தாய்லாந்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சூதாட்டம்தாய்லாந்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சூதாட்டம்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஒரு மாதமாக நடைபெற்று வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தன. இந்தப் போட்டிகளுக்கான சூதாட்டப் போட்டிகளில் ஈடுபட்டதற்காக 5,064 பேரைக் கைது செய்துள்ளதாக தாய்லாந்து காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட இது மிகவும் அதிகம் என்று போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.கடந்த மாதம் 12ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து 4,679 போட்டியாளர்களுடன் 258 புக்கிகளும், 127 பந்தய சீட்டு விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அவர்கள் நாட்டுப் பணமதிப்பில் 2000 பாட்டும், இரண்டு ஆண்டுகள் முடிய சிறைத் தண்டனையும் கிடைக்கக்கூடும்.ஆனால் பெரும் தொகை சம்பந்தப்பட்ட குற்றங்கள் தவிர மற்றவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனை மட்டுமே அளிக்கப்படக்கூடும் என்று காவல்துறைத் தலைவர் சன்டவிட் ராம்சுத் தெரிவித்தார்.

இதுதவிர 2000க்கும் மேற்பட்ட கால்பந்து சூதாட்ட இணையதளங்கள் மூடப்பட்டன என்றும் அவர் கூறினார். கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளின்போது 3,800 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

தாய்லாந்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பை நடத்திவரும் ராணுவம் சமூக ஒழுங்கை மேம்படுத்தும்விதமாக அங்கு நடைபெற்றுவந்த பல சூதாட்டங்களை ஏற்கனவே தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்