனம்மா” மனம் உருகி வார்த்தைகளாய் வெளிப்பட்டது.

பதினாறு அடி நீளமும் பத்து அடி அகலமும் உள்ள அறையாகக் கோழிக்கூடு போட்டு அதை இரண்டாகப் பிரித்து ஒரு நாள் குஞ்சு ஐம்பது வாங்கி ஒரு பக்கமும், உடனடியாக வருமானம் வரக்கூடியதாய் முட்டை இடுகிற ஐந்து கோழிகளையும் ஒரு சேவலையும் வாங்கி ஏற்கனவே என்னிடமிருந்த ஆறு கோழிகளையும் சேர்த்து மறுபக்கமும் விட்டேன். குஞ்சுகளுக்கு கொடுக்கும் உணவுகளையும் வாங்கினேன். என் ஆர்வம் பார்த்து ஆடு வளர்க்கவும் ரூபா எழுபத்தைந்தாயிரம் அனுப்பினார் தேவகியம்மா. கொட்டில் போட்டு கிடாயும் மறியும் வாங்கினேன். பிள்ளைகளும் எனக்கு உதவினார்கள். செலவழிக்கும் ஒவ்வொரு பணத்துக்கும் கணக்கு எழுதி அனுப்பினேன். நம்பித் தந்தவர்களுக்கு என் உழைப்பின் மூலம் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

வேறு வேலைகளுக்குப் போனாலும் ஆடு, கோழி வளர்ப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். தேவகியம்மாவுக்கு கோழிக்கூடு, ஆட்டுப்பட்டியின் படங்களை எடுத்து அனுப்பினேன். பார்த்து சந்தோஷப்பட்டார். எங்கள் படத்தையும் அனுப்பச் சொன்னதால் வீட்டுக்கு முன்னால் மூவரும் நின்று படம் எடுத்து அனுப்பினேன். அன்றே தேவகியம்மாவிடம் இருந்து போன் வந்தது.

“வீட்டுத்திட்டத்தில கட்டின வீடு எண்டு சொன்னாய். கதவு ஏன் தகரத்தில போட்டிருக்கு” கவனித்துக் கேட்டார்.

“முழு வேலையும் செய்து முடிக்க தந்த காசு காணாதம்மா. இப்பவே ஒண்டரை லட்சத்துக்கு மேல கடன். கூரையிருந்தால் போதும் எண்டு தகரத்தில கதவு போட்டிட்டு இருக்கிறம்”

“பொம்பிளைப் பிள்ளையளை வைச்சிருக்கிற நீ பாதுகாப்பாய் இருக்க வேண்டாமே. இன்னும் என்ன வேலை செய்ய இருக்கு” சொல்லத் தயங்கினேன். திரும்பக் கேட்டதால் சொன்னேன்.

“கல்வீட்டைக் கட்டிப்போட்டு நிலத்தை மெழுகிறியே காசு அனுப்பிறன். சீமெந்தைப் போட்டு கதவுகளையும் போட்டு குறை வேலையளை முடி. நீ உழைச்சு உன்ர கடனைக் குடு” சொன்னபடி செய்தார். வேலைகளை முடித்தேன். தேவகியம்மாவின் நினைவே மனம் முழுவதும் வியாபித்திருந்தது.

அன்று தொடங்கிய அவரின் அறிமுகம் இந்த ஐந்து வருடங்களாகத் தொடர்கிறது. என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய தேவகியம்மாவை நேரில் பார்த்ததில்லை. இரண்டு மூன்று தடவை தம்பி குடும்பத்தோடிருக்கும் தாயைப் பார்க்க முல்லைத்தீவுக்கு வந்திருந்தாலும் சந்திக்க முடியவில்லை. எங்களுக்காக கொண்டு வரும் உடுப்புகளையும் , பொருட்களையும் அனுப்பி வைப்பார். கோழி முட்டையால் நாளாந்தம் வரும் பணமும், முட்டையிட்டு ஓய்ந்த கோழிகளை மொத்தமாக விற்ற பணமும், ஆடுகளை விற்ற பணமும் என் கடனைக் கரைத்துக் கொண்டு வந்தது. கஷ்டத்தையே அனுபவித்துக் கொண்டிருந்த நிலைமாறி தேவகியம்மாவின் உதவியால் மெல்ல மெல்ல நிமிர்ந்து கொண்டிருக்கிறோம். இம்முறை வரும்போது எங்களிடமும் வருவதாகச் சொல்லியிருந்ததால் இன்று நேரில் பார்க்கப் போகிறேன் என்ற சந்தோஷத்தில் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த என்னை காரின் சத்தம் விழித்தெழ வைத்தது.

காரிலிருந்து குடும்பத்தோடு இறங்கியவர்களை வரவேற்றேன். தேவகியம்மா, ஐயா, ஓரே மகள் ஜானு. தேவகியம்மாவைத் தவிர மற்றவர்களோடு கதைத்துப் பழக்கமில்லை. அம்மாவின் குரலின் மென்மை முகத்திலும் தெரிந்தது. நேரில் பார்த்ததும் இரு கரங்களையும் எடுத்து கண்களில் ஒற்றிக் கொள்ள மனம் துடித்தது. விரும்புவார்களா… அடக்கிக் கொண்டேன். பிள்ளைகளிடம் சுகங்களையும் படிப்புகளையும் விசாரித்தார். சாந்தி எல்லோருக்கும் தேனீர் கொடுத்தாள்.

“யூனி அடுத்த வருசம்தானே தொடங்குது சாந்தி. கொம்பியூட்டர் கிளாசுக்கு போறியா. வேற என்ன படிக்கிறாய்”

“போறனம்மா. பின்னேரங்களில ஓ.எல், ஏ.எல் படிக்கிற பிள்ளைகளுக்கு மற்ஸும் சயன்சுயும் சொல்லிக் குடுக்கிறன்” சாந்தி சொன்னதைக் கேட்டு சந்தோஷப்பட்டார்.

“நீயும் நல்லாய் படிச்சு அக்கா மாதிரி யூனிக்குப் போகவேணும்” சின்னவளிடம் சொல்லிக் கொண்டே எழுந்து வீட்டின் ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்தார்.

“வீட்டை அழகாய் துப்பரவாய் வைச்சிருக்கிறாய். கோழிகளையும் ஆடுகளையும் பாக்கலாம் வாங்கோ” எல்லோரும் எழுந்து வந்தார்கள்.

அமைதியாகக் கூட்டுக்குள் இருந்து உணவைக் கொரித்துக் கொண்டிருந்த கோழிகள் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டதும் சிறகடித்து ஓடித் திரிந்தன. முட்டையிடும் பெட்டிகளுக்குள் சிலகோழிகள் இருந்தன. சிலவற்றில் முட்டைகள் இருந்தது.

“எத்தின கோழிகள் இருக்கு. ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் இடுகுது.” ஐயா கேட்டார்.

“நாற்பத்தைஞ்சு இருக்குதைய்யா. இருபத்தைஞ்சு முப்பது எண்டு முட்டைகள் இடுகுது. ஒவ்வொரு நாளும் பின்னேரங்களில திறந்து விட வாழைக்குக் கீழ உள்ள புல்லுகளைக் கொத்தித் தின்னும். பிறகு கலைச்சு விட கூட்டுக்குள்ள ஏறிடும்” என்றேன்.

சின்னவள் முட்டைகளைப் பார்த்துவிட்டு பிளாஸ்ரிக் வாளி கொண்டு வந்து எண்ணி எடுத்தாள். பதினைஞ்சு முட்டைகள். மறுபக்க கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுகளின் சத்தம் கேட்டுப் போனார்கள்.

“முப்பது குஞ்சுகள் விலைக்கு வாங்கி நானும் இரண்டுதரம் அடைக்கட்டி அதோட சேர்த்து ஐம்பத்திரண்டு குஞ்சுகள் இருக்கு. இதுகள் வளர்ந்து முட்டையிட அந்தக் கோழியள் முட்டையிட்டு ஓய்ஞ்சு போகும்.அப்பிடியே தொகையாய் விக்கலாம்” என்றேன்.

மணிச்சத்தத்தோடு தலையைச் சிலிப்பிக் கொண்டிருந்த ஆடுகளையும் பார்த்தார்கள்.

“ஒரு கிழமைக்கு முதல் இரண்டு கிடா இருபதாயிரத்துக்கும் இருபத்திரண்டாயிரத்துக்கும் வித்து கடன் குடுத்தனான் எல்லாம் உங்களாலதானம்மா” குரல் தழுதழுக்க கூறினேன்.

“நான் காசு மட்டும்தானே தந்தனான். கஷ்டப்பட்டு உழைச்சு இந்த நிலைமைக்கு வந்தது நீங்கள்தானே. பார் வீட்டைச் சுத்தி வாழை, தென்னை, மாமரம், தேசிமரம் எண்டு சோலையாய் வைச்சிருக்கிறாய். மரக்கறிகளும் வைச்சிருக்கிறாய். உன்ர உழைப்பையும், பிள்ளைகளின்ர படிப்பையும் பாக்க உண்மையிலேயே எனக்கு சந்தோஷமாய், திருப்தியாய் இருக்கு கமலா”

“எல்லாம் உங்கட கைராசியம்மா” மீண்டும் கைகளைத் தொட்டுப் பார்க்கும் ஆசை எழுந்தது.

வீட்டுக்குள் வந்தோம்.

“மணி இரண்டரையாகுது உங்களுக்காகச் சமைச்சனானம்மா…” தயங்கியபடி சொன்னேன்.

“சாப்பிடலாமே.. சாப்பிட்டிட்டு இருந்து கதைக்கலாம் வாங்கோ”

சகஜமாகப் பேசிச் சிரித்து விரும்பியதை எடுத்துப் போட்டுச் சாப்பிட்டதும் சமையலைப் பாராட்டியதும் சந்தோஷத்தையும் அவர்கள் மீதுள்ள மதிப்பையும் அதிகமாக்கியது.

ஐந்து மணிக்கு தேனீர் போடுவதற்காக எழுந்தேன். தேவகியம்மாவின் கையிலிருந்த போன் சிணுங்கியது. எடுத்து பார்த்துவிட்டு அணைத்தார். திரும்பவும் சிணுங்க போனோடு எழுந்து பின்பக்கம் போக நான் அவர்களுக்குத் தேனீர் போட குசினிக்குள் போனேன். யன்னலுக்கு வெளிப்புறமிருந்து தேவகியம்மாவின் குரல் கேட்டது.

“திரும்பத் திரும்ப என்னத்துக்கு அடிக்கிறாய். நான் ஏதாவது ஒழுங்கு செய்திட்டுத்தான் போவன். உன்ர அவசரத்துக்கு ஒண்டும் செய்யேலாது. இவ்வளவு நாளும் நீ செய்தது போதும் இனி நான் பார்க்கிறன். நீங்கள் இரண்டுபேரும் விரும்பினபடி போங்கோ”

யாரோ திரும்ப திரும்ப எதையோ வற்புறுத்தி தேவகியம்மாவை டென்ஷனாக்குவது புரிந்தது. தேனீரோடு போனபோது உள்ளே வந்தவரின் களையிழந்த முகத்தைப் பார்க்க முடியவில்லை. எவ்வளவு சந்தோஷமாய் இருந்தார். இவர்களுக்கு நிச்சயம் பணப் பிரச்சனையாய் இருக்காது வேறு என்னவாகயிருக்கும். மனம் நிலைகொள்ளாது தவித்தது.

தேனீர் குடித்ததும் போவதுக்கு அவசரப்பட்டார்கள். கேட்பது மரியாதையில்லை என்றாலும் கேட்காமல் இருக்க என்னால் முடியவில்லை.

“முகம் வாடிப்போயிருக்கு ஏதாவது பிரச்சனையாம்மா” துணிந்து கேட்டேன். மூவரும்

திகைத்துப் போய் பார்த்தார்கள். பதில் இல்லை. திரும்பத் திரும்பக் கேட்டேன். என் துணிச்சல் எனக்கே வியப்பாகயிருந்தது.

“லண்டனுக்குப் போய் முப்பது வருசம். அடிக்கடி தம்பியோட இருக்கிற அம்மாவைப் பாக்க வருவன். தம்பியின்ர பிள்ளையள் மூண்டு பேரும் இப்ப அவுஸ்ரேலியாவில இருக்கிறாங்கள். தாய் தகப்பனுக்கு நிரந்தரவிசாவுக்குப் போட்டு கிடைச்சிட்டுது. அம்மாவை இவ்வளவு நாளும் நான் பாத்தனான் இனி நீ பார் நாங்கள் பிள்ளையளோட போய் இருக்கப் போறம் எண்டு தம்பி சொல்லுறான். முந்தி என்னோட வந்து நிக்கிறவா இப்ப ஏலாமல் தடி ஊண்டி நடக்கிறவாவை லண்டனுக்கும் கூட்டிக்கொண்டு கோகேலாது. ஜானுவுக்கு கலியாணம் முடிஞ்சுது எண்டால் நான் வந்து அம்மாவோட இருப்பன். அதுவரைக்கும்..”

மனம் நொந்து சொல்வதைக் கேட்க மனம் பதைபதைத்தது. கவலைப்படுகிறார்களே என்று பதற சாந்தியின் குரல் குறுக்கிட்டது.

“அம்மம்மாவை இங்க கொண்டு வந்து விடுங்கோ. நாங்கள் கவனமாய் பாக்கிறம்”

அதிர்ந்து போய் சாந்தியைப் பார்த்தார் தேவகியம்மா.

“யோசிக்காமல் டக்கெண்டு சொல்லுறியேடா”

“எங்களால முடிஞ்சதைத்தானேம்மா நாங்க கேக்கலாம். என்ர உழைப்புக்கும் இந்த வீட்டுக்கும் எவ்வளவோ செய்திருக்கிறீங்கள். உங்கட அம்மாவுக்கு இல்லாத உரிமையா… சந்தோஷமாய் கொண்டு வந்து விடுங்கோம்மா” நான் பதில் சொன்னேன்.

எழுந்து அருகில் வந்தவர் என் இரு கைகளையும் எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.

“நான் எதிர்பாக்கவேயில்லை. இப்பிடிச் சொல்லுறீங்களே”

தேவகியம்மா சொன்னது காதில் விழுந்தாலும் என் பார்வை அவரின் கைகளில் இருந்தது. அவரின் ஸ்பரிஷத்தில் உடல் சிலிர்க்க நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தேன். முகத்தில் மலர்ந்த புன்னகையோடு நிம்மதியும் இழையோடியதை உணர்ந்தேன்.

இதைவிட வேறென்ன வேணும் எனக்கு….!

 

நிறைவு…

 

விமல் பரம்

 

நன்றி – ஜீவநதி சஞ்சிகை

 

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More